Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2010-இல் கோவை பள்ளிக் குழந்தைகள் கொடூரக் கொலை வழக்கு: நவம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பு!

கொலை செய்யப்பட்ட சிறுவர்கள்!
கோவை ரங்கே கவுடர் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் ஜெயின். ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிகளின் செல்ல மகள் முஸ்கின் (வயது 10). மகன் ரித்திக் (7).

கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்டு வந்தனர். அவர்களை கடத்தி பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்த டிரைவர் மோகனகிருஷ்ணன் என்ற மோகன்ராஜ் தனது திட்டப்படி கால் டாக்சியில் அவர்களை கடத்திச் சென்றான்.

திட்டத்தை அரங்கேற்ற பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த நண்பன் மனோகரனையும் சேர்த்துக் கொண்டான். உடுமலையை அடுத்த தீபாலப்பட்டி பி.ஏ.பி. வாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர்கள் சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

எங்கே நாம் செய்த தவறு வெளியே தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முஸ்கின், ரித்திக்கை கால்வாயில் தள்ளி கொன்றனர். இந்த கொடூரங்களை செய்த மோகன்ராஜ், மனோ கரனை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.

கொலை நடந்தது எப்படி என்று விசாரிக்க 2010 நவம்பர் 9-ந்தேதி கோவையில் இருந்து வேனில் அழைத்து சென்றனர். வேன் செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றபோது போலீசை தாக்கிவிட்டு மோகன்ராஜ் தப்ப முயன்றான். அவனை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.

இதைத் தொடர்ந்து மனோகரன் மீதான வழக்கு விசாரணை 2011 ஜூன் மாதம் 23-ந் தேதி கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் வழக்கு கோவை மகளிர் கோட்டுக்கு மாற்றப்பட்டது.

வழக்கில் 121 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 47 சாட்சிகள் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டனர். 69 ஆவணங்களும், 38 சான்று பொருட்களும் ஒப்படைக்கப்பட்டன.எதிர் தரப்பில் 5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 2 ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தொடர்ந்து 3 நாட்கள் சாட்சியம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம் வழக்கு தொடர்பாக 155 கேள்வி கேட்டு பதிலை பதிவு செய்தார்.

கடந்த 15-ந்தேதி சிறப்பு அரசு தரப்பு வக்கீல் சங்கர நாராயணனும், 22-ந்தேதி எதிர்தரப்பில் வக்கீல் சர்மிளாவும் வாதாடினர்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று (29-ந்தேதி) தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட இருந்ததால் கோர்ட்டு வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மனோகரன் இன்று காலை 10 மணி அளவில் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 10.30 மணி அளவில் நீதிபதி சுப்பிரமணியம் கோர்ட்டுக்கு வந்தார். முதல் வழக்காக முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதி சுப்பிரமணியம் குற்றஞ்சாட்டப்பட்ட மனோகரனிடம், உன் மீது கூட்டு சதி, குழந்தைகளை கடத்துதல், கூட்டாக சேர்ந்து கற்பழித்தல், கொலை செய்தல், பிணையாக வைத்து பணம் பறிக்க கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உனக்கு வழங்கப்படவுள்ள தண்டனை குறித்து தெரியுமா? என்று கேட்டார்.

அதற்கு மனோகரன் தெரியாது என்றார். அதைத் தொடர்ந்து மனோகரனின் வக்கீல் ஷர்மிளாவிடம் நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு ஷர்மிளா இல்லை என்று பதிலளித்தார். இதைத் தொடர்ந்து வருகிற 1-ந்தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post