Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் திரையுலகம் ஈழத்திற்கு கடமைப்பட்டுள்ளது: 'தேன்கூடு' திரைப்பட விழாவில் காசி ஆனந்தன் பேச்சு!

Creative Commons License
'தேன்கூடு' திரைப்பட விழாவில் காசி ஆனந்தன் பேச்சு by ராஜ்தியாகி is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.
Permissions beyond the scope of this license may be available at rajtyagi@newsalai.com.
கலைப் போராளிகள்!
சில நேரங்களில் கலைஞன் தனது படைப்பினை ஆயுதமாக்க வேண்டியதும் மற்றும் பயிற்றுவித்தலின் கருவியாக மாற்ற வேண்டியதும் தேவையாகிறது 

முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைக்குப் பிறகு, கலைஞனாக இருக்கிற ஒரு தமிழன் தனது படைப்புகளில் எங்கேனும் ஓர் இடத்திலாவது அதை பதிவு செய்ய மறுத்தால், அது மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு துணை போவதாக அமைந்து விடும்.

மேலும்  ஈழத்தின் வரலாற்றையும், எதிர் காலத்தில் அதன் தேவையையும் உள்ளடக்கியதாக ஒரு திரைப்படம் வரவேண்டியது இந்நேரத்தில் அவசியமாகிறது. 

இயக்குனர் இகோர் இயக்கிருக்கும் "தேன்கூடு" திரைப்படம் இந்த இரண்டையும் திரைப்பட கலை மற்றும் ஆராய்ச்சியின் புரிதலின் எல்லைக்குட்பட்டு பதிவு செய்திருக்கிறது என நம்பலாம். இந்த திரைப்படத்தை பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்திருக்கிறார். 

தமிழ்த் திரையுலகம்  ஈழத்திற்கு நிறையவே கடமைப்பட்டிருக்கிறது என்று தமிழ் உணர்ச்சிப் புலவர் திரு.காசி ஆனந்தன் அவர்கள் அப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். அவர் பேசியதின் சாரம் உங்களுக்காக:

தலைவர் பிரபாகரன் அவர்கள் திரைப்படத்தின் ஊடாக மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார். அவர் சிறந்த போராட்ட திரைப்படங்களை அடிக்கடி பார்ப்பார். அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்து, அல்ஜீரிய விடுதலைப் போராளி அலி பற்றிய திரைப்படத்தை எனக்குக் காட்டினார். அவனொரு சிறந்த விடுதலைப் போராளி. 

அவனுடைய படையில் ஒரு பெண் தனது உடையில் வெடிகுண்டை சுமந்து சென்று பிரெஞ்சுப் படை முகாமில் நுழைந்து வெடிகுண்டாய் வெடித்து சிதறிய காட்சியை திரைப்படத்தில் தலைவர் அவர்கள் எனக்கு காட்டியபோது மெய்சிலிர்த்தேன். அதே போராட்ட யுக்தியை, தலைவர் அவர்கள் அவரது கரும்புலிகளுக்குப் பழக்கினார். 

அதே போன்று தான் உமர் முக்தர், லிபியாவின் போராட்டம், முசோலினியின் படையை எதிர்த்து நடத்திய போராட்டம் ஆகியவற்றை எனக்கு காட்டியிருக்கிறார். அதே மாதிரி, பிக்கோ என்கிற அறப்போராளி, அவன் ஒரு மருத்துவன். தென்னாப்பிரிக்க விடுதலைக்கு வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவன். அவனை வெள்ளையர் படை அடித்தே கொன்றது. அந்தப் படத்தையும் தலைவர் அவர்கள் எனக்கு காட்டியிருக்கிறார். எனக்கு என்றால், எனக்கு மட்டுமல்ல; விடுதலைப் புலிகளுக்கும் தான். புலிகள் பயிற்சி பெற வரும்போதெல்லாம் காடுகளில் இந்த படங்கள் அவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டன. 

ஆகவே, திரைப்படம் என்பது விடுதலைப் போரில் பெரிய பங்கு வகிக்கக் கூடியது. எழுச்சியை உண்டாக்கியிருக்கிறது. எப்படி கல்கியின் பொன்னியின் செல்வனையும், சாண்டில்யனின் கடல் புறாவையும் படித்தும், உலகப் போராளிகளின் வரலாற்றையும் படித்தும் தலைவர் அவர்கள் உணர்ச்சி பெற்றாரோ, அதே போல் தான் போராளிகள் ஏதாவது ஒரு வகையில் விடுதலை உணர்ச்சி பெறுகிறார்கள். சிங்களவனுடைய கொடுமை அவரை போராளியாக்கியது; தமிழர் விடுதலைக்கான தேவை அவரை உருவாக்கியது. எனவே, திரைப்படம் ஒரு வலிமையான, ஆற்றல் மிக்க ஊடகம்.  

மக்களின் நெஞ்சில் பாய்ந்து நெருப்பை ஊட்டக்கூடிய ஊடகம் திரைப்படம். அந்த ஊடகத்தை தலைவர் அவர்கள் ஈழ விடுதலைப் போரில் பயன்படுத்தினார். இப்போது இயக்குனர் இகோர் செய்யும் பணியும் அதேதான். முள்ளிவாய்க்கால் முடிவென்று கூறினார்கள்; இயக்குனர் இகோர் அதை தொடக்கம் என்று தனது திரைப்படத்தின் வாயிலாக காட்டியுள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன். அவருக்கு முன்னரே, புகழேந்தி தங்கராஜ் 'காற்றுக்கென்ன வேலி', 'உச்சிதனை முகர்ந்தால்' போன்ற சிறந்த திரைப்படங்களை எடுத்தார். 

தமிழ் திரையுலகம் தனி ஈழத்திற்கு தனது பங்களிப்பை தருவதற்கு கடமைப்பட்டிருக்கிறது என்றே நான் கூறுவேன். தமிழில் பேசும் படங்கள் எடுக்கத் தொடக்கி 75 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த காலக் கட்டத்தில் ஈழ மக்கள் தங்களுக்கென்று திரைப்படம் எதுவும் எடுத்ததில்லை. தமிழ்நாடு என்ன படம் எடுக்கிறதோ, அதையே ஈழ மக்கள் பார்த்தார்கள். ஈழ மக்கள் தமிழ் திரைப்படங்களைப் பார்ப்பதில் பெருவாரியான பணத்தை செலவழித்திருக்கிறார்கள். எனவே, தமிழ் திரையுலகம் ஈழ மக்களுக்கு நிறையவே கடமைப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இந்த விழாவில், திரைப் பாடலாசிரியர் தாமரை, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குனர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் திரை முன்னோட்டம் செல்ல:
http://www.youtube.com/watch?v=0Bu6KuWpGJQ

-ராஜ்தியாகி
[vuukle-powerbar-top]

Recent Post