Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நெல்லை, கடலூர் மாவட்டங்களில் மழையால் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்த இசக்கி (வயது 48) - வேணி தம்பதியரின் மகன்கள் மணிகண்டன் என்ற மணி முத்து (24), இசக்கி முத்து (23). மணிகண்டன் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இசக்கி முத்து ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் சிங்கிகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையில், ரோடுகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. அந்த தண்ணீருக்குள், அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் ஒயர் ஒன்று அறுந்து, விழுந்து கிடந்தது. இதனால், தேங்கி கிடந்த தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

நேற்று காலையில் தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்த மணிகண்டன், அந்த தண்ணீரில் இறங்கினார். அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் மணிகண்டன் அலறி துடித்துக்கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்த அவருடைய தந்தை, தம்பி ஆகியோர் ஓடி வந்து மணிகண்டனை தள்ளி விட்டனர். இதில் அவர் தண்ணீருக்கு வெளியில் சென்று விழுந்தார். ஆனால், ஓடிவந்த வேகத்தில் நிலை தடுமாறிய இசக்கியும், இசக்கி முத்துவும் மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் விழுந்தனர். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

மின்சாரம் தாக்கி பலியான இசக்கி, இசக்கி முத்து குடும்பத்திற்கு தலா ரூ.11/2 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை இசக்கியின் மனைவி வேணியிடம், நாங்குநேரி தாசில்தார் வரதராஜன் வழங்கினார்.

நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, அறந்தாங்கி மெயின்ரோட்டில் மின்கம்பி அறுந்து கிடந்தது. இந்த கம்பியில், நேற்று காலை அந்த வழியாக நடந்து சென்ற விவசாயி கணேசன் (50), எதிர்பாராதவிதமாக மிதித்த விட்டார். இதனால் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

சின்னஇருசப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து ஜெயராமன் (66) பலத்த காயமடைந்தார். அவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 6-வது நாளாக மழை நீடித்தது. இதனால், பாகூர் சின்ன ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

சின்ன ஆராய்ச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மணிபாலன் (40) அந்த ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றார். அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவருடன் மீன் பிடிக்கச் சென்றவர்கள் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கடைசியில் அவரை பிணமாகத்தான் மீட்டனர்.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் சுவாமி கோவிலின் கமலாலய குளம் சிறப்பு மிக்கது. நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில், இந்த குளத்தின் வடகரை சுவர் 103 அடி நீளத்துக்கு இடிந்து குளத்திற்குள் விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
[vuukle-powerbar-top]

Recent Post