Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தர்மபுரி மாவட்டத்தில் கைதான 60 போலி மருத்துவர்கள் சிறையில் அடைப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் கைதான 60 போலி மருத்துவர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து அதை தயாரித்து கொடுத்தவரை பிடிக்க தனிப்படை போலீசார் புதுவை விரைந்து உள்ளனர்.

தர்மபுரி மாவட்ட கிராமங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் டிபார்ம், டி.எம்.எல்.டி. போன்றவை படித்து விட்டு போலி டாக்டர்கள் அதிக கிளினிக் நடத்தி அனுபவ அடிப்படையில் அலோபதி சிகிச்சை அளித்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவ்வப்போது புகார்களின் அடிப்படையில் போலீசார் போலி டாக்டர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

மேலும் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பலர் மரணம் அடைவதாகவும், தொடர்ந்து போலி டாக்டர்கள் கிளினிக்கை நடத்தி வருவதாகவும் வந்த தகவலையடுத்து தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து பென்னாகரம், தர்மபுரி, அரூர் சப்-டிவிசன்களில் போலீசார் நேற்று அதிரடி சோதனையில் இறங்கினர்.

அரூர் சப்-டிவிசன், மற்றும் பென்னாகரம் சப்-டிவிசன்களிலும் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு அதிரடியாக கிளினீக் பூட்டப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு பெண் போலி டாக்டரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பலர் டி.எம்.எல்.டி, ஆர்.ஐ.எம்., பார்மசி, ஆகிய படிப்புகளை படித்ததாகவும் அதன் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த சான்றிதழ்களை வாங்கி பார்த்தனர். அப்போது அதுவும் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் கேட்ட போது, இந்த சான்றிதழை புதுவையை சேர்ந்த ஒரு நபர் கொடுத்து இருப்பது தெரியவந்தது. இவர்களிடம் அதிக அளவில் பணம் வாங்கி கொண்டு கல்லூரியில் படிக்காமலேயே சான்றிதழை அவர் தனது பிரிண்டிங் பிரசில் அச்சிட்டு கொடுத்தது தெரியவந்தது.
[vuukle-powerbar-top]

Recent Post