Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்ப் பல்கலைக் கழக நிலத்தைப் பறிக்காதே! உண்ணாப் போராட்டம்

சமச்சீர் கல்விக்குத் தடை, அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தை மூடுவது, தமிழ்ச் செம்மொழி ஆய்வு நிறுவனத்தை அலுவலகம் தராமல் விரட்டுவது என தொடர்ந்து, 

தமிழ் மொழி – இனத்திற்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க. தலைவியும், தமிழக முதல்வருமான செல்வி செயலலிதா, தற்போது தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அபகரித்து மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்க அளிக்க முடிவு செய்துள்ளார். 

தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிலத்தை, பல்கலைக் கழகத்திற்குத் தொடர்பில்லாத வெவ்வேறு துறைகளுக்கு ஒப்படைக்க முடிவு செய்திருப்பதற்கு தமிழறிஞர்களும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் கடும் எதிர்ப்புகள் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தின. 

இந்நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் என வலியுறுத்தி மக்கள் திரள் இயக்கங்களை நடத்துவதற்காக தமிழறிஞர்கள் முன் முயற்சியில், தஞ்சையில் 25.03.2012 அன்று பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ‘தமிழ்ப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாவரம் சி.முருகேசன், அன்றில் பதிப்பக உரிமையாளர் திரு. பா.இறையெழிலன் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இவ்வமைப்பின் சார்பில், கடந்த 15.06.2012 அன்று தஞ்சையில், ‘வேண்டுகோள் விளக்கப் பொதுக்கூட்டம்’ நடைபெற்றது. அதில், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 

இந்நிலையில், வரும் 15.10.2012 அன்று சென்னை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், காலை 8.00 முதல் மாலை 6.00 மணி வரை உண்ணாப் போராட்டம் நடைபெறுகின்றது. தமிழறிஞரும், திருவள்ளுவர் தவச்சாலையின் நிறுவுநருமான முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நிகழ்வுக்குத் தலைமையேற்கிறார். 

சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். உலகத் தமிழ்க் கழகம் வழக்குரைஞர் சு.கலைச்செல்வன் வரவேற்புரையாற்றுகிறார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, நடுவண் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு தொடக்கவுரையாற்றுகிறார். 

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுநர் மருத்துவர் ச.இராமதாசு உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றுகிறார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் திரு. பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தோழர் து.இரவிக்குமார், முனைவர் மா.நன்னன், புலவர் இறைக்குருவனார்(தென்மொழி அவையம்), தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் திரு. த.வெள்ளையன், தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், முனைவர் கு.திருமாறன் (தமிழியக்கம்), புலவர் கி.த.பச்சையப்பனார் (மேனாள் தலைவர், தமிழகத் தமிழாசிரியர் கழகம்), முனைவர் கு.முருகேசன் (மேனாள் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக் கழகம்), இயக்குநர் புகழேந்தி தங்கராசு, வழக்குரைஞர் சா.இரசினிகாந்து (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி), மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்சு கசேந்திர பாபு ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். 

நிறைவாக தமிழ்ப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கம் அன்றில் பா.இறையெழிலன் நன்றியுரையாற்றுகிறார். இப்போராட்டத்தில், திரளான தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்ப் பல்கலைக்கழப் பாதுகாப்பு இயக்கமும், தமிழ் வளர்ச்சிப் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post