Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை உயர்நீதிமன்றம்: மாவையின் மனுவை ஏற்றது, அரசின் நிலைப்பாட்டை நிராகரித்தது

இன்னமும் உருவாக்கப்படாத வடக்கு மாகாணசபையின் சார்பில் திவிநெகும சட்டமூலத்துக்கு, அனுமதி அளிக்க மாகாண ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை உயர்நீதிமன்றத்தின் எல்லா நீதியரசர்களையும் கொண்ட முழு அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற மாவை சேனாதிராசாவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய இந்த வழக்கு வரும் 22ம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதியை, இன்னும் அமைக்கப்படாதுள்ள வடக்கு மாகாணசபையின் சம்மதமாக கருத முடியாது என்பதால், திவிநெகும சட்டமூலத்துக்கு அவர் அளித்த அனுமதியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த விவகாரம் அரசியலமைப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினை என்பதால் அதனை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது. அதற்கு அரசதரப்பு சட்டவாளர் எதிர்ப்புத் தெரிவித்தார். 

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டிய பகுதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் தெளிவாகக் கூறாதபடியால், விசாரணையை நடத்தும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்று அவர் வாதிட்டார். 

ஆனால் இந்த மனு மீதான விசாரணையை தொடர்ந்தும் நடத்துவதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது என்று மனுதாரர் தரப்பு சட்டவாளர்கள் வாதிட்டனர். 

அரசதரப்பு வாதத்தை நிராகரித்த தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தும் நடத்துவதற்கான உத்தரவை வழங்கியது. 

அதேவேளை, இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் எல்லா நீதிபதிகளையும் கொண்ட முழு அமர்வே விசாரிக்க வேண்டும் என்று மாவை சேனாதிராசா முன்வைத்த வேண்டுகோளையும் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 22-ம் திகதி நடக்கவுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post