Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக மக்களின் வாழ்வு மலர என் ஆட்சி எந்நாளும் துணை நிற்கும் ~ ஜெயலலிதா

முன்னோடி திட்டங்கள் தொடரும்: தமிழக மக்களின் வாழ்வு மலர என் ஆட்சி எந்நாளும் துணை நிற்கும் அ.தி.மு.க. ஆண்டு விழாவையொட்டி ஜெயலலிதா அறிக்கை

அ.தி.மு.க.வின் 41-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னோடி திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்வு மலரும். 

என்னுடைய ஆட்சி எந்நாளும் இதற்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. 40 ஆண்டுகள் நிறைவடைந்து, 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சியான தருணத்தில் இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அறநெறி சார்ந்த வாழ்வினை கைக்கொள்ள வேண்டும்; அடுத்தவர்களுக்கு பயன் தரும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்; 

இயன்ற பொழுதில் எல்லாம், இயன்ற வகைகளில் எல்லாம் எளியோர்க்கு உதவ வேண்டும்; ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று தன் வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே கொள்கை உறுதி கொண்டு வாழ்ந்த ஒப்பற்ற மனிதராம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அன்புச்செல்வம் தான் அ.தி.மு.க. இந்த இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏன் தோற்றுவித்தார் என்பதை ஒரு நிமிடம் எண்ணிப்பார்ப்போம். 

பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியாக, அவரை நம்பி தி.மு.க.விற்கு தந்த தேர்தல் வெற்றியை, ஆட்சிப் பொறுப்பை, ஒரு சுயநலக் கும்பலின் தலைவனாகிய ஒரு தீயசக்தி தன் மனம் போனபடி ஆயுதமாக்கிக் கொண்டு தமிழகத்தை தனது வேட்டைக் காடாக மாற்றியது. 

அண்ணா தோற்றுவித்த இயக்கத்தை குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது. ஆனால், தமிழக மக்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை தங்கள் இதயத்தில் ஏந்திக்கொண்டார்கள். புதிய இயக்கம் கண்டு தங்களை வழி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். 

அனைத்துத் தரப்பினரும் விடுத்த அன்பு வேண்டுகோளை ஏற்று 1972-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17-ம் நாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். 5 ஆண்டுகளில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை வென்றெடுத்தது. 

தன்னுடைய இயக்கமும், ஆட்சியும், மக்கள் இட்ட கட்டளையால் உருவான வரலாற்று நிகழ்வுகள் என்பதையும், இவற்றை கொண்டு தமிழக மக்களுக்கு எந்நாளும் பணியாற்ற வேண்டும் என்பதையும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாள் முழுவதும் மனதில் கொண்டிருந்தார். 

திராவிட இயக்க கொள்கைகளை காக்கவும், அண்ணாவின் அரசியல் பணிகளை தொடர்ந்திடவும், தமிழக மக்கள் மீது தான் கொண்ட பேரன்பை செயல் வடிவில் காட்டி அவர்களுக்கான பணிகளை ஆற்றிடவும், தனக்கு பின் இயக்கத்தை கட்டிக்காக்கவும் ஒருவர் வேண்டும் என்பதற்காக என்னிடம், இந்த இயக்கத்திற்கு தலைமையேற்கும் தியாக உணர்வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வளர்த்தார். 

தன்னுடைய தொண்டர்களைக் காப்பாற்ற நான் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்பது தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் வைத்த கோரிக்கையாக இருந்தது. அதற்கான சத்திய வாக்கினை என்னிடம் அவர் பெற்றார். 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல் நலம் குன்றி இருந்த காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவருடைய உதவியாலும், கருணையாலும் வாழ்வும், வளமும் பெற்றவர்கள், தீயசக்திக்கு ஆதரவாகவும், இந்த இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். என்னை அழித்திடத் துடித்தனர். கழக உடன்பிறப்புகளாகிய உங்களை புரட்சித் தலைவரின் காலத்திற்கு பிறகு கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய வாழ்வை கழகத்திற்காக, உங்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஒரு பெண்ணாக தமிழ் நாட்டில் அரசியல் வாழ்வு நடத்துவது என்பது எளிதான பணி அல்ல. இது நெருப்பாறு. 

இது வஞ்சகமும், சூழ்ச்சியும் கொண்டு நன்றி மறந்த பலரும் எழுதும் திரைக்கதை வசனங்கள் நிறைந்தது. இருப்பினும் இவைகளுக்கு அஞ்சி இந்த கடமையை கைவிட்டுவிடக் கூடாது என்பதை நான் பொது வாழ்வின் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டேன். 

புரட்சித் தலைவருக்கு நான் அளித்த வாக்குறுதியை என் மனசாட்சிக்கு சரியென்று தெரிந்தவரை இதுவரை நிறைவேற்றி வந்திருக்கிறேன் என்ற மனநிறைவும், நிம்மதியும் இந்த நாளில் எனக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் இந்திய அளவில் தலை நிமிர்ந்து முதலிடம் பெறும் நோக்கில் எண்ணற்ற திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன். தமிழ் நாட்டில் புரட்சித் தலைவரும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும் அமல்படுத்திய பல திட்டங்கள் இன்றைக்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

 "மக்கள் பணியே மகேசன் பணி'' என்ற பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையின்படி ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த சுயநல நோக்கமும் கிடையாது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன். 

எனவே தான் "உங்களுக்காக நான், உங்களால் நான்'' என்பதை என் வாழ்வின் தாரக மந்திரமாக கொண்டிருக்கிறேன். இந்த நாட்டையே சூறையாடும் வண்ணம் பல்வேறு துறைகளில் பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்தவர்களையும், தேச அரங்கில் தமிழகம் தலை குனியும் வகையில் வரலாறு கண்டிராத ஊழல்களில் ஈடுபட்டவர்களையும், முன்னேற்றப் பாதையில் தமிழகம் செல்ல முடியாத வகையில் முட்டுக்கட்டை போட்டவர்களையும் மக்கள் தேர்தல் களத்தில் புறக்கணித்தார்கள். 

மக்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை எல்லாம் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பிலும், பேராசையிலும் தீய சக்திகள் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கின்றன. தமிழக மக்கள் இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்த உண்மை. 

அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளையும், மக்கள் நலப்பணிகளையும் மனதில் கொண்டு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை தமிழக மக்கள் என்னிடம் வழங்கி இருக்கின்றார்கள். 

இன்னும் பல வெற்றிப் பரிசுகளை அ.தி.மு.க.வுக்கு வழங்க தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை நன்றியோடு உணர்கிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் தான் சத்துணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி உதவி, பல லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம், ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற நலத்திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம், கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புரட்சிகர திட்டங்கள், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை எல்லோரும் பெற்றிட உலக அதிசயமாய் விலையில்லா மடிக்கணினி என்று பல முன்னோடி திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. 

இது தொடரும்; இவற்றின் வழியாக தமிழக மக்களின் வாழ்வு மலரும்; அதற்கு என்னுடைய ஆட்சி எந்நாளும் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை இந்த நல்ல நாளில் உங்கள் வாயிலாக தமிழக மக்களுக்கு அளிக்கிறேன். இந்த நன்னாளில் ஈட்டிய வெற்றிகளின் எண்ணிக்கையையும், நாம் எதிர்கொண்டு சாய்த்திட்ட எதிரிகளின் கணக்கையும் கூட்டிப்பார்த்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், இந்த ஒப்பற்ற இயக்கத்தின் வளர்ச்சிக்காக தங்கள் வியர்வையையும், உதிரத்தையும் சிந்தி உழைத்திட்ட செயல்வீரர்களையும், வீராங்கனைகளையும், கழகத் தொண்டாற்றிய காலத்திலேயே தங்கள் விலை மதிப்பற்ற உயிரையும் நீத்திட்ட உத்தமத் தொண்டர்களின் உயரிய தியாகங்களையும் நன்றிப் பெருக்கோடு நினைவுகூர்கிறேன். 

எத்தகைய உயர்ந்த நோக்கங்களுக்காக அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டதோ; எத்தகைய எதிர்பார்ப்புகளோடு அ.தி.மு.க.வை தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரித்து வளர்த்து வருகின்றார்களோ; அவற்றிற்கு உண்மையாக விளங்கும் வகையில் தொடர்ந்து கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளே!. அ.தி.மு.க.வின் 41-வது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவிலும்; 

இவைகளுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டங்களிலும் ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கொடி கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி கழக கொடியினை ஏற்றி வைத்து, விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post