Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"வீரமற்ற விவேகம் கோழைத்தனம்- விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்": முத்துராமலிங்கத் தேவரை நினைவு கூறுவோம்!

முத்துராமலிங்கத் தேவருக்கு ஜெயலலிதா
அஞ்சலி செலுத்தும் காட்சி! (கோப்புப் படம்)
தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர். இவரது காலம் அக்டோபர் 30, 1908–அக்டோபர் 30, 1963 வரை. உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்ட உக்கிரபாண்டி தேவரின் மீது பார்வதியம்மாள் அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். பிள்ளை அவர்கள் தான் தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின் காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப் பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல் வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவருக்குச் சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் வெள்ளையரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட இவர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பசும்பொன்னின் பங்களிப்பு மிக முக்கியமானது. இவரின் சீரிய போராட்டத்தால், மேற்கண்ட சட்டம் திரும்பப் பெறப்பட்டது.

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போரத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். தேவர் அவர்கள்  TVS தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் வகித்திருக்கிறார்.

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் 'திராவிடர் கழகம்' மற்றும் அதன் வழி கட்சியான 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். 

"தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்"
"வீரமற்ற விவேகம் கோழைத்தனம் - விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்" போன்ற சிறந்த பொன்மொழிகளை உதிர்த்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அவரின் வரலாற்றை மீள்பதிவு செய்ததில் அலை செய்திகள் பெருமையடைகிறது. 
[vuukle-powerbar-top]

Recent Post