Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகருக்கு தண்ணீர்

வீராணம் ஏரியில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு வகை செய்ய "புதிய வீராணம் திட்டம்'' எனது தலைமையிலான அரசால் கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது அந்த தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 17-ந்தேதி முதல் காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டிருந்தேன்.

தற்போது, மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதன் காரணமாகவும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருவதன் காரணமாகவும், வீராணம் ஏரியில் 45.80 அடி தண்ணீர் உள்ளது.

எனவே, வீராணம் ஏரியில் இருந்து இன்று (நேற்று) முதல் சென்னை மாநகர குடிநீருக்காக நாள் ஒன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்மூலம், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post