Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வஞ்சகம் நிறைந்த இருவரை அடையாளம் காண்போம் - சு.ப. உதயகுமார்


நாம் ஒருவர், நமக்கு இருவர் 

சாதி, மதம், கட்சி, ஊர் வேறுபாடின்றி சிந்திக்கத் தெரிந்த, அடிமைத் தளையை அறுத்தெறிந்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழ் மக்கள் ஒருவராய் நின்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு, தமிழகத்தில் அணுசக்தியே வேண்டாம் என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து போராடிக் கொண்டிருக்கும்போது, இருவர் மட்டும் நமக்கு எதிராக வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். ஒருவர், திரு. சோ எஸ். ராமசாமி. ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், எழுத்தாளர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், நடிகர், அரசியல்வாதி, மனித உரிமைப் போராளி என நிறையச் சொல்லலாம். 

ஆனால் அவருக்கு ஏனோ நம் மீது, நம் போராட்டத்தின் மீது கடுமையான கோபம், வெறுப்பு. சில மாதங்களுக்கு முன்னால் நம் போராட்டம் “தயவு, தாட்சண்யம் இன்றி” ஒடுக்கப்படவேண்டும் என்று தன் துக்ளக் பத்திரிகையில் கொக்கரித்தார். தொடர்ந்து நம்மைப் பற்றி அவதூறாக எழுதி வருகிறார், கருத்துப் படம் வெளியிடுகிறார். 

 அண்மையில் 3.10.2012 துக்ளக் இதழில் ஒரு கோவை வாசகர் “கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட விடாமல் செய்வதால் யாருக்கு என்ன லாபம்” என்று கேட்டிருக்கிறார். தன்னிடம் பதில் இல்லை என்று சொல்கிற சோ “உதயகுமார் மீது கடுமையான நடவடிக்கை வந்தால், அப்பொழுது அவருடன் சேர்ந்து இயங்கியவர்கள் சிலர் உண்மையை வெளியே சொன்னாலும் சொல்லலாம். அப்போதுதான் இது பற்றிய முழு விவரங்கள் நமக்குத் தெரிய வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். 


 துக்ளக் பத்திரிகையின் 26.9.2012 இதழில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார் சோ “முடியட்டும் கூடங்குளம் கூத்து” என்ற தலைப்பில். “விடுதலைப் புலிகளைப் போல பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தி, போலீசாருடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டும்” என்று மீண்டும் ஓலம் இடுகிறார் சோ. “எங்கே பிராமணன்” என்று தேடிக்கொண்டிருக்கும் சோவுக்கு பிரச்சினை அணுமின் நிலையம் அல்ல. பிராமணர் அல்லாத சாமான்ய மக்கள், அதாவது படகோட்டி, பனையேறி, பலசரக்குக் கடை நடத்துபவர், தலித் மக்கள், கிறித்தவர்கள், முஸ்லீம்கள் போன்றோர் பிராமணீயம் எடுக்கும் முடிவுக்கு எதிராக, போடும் திட்டங்களுக்கு எதிராகப் பேசுவதை, போராடுவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவாள் சொல்வதைக் கேட்டு அடங்கி நடக்க வேண்டிய நாம், சூத்திரர்கள், எப்படி எழுந்து நிற்க முடியும், போராட முடியும்? இதுதான் சோவின் பிரச்சினை. 

சோ போன மாதம் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கிறார். இந்த மாதிரி முதுமையான நிலையில், வாழ்வு முற்றுப் பெறும் நிலையில் இருக்கிறவர்கள் சற்று முதிர்ச்சியோடும், கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும். தன்னோடு பிறந்த பாசிச மன நிலையை இந்தக் கடைசி தருணத்திலாவது மூட்டைக்கட்டி வைத்து விட்டு, மனித நேயத்தை நெஞ்சில் வளர்க்க முயலவேண்டும். “ஸாகரம் ஸர்வ பாப ஹரம்” என்று சம்ஸ்கிருத சுலோகங்கள் சொல்வதை விட சுத்தமான, முதிர்ச்சியான, கருணையுள்ள மனிதநேய சிந்தனைகள் எளிய, இனிய மரணத்தை அளிக்கும் வல்லமை கொண்டவை.


சோவைப் போலவே பன்முக ஆளுமை கொண்ட இன்னொருவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு. சரத்குமார். அவரும் ஒரு நடிகர், பத்திரிகையாளர், அரசியல்வாதி! எந்த மக்கள் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிந்து பேசியதை யாரும் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு மகத்தான சவத்துவத் தலைவர்.

நாடார் மக்களின் ஏக பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்தத் தலைவர், அண்மையில் கூடங்குளம், வைராவிக்கிணறு கிராம (நாடார்) மக்கள் காவல் துறையின் அடக்குமுறைக்குள்ளானபோது ‘இம்’மென்றும் முனகவில்லை, ‘ஏன்’ என்றும் கேட்கவில்லை. எனது நண்பர் மை. பா. சமத்துவக் கட்சி தலைவர் திரு. எர்ணாவூர் நாராயணனைத் தொடர்பு கொண்டு இந்த அடக்குமுறை பற்றிச் சொன்ன பிறகும், யாரும் வந்து அந்த மக்களைப் பார்க்கவில்லை; ஆறுதல் சொல்லவில்லை. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால், ஒட்டு மொத்த நாடார் சமுதாயமும் தொழில் இழந்து, பிச்சை எடுக்க வேண்டிவரும் என்பது தெரிந்தும், அதைப் பற்றி இதுவரை வாயே திறக்காதவர் இந்தத் தலைவர். விளை நிலங்கள் எல்லாம் வீட்டு நிலங்கள் ஆகி நாடார் மக்கள் விவசாயத்தை இழந்து வருவது பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதவர். ஆயிரமாயிரம் தமிழ் விவசாயிகள் வயிற்றில் அடித்த ஈமு கோழிப் பண்ணை விளம்பரப் படங்களில் நடித்து காசு பார்த்துவிட்டு, இப்போது அணுசக்தி விளம்பர வியாபாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து நடந்தாலும், இத்திட்டம் சாதரணமாக இயங்கினாலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள்தான் கடுமையாக பாதிக்கப்படும். இம்மாவட்டங்களில் அதிகமாக வாழ்பவர்கள் நாடார் மக்கள். எதைப் பற்றியும் சிந்திக்காது, ஐந்து லட்சம் புத்தகங்கள் அச்சடித்து வைத்துக் கொண்டு தமிழகம் முழுவதும் வாகனப் பிரச்சாரம் செய்யப் போகிறாராம் தலைவர். 

இந்தப் புத்தகத்தை எழுதியது யார்? அச்சடிக்க யார் காசு தந்தார்கள்? வாகனங்களுக்கு யார் வாடகைக் கொடுக்கப் போகிறார்கள்? தனது கட்சி செலவில் செய்வதாக இருந்தால், கட்சியின் வரவு-செலவு கணக்குகளை மக்களுக்குத் தரவேண்டும்; தருவாரா? போன வருடம் அக்டோபர் மாதம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் பிரதமரைப் பார்க்கச் சென்றபோது, இவரும் எங்களோடு வருவதாக சென்னையில் வைத்து அறிந்தோம். அதைக் கடுமையாக எதிர்த்தோம். டெல்லிக்கு வந்து சேர்ந்ததும் எங்களைப் பார்த்து தன்னிலை விளக்கம் அளித்து நம்பும்படிக் கேட்டுக் கொண்டார். பிரதமரைப் பார்க்கும் நாளன்று தமிழ்நாடு இல்லத்தில் வைத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், நான் பேசியதும் “ரொம்ப நன்றாகப் பேசினீர்கள்; இதே போல பிரதமரிடமும் பேசி விடுங்கள்” என்று என்னைப் பாராட்டினார், ஊக்குவித்தார். பிரதமர் கூட்டத்தில் எனது அருகே அமர்ந்து என்னோடுப் பேசிக்கொண்டேயிருந்தார். ஊர் திரும்பிய பின்னரும் எங்கள் தொடர்பு நீடித்தது. இடிந்தகரைக்கு அழைத்தபோது, பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றால் வருகிறேன் என்று சொன்னார். 

மக்களை வந்து சந்தித்துவிட்டுப் போங்கள் என்று கேட்டுக்கொண்டோம்; வரவேயில்லை. கடந்த பிப்ருவரி மாதம் சென்னையில் நானும், நண்பர்கள் புஷ்பராயனும், மை. பா.வும், முகிலனும் அவரது வீட்டில் அவரைச் சந்தித்தோம். அவரது பத்திரிகைகளின் பிரதிகள் தந்தார்; வெளியே வந்து புரட்டிப் பார்த்தால் எங்களைப் பற்றி பல அவதூறுகள் வெளியிடப்பட்டிருந்தன. இனி இவரோடுப் பேசியோ, விவாதித்தோ பலன் இல்லை என்று அப்படியே விட்டுவிட்டோம். 

இப்போது இந்த வாகனப் பேரணித் திட்டம் பற்றி கேள்விப் பட்டதும், எங்கள் கருத்துக்களைச் சொன்னோம். இதை சீரணிக்க முடியாத சமத்துவத் தலைவர் கூட்டம் கொடும்பாவி எரித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும் அலைகிறார்கள். அணுமின் நிலையம் பற்றிய ஒரு திறந்த விவாதத்துக்கு திரு. சரத்குமார் அணியமாக இருக்கிறாரா என்று நான் சவால் விட விரும்புகிறேன். தனது விழிப்புணர்வு பயணத்தை கூடங்குளம் கிராமத்தில் இருந்து தொடங்கத் தயாரா இவர்? அரசியல் தலைமை இன்றி, சமூக வழிகாட்டுதல் இன்றி, வலுவிழந்து கொண்டிருக்கும் இந்து நாடார் சமுதாயம் பொருளாதார பலத்தையும் விரைவில் இழக்கவிருக்கிறது சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற பெயரில்.

பனைத் தொழிலை விட்டு சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு செழித்தோங்கிய சமுதாயம் தனது வாழ்வாதாரத்தை இழக்கப் போகிறது. சோ போன்றவர்கள் குதித்து குதித்து ஆதரிக்கும் இந்த ‘சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு’ திட்டத்தால் இந்து நாடார்கள், முஸ்லீம்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத, தெரியாத இந்த சவத்துவத் தலைவர், அணுமின் கதிர்வீச்சு ஆபத்துக்குள் நாடார் மக்களைத் தள்ளிவிட அதிதீவிரமாய் இறங்கக் காரணமென்ன? இந்த மக்களையும் ஈமுக் கோழிகள் போல நினைக்கிறாரோ? அருமைத் தமிழ் சொந்தங்களே! “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்கிற” இம்மாதிரியானத் தலைவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள். தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறவர்கள் இவர்கள்! 

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை[vuukle-powerbar-top]

Recent Post