Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியப் பாதுகாப்பு அமைச்சருடன் கோத்தாபய சந்திப்பு – இராணுவ உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சு

இலங்கைப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் இருந்து வருகின்ற போதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளன.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் அழைப்பின் பேரில், புதுடெல்லி வந்துள்ள இலங்கை பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்ரனியை சந்தித்ததாக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மாவையும் சந்தித்த கோத்தாபய ராஜபக்ச, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு எந்தவொரு இராணுவப் பயிற்சியையும் இந்தியா வழங்கக் கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் இருந்தாலும், இலங்கையுடன் தொடர்ந்து இராணுவ உறவுகளைப் பேணவும், இலங்கை ஆயுதப்படைகளுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.

எனினும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, தென்மாநிலங்களுக்கு வெளியே, கூட்டுப்பயிற்சிகளை வைத்துக் கொள்வதற்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிடுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post