Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கொட்டித்தீர்க்கும் பேய் மழை - முல்லைத்தீவில் மீளக்குடியேற்றப்பட்ட 4000 குடும்பங்கள் இடம்பெயர்வு

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம், சிறியளவிலான சூறாவளியாக மாறி முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இலங்கையில் பரவலாக கடும் மழை கொட்டி வருகிறது. இதனால், முல்லைத்தீவில் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்ட 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 

நேற்றுப் பிற்பகல் 4 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்த சிறிய சூறாவளி முல்லைத்தீவு வழியாக இலங்கைக்குள் நுழைந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று தெரிவித்தது. 

இன்று அதிகாலை 2 மணியளவில் முல்லைத்தீவு பிரதேசத்தின் ஊடாக இந்த சிறிய சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியிருந்தது. 

இதனால், நேற்று இலங்கையின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்ததுடன், மன்னார், மட்டக்களப்பு, திருகாணமலை மற்றும் யாழ்ப்பாணத்தின் கடற் பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை கொட்டியது. 

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் கடும் காற்று வீசியதுடன் இப்பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

தொடர்ச்சியான மழை காரணமாக எழுவன்குளம் ஊடான மன்னார் – புத்தளம் வீதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. 

கலா ஓயா பெருக்கெடுத்ததை அடுத்து வீதியில் சுமார் மூன்றடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்வதால் இந்த வீதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் அநுராதபுரம், மதவாச்சி ஊடாக பயணம் செய்தன. 

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் ஆரம்பித்த கடும் மழை நேற்று முழு நாளும் தொடர்ந்து கொட்டியது. 

துளசிபுரம், கேணியடி, லவ்லேன் பள்ளத்தோட்டம், நெல்சன்புர, மட்டிக்கழி, உப்பாளம், கச்சக்கொடித்தீவு, சூரன்கல், ஆயிலியடி, வான் எல போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால், அவசரமாக மீளக்குடியமர்த்தப்பட்ட 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. 

இவர்களை பாடசாலைகளில் தற்காலிகமாகத் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார். 

ஒட்டுசுட்டான், நெடுங்கேணிப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் மீளக்குடியேற்றப்பட்ட,புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள மந்துவில், ஆனந்தபுரம், மல்லிகைத்தீவு போன்ற பகுதிகளில் தகரக் கூரைகளைக் கொண்டிருந்த தற்காலிக வீடுகளின் தகரங்களையும், கூடாரங்களையும் காற்று அள்ளிச்சென்றுள்ளது. 

இனதால் பல குடும்பங்கள் மழையினால் நனைந்து பெரும் சிரமங்களுக்கு உள்ளாக நேர்ந்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post