Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக கரையைக் கடக்கவுள்ள 'நீலம்' புயல் ~ பாம்பனில் 3 ம் எண் எச்சரிக்கை கூண்டு

சென்னையிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலுக்கு நீலம் (NILAM) என பெயரிடப்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி மையம் இந்தப் பெயரை சூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், புயலாக உருமாறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்பு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, பாம்பன், எண்ணுர், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது பெய்யும் கன மழை இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கன மழையாக தீவிரமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, நாகை, கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. புயல் உருவாவதையொட்டி கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் சின்னம் காரணமாக மணிக்கு எழுபது முதல் 90 கிலோமீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தகவல் மையம் திறப்பு :

புயல் மற்றும் வெள்ளச்சேதம் பற்றிய விவரங்களை அறிய, சென்னையில் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. அவசர உதவிகளுக்கு, 044-28447727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் புயல், மழை பற்றிய விவரங்களை அறிய, 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post