Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொடர் மின்வெட்டு ஏன்? காரணம் கூற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

தொடர் மின்வெட்டு ஏன் என்பது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை என்ஜினீயர் மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை சர்வேயர்காலனி பாண்டியன்நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், வக்கீல் எழுத்தர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

தினமும் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இரவு, பகல் பாராமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் அனைத்து வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இரவிலும் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் தூங்க முடிவதில்லை.

தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் தூக்கத்தை தொலைத்து நிம்மதி இழந்து தவிக்கின்றனர். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடுவது இல்லை.

எனவே மின்தடை குறித்து முன்கூட்டியே நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடவும், முன் அறிவிப்பு வெளியிடாமல் மின் தடை செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரபுராஜதுரை ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், "மின்தடையால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். புறநகர் பகுதிகளில் மின்தடையால் மக்கள் பாம்புக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

கீழ்கோர்ட்டுகளும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்'' என்றார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மின்வெட்டு குறித்து பொதுமக்களுக்கு நாளிதழ்கள் மூலம் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்காதது ஏன் என்பது குறித்தும், தமிழகத்தின் மின் நிலைமை குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை என்ஜினீயர் இன்று(புதன்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post