Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் சென்னை அழகி மும்பையில் படுகொலை

மும்பை அந்தேரியில் வசித்து வந்த முன்னாள் சென்னை அழகி பட்டம் பெற்ற பெண் படுகொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிதுஸ்ரீ. சென்னையில் படித்து வளர்ந்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் அழகி பட்டம் வென்றார். இவரது தந்தை விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 

பிதுஸ்ரீ தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த என்ஜினீயர் கேதார் சதாசிவ் (வயது 26) என்பவரை பிதுஸ்ரீ, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கடந்த 18 மாதமாக மும்பை அந்தேரியில் கணவருடன் வசித்து வந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லை. 

இவரது கணவர் சதாசிவ் நரிமன்பாயிண்டில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் சதாசிவ் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். 

பிதுஸ்ரீ மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இந்த நிலையில், வேலை முடிந்து இரவு 7.30 மணிக்கு சதாசிவ் வீடு திரும்பினார். அப்போது வெகு நேரமாக அழைப்பு மணியை அடித்தும் பிதுஸ்ரீ கதவை திறக்கவில்லை. இதனையடுத்து சதாசிவ் தன்னிடம் இருந்த சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றார். 

அப்போது, அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. படுக்கையறையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிதுஸ்ரீ பிணமாக கிடந்தார். 

முகம், கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது உடலை கட்டிப்பிடித்து சதாசிவ் கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். 

தகவல் அறிந்த அந்தேரி டி.என்.நகர் காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

சம்பவத்தின் போது, பிதுஸ்ரீயின் வீட்டில் இருந்த எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. எனவே இந்த கொலை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நடக்கவில்லை. 

ஏதோ விரோதம் காரணமாக அவரை மர்மநபர்கள் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக சதாசிவ், அவரது வீட்டில் வேலை செய்யும் பெண், தோழிகள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கொலையாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முன்னாள் சென்னை அழகி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்தேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post