Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சின்மயி முதலில் தமிழர்களிடமும், தலித்துகளிடமும் மன்னிப்பு கேட்கட்டும் - மனுஷ்ய புத்திரன்



சின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார். ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது. புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன். 

ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? 

இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன். 

மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? 

ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா? 

குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது. 

நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்? கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? 

எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்? நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். 

- மனுஷ்யப் புத்திரன் 


[vuukle-powerbar-top]

Recent Post