Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்களின் வரலாறு, வாழ்வியல் மற்றும் உளவியல் - சிறப்புக் கட்டுரை

அலை செய்திகள் வாசகர்களே நமது  குழுமத்தில் இருந்து தனிநபராக இடிந்தகரைக்கு சென்று அங்கு நடைபெற்ற கடல் முற்றுகை போராட்டத்தை பதிவு செய்து அலை இணையத்தில் உடனுக்குடன் செய்திகளை  அனுப்பியது  உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். நான் அங்கு சென்று வந்த   அனுபவத்தையும், பின்பு இடிந்தகரை மக்களோடு பழகிய அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து  கொள்ளவே இந்த கட்டுரை.

கடந்த 6 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை தொடருந்தில் இடிந்தகரை பயணத்தினை தொடங்கினோம். நெல்லையை அடைந்த பின் அங்கிருந்து பேருந்தில் வள்ளியூர் சென்று  அங்கிருந்து கூடங்குளம் பேருந்தில் ஏறி கூடங்குளம் வந்தடைந்தேன்.

செல்லும் வழியெங்கும் காற்றலைகள் சுற்றிய வண்ணம் இருந்தது. சுமார் 5000 காற்றலைகள் கண்ணுக்கு எட்டியதூரம் இருந்தது. பேருந்து செல்லும் வழி ஒற்றையடி பாதையாகத்தான் இருந்தது, அவ்வழியாகவே கூடங்குளத்தை சென்றது பேருந்து.

அங்கிருந்து இடிந்தகரைக்கு எந்த வாகன போக்குவரத்தும் இருக்கவில்லை காரணம் அடுத்தநாள் போராட்டம் இருக்கும் காரணத்தால் யாரும் வரவில்லை, பின்னர் இடிந்தகரையில் இருக்கும் ஒரு நண்பரின் உதவிகொண்டு முச்சக்கர வாகனத்தில் ஏறி வைராவி வரைக்கும் வந்தடைந்தேன், அதற்கு பின் செல்லமுடியாத நிலை, காரணம் பாதை நான்கு அடி ஆழமாக தோண்டப்பட்டு இருந்தது.

அங்கிருந்து சிறிது தூரம் நடந்தே சென்றேன் செல்லும் வழியில் யாரும் இல்லை சிறிது பயமாகவே இருந்தது, காரணம் இன்னும் தெரியவில்லை, பின்னர் அதே நண்பரின் உதவிகொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி இடிந்தகரை என்னும் அழகிய கிராமத்திற்கு வந்தடைந்தேன்.




இடிந்தகரையின் அமைவிடம் மற்றும் வரலாறு

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் அமையப் பெற்ற அழகிய கடற்கரை கிராமம் இடிந்தகரை. 12000க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெரிய நெய்தல் நில கிராமம்.

சுமார் 600 வருடப் பாரம்பரியம்மிக்க ஊர். இது விடிந்தகரை என்றும் அழைக்கப்படுகிறது. 16ம் நூற்றாண்டு இயேசு சபை துறவிகளின் கடிதங்களில் இடிஞ்ச கல்லு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரின் வடக்கு எல்லையாக அருவியாறு ஓடையும்,மேற்கு எல்லையாக செங்கழனி ஓடையும்,கிழக்கு எல்லையாக நச்சி ஓடையும் ,தெற்கு எல்லையாக மன்னர் வளைகுடாவும் உள்ளன. ஊரின் கிழக்கே அருவியாறு பாய்கிறது. இவ்வாறும் கடலும் சேரும் இடம் அருவிக்கரை எனப்படுகிறது.

சுமார் 40வருடங்களுக்கு முன்பு வரை இப்பகுதி புன்னை, தில்லை, தாழை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இதை அடுத்த கடற்பகுதி தீர்த்தக்கரை எனப்படுகிறது. ஊரின் கிழக்குக்கரைப் பகுதி சரளைப்பாறைகள் நிறைந்த மேட்டுப்பகுதி. அலைகளின் மோதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இவை அடிக்கடி கடற்கரையில் இடிந்து விழுந்து இடிந்தகரை என்று பெயர் பெற்றது.

முருகப்பெருமான் குமரியிலிருந்து வள்ளியம்மையை தூக்கிக்கொண்டு செந்தூர் செல்லும் வழியில் இப்பகுதியில் விடியும் பொழுது வந்ததால் விடிந்தகரை என்றும் பெயர்பெற்றது. 

ஊரின் பெரும்பான்மை மக்கள் மற்ற நெய்தல் கிராமங்களான மணப்பாடு, பெரியதாழை ,கூடுதாழை ,உவரி,கூத்தங்குளி ,விசயதாழை, பஞ்சல்,பெருமணல்,கூட்டப்புளி மற்றும் கோவளம் ஆகிய ஊர்களில் இருந்தும் நெய்தல் அல்லாத கிராமங்களான கும்பிகுளம், எந்த ஊர் என்று கண்டுபிடிக்க இயலாத வடக்கில் உள்ள ஊர் மற்றும் கொசக்குடி ஆகிய ஊர்களிலிருந்தும் புலம் பெயர்ந்ததாக கருதப்படுகிறது. இவர்களின் குடும்பப்பெயர்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன.

புலம் பெயரைக் காரணம் இப்பகுதியின் மீன்வளம் மற்றும் பாதுகாப்பான ஊர் அமைப்பு.இடிந்தகரை இதுவரை புயலினால் கடுமையாக தாக்கப் பட்டதில்லை. அருவிக்கரைப் பகுதி முன்னர் ஆமைகளின் இனப்பெருக்க புகலிடம். ஊரின் கிழக்கே உள்ள கொடுவாய் முனை பகுதி சிறுமீன்களின் புகலிடம். ஊரின் மேற்கே யானைக்கல் பகுதி பவளப்பாறைகள் மற்றும் கல் இறால் மீன்களின் புகலிடம். 

உவரிக்கு அடுத்தபடியாக இறால் மீன்கள் கடலில் வாழ ஏற்ற சிறப்பான சகதி பகுதியான மடை அமைந்துள்ள ஊர். வருடம் முழுக்க மீன்கள் இவ்வூரில் பிடிக்கபடுகின்றன. கடலுக்கு செல்லாத சமயங்களில் மீனவர்கள் கரைகளில் குத்துவலை , கரைமடி, மற்றும் தூண்டில் மூலம் மீன் பிடிக்கின்றனர். 

அருவி ஆறு தற்போது ஒரு குட்டையாக மாறிவிட்டதால் , தண்ணீர் உப்பாகி போனது. இங்கும் மக்கள் சென்று ஆற்று மீன்களை பிடிக்கின்றனர். மக்கள் கடின உழைப்பாளிகள். கல்வி அறிவு பெருகியதாலும் , மீன் வளம் கடலில் குன்றியதாலும் மீன் பிடி படகுகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. 2004 சுனாமி தாக்குதலால் இவ்வூர் கடற்கரையின் எழில் தோற்றம் மறைந்து மாறுதலாகி காட்சி அளிக்கிறது. 

ஊரின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு கடற்கரை வழியாக சுனாமிக்கு முன்பு எளிதாக வந்துவிடலாம்.தற்போது அது முடியாத காரியம். பிடிக்கப்படும் மீன்கள் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள மீன்வாடியில் விற்கப்படுகின்றன.இம்மீன்கள் தமிழ்நாட்டின் பிறபகுதிகளுக்கும் ,கேரளாவுக்கும் செல்கின்றன. 

இவ்வூர் மக்கள் பேசும் தமிழில் மலையாளம், சிங்களம் மற்றும் போர்ச்சுகீசிய வார்த்தைகள் கலந்துள்ளன. இவர்கள் பேசும் தமிழ் மற்ற சமூகத்தினர் பேசும் தமிழில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது. அரிசி மற்றும் மீன் பிரதான உணவு.சமையலில் தேங்காய் முக்கிய இடம் பிடித்துள்ளது.அனைத்து வீடுகளிலும் தொலைகாட்சி மற்றும் கை பேசி வசதி உள்ளது. வசதிகள் பெருகியதால் ,நல்ல உணவு ,உடையோடு ஓரளவு தரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். 

ஓலை குடிசைகள் மிகவும் குறைந்து விட்டன.ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.பெண்கள் அதிகமாக கல்வி கற்கிறார்கள். தங்களுக்குள்ளே திருமணம் செய்வதோடு கூட்டப்புளி,உவரி மற்றும் கூத்தங்குளி ஊர்களோடு அதிக திருமண உறவு கொள்கிறார்கள். 

முற்காலத்தில் இம்மக்கள் வருணனையும், குமரி , மீனாக்ஷி அம்மை போன்ற பெண் தெய்வங்களையும் வணங்கினர். தற்போது ஊரின் பெரும்பான்மையினர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். இந்துக்களும் ,பிரிவினை சபை கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர்.

"முத்துக்குளித்துறையில் இருந்து அத்தனை போர்ச்சுகீசியத் துறவிகளும் சென்றுவிட்டாலும் ஒரு பரதவன் கூட தான் கொண்ட விசுவாசத்திலிருந்து மாற மாட்டான்" என்று 16ம் நூற்றாண்டு இயேசு சபை துறவி ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகளார் கூறியதை 20ம் நூற்றாண்டில் இவ்வூர் மக்கள் பொய்த்துப் போகச்செய்தனர்.

1965-66 காலகட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் கடற்கரைச் சட்டங்களான அஞ்சுமீன் குத்தகை (விற்கும் மீன் விலையில் ஐந்தில் ஒரு பகுதி திருச்சபைக்கு),துவி மற்றும் பள்ளை(சுறா, உழுவை போன்ற பெரிய மீன்களில் இருந்து பெறப்படும் விலை அதிகமான பகுதிகள்) கோவிலுக்கு சொந்தம் மற்றும் கோவில் வரிகளால் துன்புற்ற ஏழை மீனவர்கள் திருச்சபைக்கு எதிராக கலகத்தில் இறங்கினர். 

இடிந்தகரை ஊர் மீனவர்கள் , மெனக் கெடர்கள் (மீன்பிடிக்க செல்லாமல் பிற தொழில்கள் செய்த மீனவர்கள்) என இரண்டாகப் பிரிந்தது.திருச்சபை மெனக் கெடர்களை ஆதரித்தது. ஞாயிறு திருப்பலிக்கு வந்த மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். திருச்சபை காவல்துறை துணையோடு மீனவர்களை அடக்க முற்சித்தது.மீனவர்கள் ஊரை விட்டு வெளியேறினர்.

மீதமிருந்த குடும்ப பெண்கள் தாக்கப்பட்டனர்.இதனால் துயருற்ற மீனவர்கள் RSS அமைப்பின் உதவியை நாடினர். இவ்வமைப்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெற உதவியது.

இந்த உறவின் காரணமாக பெரும்பாலான இடிந்தகரை மீனவர்கள் இந்து மதத்தை தழுவி , கத்தோலிக்க திருச்சபைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அதிர்ந்துபோன திருச்சபை அனைத்து சுரண்டல் சட்டங்களையும் திரும்ப பெறவே , எல்லா நெய்தல் கிராமங்களுக்கும் விடிவை உண்டாக்கி இடிந்தகரை ,விடிவை உண்டாக்கிய கரையானது.

ஆத்திரம் குறையாத இடிந்தகரை மக்கள் தேவாலயத்திற்கு நேர் எதிர் பிள்ளையார் கோவில் ஒன்றை அமைத்தனர். இதில் பங்கு பெற சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்,கோல்வால்க்கர், வாஜ்பேயி,அத்வானி,குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் , கே.பி.சுந்தராம்பாள்,சீர்காழி கோவிந்தராஜன் , உமாபாரதி போன்றோர் இடிந்தகரை வந்தனர்.

காலப்போக்கில் இந்துக்கள் பல்வேறு புறக்காரணங்களால் (கல்வி மற்றும் திருமணம் போன்றவை) மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும், இன்றும் ஊரின் கிழக்கு பகுதியில் இந்து மதம் உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறான மத மாற்றங்களால்,ஒரே வீட்டில் இரு மதங்களும் உள்ளன. 

இந்து சமயம் தன்னோடு ஒரு பீடி தொழிற்சாலையையும் கொண்டு வந்தது.இது ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. சிலர் கருவாடு வியாபாரம் செய்கிறார்கள். தலைசுமையாக மீன் விற்ற பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. ஊரில் தற்போது 1 பெரிய தேவாலயமும், 5 சிறு தேவாலயங்களும், 2 இந்து கோவில்களும், ஏராளமான குருசடிகளும் உள்ளன. எல்லா கிறித்தவ ,இந்து பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன 1மேல்நிலைப்பள்ளியும் , 2 தொடக்க பள்ளிகளும் உள்ளன.

இவற்றில் சிறுமியர்க்கான தொடக்கபள்ளியே, இடிந்தகரையின் முதல் தேவாலயம். கடல் ஆலய பரப்பை நெருங்கியதால், தற்போதுள்ள இடத்தில் பெரிய தேவாலயம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மிக அழகிய ஆலயமும் , அதன் தேரும் நெய்தல் நில மக்களிடையே மிகப்புகழ் பெற்றவை.

இத்தனை ஆண்டுகளும் மக்கள் மகிழ்ச்சியாக,நிம்மதியாக இடிந்தகரையில் வாழ்ந்து வந்தனர், கூடங்குளம் அணுமின்நிலையம் , இடிந்தகரையின் மேற்கு பகுதியில் அமைகிறது என்ற செய்தி அவர்கள் காதில் பேரிடியாய் விழும் வரை.

இடிந்தகரை பற்றிய மேலதிக தகவல்களை இடிந்தகரையை சேர்ந்த  பிரான்சிஸ் சேவியர் வாசன் என்பவரின் கட்டுரையில் இருந்து பெறப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இடிந்தகரை மக்கள்

இடிந்தகரை மக்களை நான் சந்தித்த வேளை என்னை சற்றே பின்தள்ளியே பார்த்தார்கள், காரணம் இவன் நமக்கு உதவ வந்தானா இல்லை எம்மை மிதிக்க வந்தானா என்று அது எல்லோர் மனதிலும் எழும் சந்தேகம்தான்.

நான் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் தோழரோடுதான் பந்தலில் நுழைந்தேன், அப்படி இருந்தும் அம் மக்களில் அதை என்னால் உணர முடிந்தது. பின்னர் அவர்களிடம் நான் சென்று பேச ஆரம்பித்தேன் அதன் பின்னர் என்னை அவர்களின் உறவினர் போல் நடத்த ஆரம்பித்தார்கள்.

பின்னர் நான் அங்கு ஒரு அலை செய்திகளின் நிருபராக இருக்கவே இல்லை. நானும் இடிந்தகரை மகனாகவே இருந்தேன். அவர்கள் விடும் கண்ணீரும் பாசமும் என்னை ஒரு கனம் பதற வைத்தது.

பின்னர் நான் என் நீண்ட நாள் நண்பனின் வீட்டிலேயே தங்கியிருந்தேன், அவர்கள் என்னை தங்களின் வீட்டு பிள்ளை போலவே என்னை பார்த்தார்கள், ஒரு பாசம் மிகுந்த குடும்பம் மற்றும் ஓர் அழகிய குடும்பம், எனக்கு குறை எதுவுமே இருக்கவில்லை, என் தங்கள் மகனாக தத்தெடுத்து விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள். 

எத்நேரமும் நீ எங்கள் வீட்டு பிள்ளை என்று கூறியே உணவு பரிமாறுவதில் இருந்து சகல விடையங்களிலும் இருந்தது.

அதாவது கூறுவார்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள், அந்தவகையில் அந்த குடும்பம் மற்றும் குடும்ப அங்கத்தவர்களை பார்க்கும் போது இடிந்தகரை மக்களுமே இவ்வாறு ஒரு பாசப்பிணைப்பினை உண்டு பண்ணும் அளவிற்கு பாசக்காரர்கள் என்பதை என்னால் உணர முடிந்தது.




இடிந்தகரை மக்களின் உணவு முறை

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவுப்பழக்கம் இருக்கும் அந்தவகையில் இடிந்தகரையில் கடல் சார் உணவுகள் அதிகமாக சமைக்கப்படுகிறது.

நானும் அவ்வாறான உணவுகளையே உண்டேன் அனால் குறைவாக காரணம் அவர்கள் கடந்த இரு மாதங்களாக கடலுக்கு செல்லததே ஆகும், இவர்கள் அதிகமாக மீன், கருவாடு, கணவாய், நண்டு என கடல் உணவுகளையே உண்கின்றார்கள்.

அருமையான சுவையாக இருந்தது, உணவுகளை சமைக்கும் முறையில் இலங்கையினை ஒத்தது போல் இருந்தது. அதிகமாக சாதத்தினையே தங்களின் வாழ்வாதார உணவாக உண்கின்றார்கள்.

மீண்டும் அந்த உணவுகள் நமக்கு  கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு திரும்பினேன்.


இவ்வாறு போராட்டத்தில் கலந்துகொண்டு படங்கள் காணொளிகள் மற்றும் பேட்டிகள் என அனைத்தையும் சேகரித்தேன், பின் மக்களோடு மக்களாக இருந்து அவர்களிடமே இடிந்தகரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொண்டேன்.

இப்படிப்பட்ட மண்ணையும் மக்களையும் அழிக்க மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போடுவது மிகவும் மனவேதனையினை அள்ளித்தெளிக்கிறது. இடிந்தகரை மக்களின் அன்புக்கும் பண்புக்கும் அவர்களின் இறை நம்பிக்கைக்கும் கூடங்குளம் அணுஉலை மூடப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இடிந்தகரை செல்ல மீண்டுமோர் சந்தர்ப்பம் கிடைக்க காத்திருக்கும் உங்கள் நண்பன் நெடுவாழி.

இடிந்தகரை மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
[vuukle-powerbar-top]

Recent Post