Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அக்டோபர் 29 இல் முற்றுகையிடுவோம் - வைகோ பிரகடனம்

தென் தமிழ்நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் கூடங்குளம் அணு உலையை அகற்றக் கோரி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அக்டோபர் 29 இல் முற்றுகையிடுவோம்! வைகோ பிரகடனம் அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன;

அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது என்ற உண்மையை 1979-இல் அமெரிக்க நாட்டில் நடைபெற்ற மூன்றுகல் தீவு அணு உலை விபத்திலிருந்தும், 1986-இல் அன்றைய சோவியத் ரஷ்யாவின் செர்னோஃபில் அணு உலை விபத்தில் இருந்தும், அனைத்துக்கும் மேலாக கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் ஜப்பானின் புகுஷிமா அணு உலை கோர விபத்திலிருந்தும் உணர்ந்துகொண்ட உலகத்தின் பல நாடுகள் அணு உலைகளை மூடுவது என்றும், புதிதாக அணு உலைகளை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்து அறிவித்து விட்டன. 

ஜப்பான் நாட்டில் இயங்கி வந்த 56 அணு உலைகளில், 55 அணு உலைகள் மூடப்பட்டதோடு, மீதம் இருக்கின்ற உலையையும் மூடுவதாக ஜப்பான் அரசு அறிவித்து விட்டது. ஜப்பான் பிரதமர் இதுபற்றிக் கூறுகையில், இருட்டில் தவித்துத் துன்பப்படுவோமே தவிர, எங்கள் மக்களை அணு உலைக்கு சாகக் கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். 

அறிவியலிலும், தொழில் துறையிலும் உலகின் முதல் வரிசை நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபர் அஞ்சலா மிச்சல் 2022-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து விட்டார். பிரான்ஸ் நாட்டில், அணு உலைகள் மூடுவது குறித்து விரைவில் பொதுஜன வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. 

உலக நாடுகளுக்கு அணு உலைகளை விநியோகம் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 1979 மூன்றுகல் தீவு விபத்துக்குப் பிறகு, தங்கள் நாட்டில் ஒரு அணு உலைக் கூடத்தைக்கூட அமைக்கவில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 

கடுமையான மின்வெட்டு தமிழக மக்களைப் பாதித்துள்ள சூழலில் கூடங்குளம் அணு உலைக்கூடம் இயங்கினால், மின்வெட்டுக்குத் தீர்வு ஏற்படும் என்றும், தேவையான மின்சாரம் கிடைக்கும் என்றும், மோசடியான பித்தலாட்டப் பிரச்சாரத்தை மத்திய, மாநில அரசுகளும், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளும் செய்து வருகின்றன. 

இந்தியாவில் கூடங்குளத்தைச் சேர்க்காமல், மொத்தம் 21 அணு உலைகள் உள்ளன. இவற்றின் மொத்த மின்சார உற்பத்தி, இந்தியாவின் அனைத்து வழிகளிலும் கிடைக்கும் மின்சார உற்பத்தியில், மொத்தம் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக - 2.7 சதவிகிதம் மட்டும்தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை ஆகும். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூடங்குளம் அணு உலைக்கு வக்காலத்து வாங்கியவராக ஜெயலலிதா முதலில் அணு உலையை ஆதரித்து விட்டு, பின்னர் கடற்கரைப் பகுதி மக்களை ஏமாற்ற அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணு உலை செயல்படுவதற்குத் தடங்கலாக இருந்தார் என்று குற்றம் சாட்டுகிறார். 

அதுமட்டுமல்ல, கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள், தொடக்க காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்று அவரது அறியாமையின் காரணத்தினாலோ அல்லது போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்திலோ கூறிவருகிறார். 

1988-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் கூடங்குளம் பெயரைக் குறிப்பிடாமல், இந்திய நாட்டில் ஓர் அணு உலை அமைக்க சோவியத் ரஷ்யாவுடன் தனது அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி அறிவித்தபோது, அந்த அணு உலை தென் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் தான் நீங்கள் அமைக்கப் போகிறீர்கள். 

அந்தப் பகுதிவாழ் மக்கள், குறிப்பாக மீனவர்கள் இதனை முன்கூட்டி தெரிந்து கொண்டதால், எக்காரணத்தைக் கொண்டும் அங்கு அணு உலை அமைக்கக்கூடாது என்று இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை மனு அனுப்பியதோடு, அந்தப் பகுதியில் பல போராட்டங்களும் நடைபெறுகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது, பெரு விபத்து நேர்ந்து, 

எங்கள் மக்களும், எங்கள் சந்ததிகளும் அழிந்து போவார்கள் என்று நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசினேன். எனக்கும் இராஜீவ் காந்திக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் நவம்பர் 22-ஆம் தேதி, தினகரன் ஏடு இதனை முக்கியச் செய்தியாகப் பிரசுரித்தது. 

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கிறித்துவ மதத்தின் தூண்டுதலால் மீனவர்கள் போராடுகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் பணம் கோடி கோடியாகப் போராட்டக்காரர்களுக்கு வருகிறது என்றும், குறிப்பாக அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சியினரும்அபாண்டமான பழியைச் சுமத்துகிறார்கள். 

420 நாட்களாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தாய்மார்கள் இடிந்தகரையில் துளியளவும் வன்முறை இல்லாது நடத்தி வரும் அறப்போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி தந்த அறிக்கையில், ஆழிப்பேரலை தாக்கினாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும், அணு உலை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்றும், எனவே அணு உலைக்கு எதிர்ப்பு தேவையற்றது என்றும் அறிக்கை தந்தார். 

ஆனால், இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடற்கரை பகுதி மக்களின் கொந்தளிப்பையும், வீரம் நிறைந்த போராட்டத்தையும் கண்டு, மக்கள் அச்சம் தீரும் வரையில் அணு உலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று தனது முன்னைய நிலையை மாற்றிக் கொண்டு அறிவித்தார். 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், நிபுணர் குழுக்கள் தந்த அறிக்கைகள் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லி, அணு உலையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றார். 

மத்திய, மாநில அரசுகளின் நிபுணர் குழுக்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்து கருத்து கேட்கவில்லை. போராட்டக் குழுவினரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. 

ஆனால், தமிழக அரசின் காவல்துறை, அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை பிரயோகமும் செய்ததில் பலர் படுகாயமுற்றனர். மணப்பாட்டைச் சார்ந்த அந்தோணி ஜான் என்ற மீனவர் தமிழக காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அநியாயமான இந்தக் கொலையைச் செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைக் கமிஷனும் அமைக்கப்படவில்லை. 

அறவழியில் போராடிய இடிந்தகரை மக்களை மிரட்டுவதற்காக இந்திய அரசு விமானப்படையின் சிறிய ரக விமானங்கள் இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்துவதற்காக தாழ்வாகப் பறந்ததால், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர் கொல்லப்பட்டார். 

மத்திய அரசுதான் இந்தக் கொலைக்குக் காரணமாகும். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை. கூடங்குளத்திலும், வைராவிக் கிணற்றிலும் வாழுகிற மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். இங்கு தமிழகக் காவல்துறை மிருகத்தனமாக அடக்குமுறையை ஏவியது. பலர் காயமுற்றனர்; பலர் கைது செய்யப்பட்டனர். 

வைராவிக் கிணற்றில் இந்துக்கள் வழிபடும் பிள்ளையார் சிலையையும் காவல்துறையினர் உடைத்தனர். அந்தப் பகுதியில் உள்ள தாய்மார்கள் இதுகுறித்து குமுறலோடு அணு உலை கூடவே கூடாது என்று மனம் கொதித்துச் சொல்லுவது ஏடுகளிலும், ஊடகங்களிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டது. இவை அனைத்தையும் விட சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், தமிழகம் மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் இனக்கொலை செய்த சிங்கள அரசோடு, இந்தியா 2010-ஆம் ஆண்டு ஜூனில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு, இராமேஸ்வரம் - தலைமன்னார் கடலுக்கு அடியில், மின் கம்பிகள் பதிக்கும் வேலைகளை இந்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது. 

கூடங்குளம் அணு உலையை எதிர்க்கின்ற நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவ சமுதாயத்துக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நன்றிக்கடன்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்க கூடங்குளம் அணு உலையை இயக்க விடாமல் அகற்ற வேண்டியது தமிழக மக்களின் தலையாயக் கடமையாகும். 

அடுத்த கட்டத்தில் கல்பாக்கம் அணு உலையையும் மூட வேண்டியது அவசியமாகும். இலட்சக்கணக்கான கோடிகளை ஸ்பெக்ட்ரம் ஊழலிலும், கிரானைட் ஊழலிலும் கொள்ளை அடித்த ஊழல் திமிங்கலங்கள், கூடங்குளம் போராட்டத்தை எதிர்ப்பதையும், கொச்சைப்படுத்துவதையும் தமிழக மக்கள் நடுநிலையோடு எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். 


சட்டமன்றத்திற்கு வைர விழாவை முதலமைச்சர் நேரு விளையாட்டரங்கத்தில் நடத்த முற்பட்டுள்ள அக்டோபர் 29-இல் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, தமிழக சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், அவர்களுக்குத் தோள் கொடுக்கும் உணர்வுடைய அனைவரும் முற்றுகையிடும் போராட்டத்தை திட்டமிட்டவாறு நடத்தியே தீருவோம். 


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளையும், அணு உலை கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள அரசியல் இயக்கத்தினரையும், தமிழகத்தின் எதிர்கால நலனில் அக்கறையுள்ள அனைவரையும், ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து அமைதி வழியில் நடக்கப்போகும் இந்த அறப்போரில் பங்கேற்க தமிழகத்தின் ஊழியனாக இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறேன். 

‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 05.10.2012 
மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post