Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெங்கு காய்ச்சலை தடுக்க ஜெ இன்று ஆலோசனை

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சுகாதார துறை உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகளை கொண்ட குழுவை அமைப்பது, தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

கிருஷ்ணகிரியில் 1 வயது குழந்தை பலி : தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தரப்பள்ளி அருகேயுள்ள குப்பச்சிப் பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். 

இவரது பெண் குழந்தை சுஜிதாவின் முதலாவது பிறந்தநாளை, இரு தினங்களுக்கு முன்பு தான் குடும்பத்தினர் அனைவரும் உற்சாகம் பொங்க கொண்டினர். ஆனால், இந்த உற்சாகம் ஒரு நாள் கூட முழுமையாக நீடிக்கவில்லை. அன்று இரவே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுஜிதாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சுஜிதாவின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சுஜிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

அதிகரிக்கும் நோயாளிகள் : இதனிடையே, தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி மற்றும் பாதிப்புடன் ஏற்கனவே 28 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறியுள்ள மேலும் 2 குழந்தைகள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் டெங்கு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி மாணவி ஒருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் : புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் 57 குழந்தைகள் வைரஸ் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

தனி அறையில் சிகிச்சை : ஈரோடு மாவட்டம் பி. மேட்டுப்பாளையத்தில் டெங்கு அறிகுறி தென்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட 2 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தோடு பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநிலத்ததைச் சேர்ந்த 4 பேருக்கு, ஈரோடு தலைமை அரசு மருத்துமனையில் தனி அறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post