Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சமையல் எரிவாயு விலை உயர்வு, காப்பீட்டுத் துறை அந்நிய முதலீட்டு அனுமதி இரத்து செய்க - வைகோ


இன்றுவைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டாவது.  

சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் காப்பீட்டுத் துறை, ஓய்வுதிய நிதித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதியை இரத்து செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மக்கள் நலனுக்கு எதிரான, தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி மன்மோகன் சிங் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். ஏனெனில், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரால் முதல் கட்டமாக, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது, சமையல் எரிவாயு விற்பனையில் கட்டுப்பாடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல் போன்ற மோசமான மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இரண்டாவது கட்டமாக, தற்போது காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை உயர்த்துவது, ஓய்வூதிய நிதித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது போன்ற மக்கள் விரோத முடிவுகளை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. 

மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு 6 சிலிண்டர்கள்தான் என்று கட்டுப்பாட்டை விதித்த மத்திய அரசு, மேலும் ஒரு தாக்குதலாக சமையல் எரிவாயு விலையை ரூபாய் 11.42 உயர்த்தி இருக்கின்றது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 400 ஆக உயர்ந்து விடும். சமையல் எரிவாயு இல்லாமல் வாழ்க்கை நடத்தவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

மேலும், 6 சிலிண்டர்களுக்கு மேலே தேவைப்படுபவர்கள் சந்தை விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூபாய் 921/- செலுத்தியாக வேண்டும். மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் சமையல் எரிவாயு விநியோகத்தில் உள்ள கட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் மத்திய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும். 

காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 26 சதவிகிதத்திலிருந்து, 49 சதவிகிதமாக உயர்த்தும் அறிவிப்பும், ஓய்வூதிய நிதித் துறையில் 26 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவும் நாட்டின் பொருளாதார இறையாண்மையை அந்நிய நாட்டின் பெரும் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் நடவடிக்கை ஆகும். பொதுத்துறையான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், நாட்டின் 81 சதவிகித மக்களுக்கு காப்பீட்டுச் சேவையை வழங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் கூட (2011-12) எல்.ஐ.சி.யின் புதிய காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ரூபாய் 81,514 கோடி திரட்டப்பட்டு அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால், காப்பீட்டுத் துறையில் அந்நிய நிறுவனங்கள் நுழையுமானால், அவை திரட்டும் தொகை கொள்ளையடிக்கப்பட்டு, இந்நாட்டிற்கு வெளியே செல்லும் ஆபத்து உருவாகும். அதுபோலவே, ஓய்வூதியத்திற்காக மத்திய, மாநில அரசு ஊழியர்களிடம் பெறப்படும் தொகை, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டாலும், அந்நிய நிறுவனங்களின் பிடிக்குச் சென்றாலும், அதனால் ஓய்வூதிய நிதி தனியார்மயம் ஆக்கப்பட்டு, மக்கள் நலன்கள் காவு கொடுக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டதும், தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டதும் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது என்பதை மத்திய அரசு பாடமாக உணர வேண்டும். 

அமெரிக்காவின் பன்னாட்டு காப்பீட்டு நிறுவனமான ஏ ஐ ஜி (ஹ ஐ ழு) திவால் ஆனதையும் நாம் மறக்க முடியாது. இந்தியாவில் காப்பீட்டுத் துறை, பொதுத் துறையில் நீடிப்பதால் மட்டும்தான் கோடிக்கணக்கான மக்களின் சேமிப்புத் தொகைக்கு உத்தரவாதம் கிடைக்கும். அதுபோலவே, இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகையை அரசே நிர்வகிக்க வேண்டும். ஆகவே மத்திய அரசு, காப்பீட்டுத் துறை மற்றும் ஓய்வூதிய நிதித் துறையில், அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 ‘தாயகம்’ 
வைகோ 
சென்னை - 8 
பொதுச் செயலாளர், 07.10
 மறுமலர்ச்சி தி.மு.க
[vuukle-powerbar-top]

Recent Post