Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புறநானூறு கூறும் வீரமங்கையர் போல் இடிந்தகரையில் ஒரு பெண் போராளி


மெல்ரட்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துவருவது யாவரும் அறிந்த விடயம், இந்த போராட்டத்தில் மிக மும்முரமாக பெண்களை வழிநடத்தும் பெண்ணாக மெல்ரட் அவர்கள் இருக்கின்றார்கள், அவருடைய வாழ்க்கை எவ்வாறு அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு வித்திட்டதென்பதை எம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.

என் பெயர் மெல்ரட். எனது சொந்த ஊர், அணு உலை அமைந்திருக்கும் கூடங்குளம் அருகில் உள்ள இடிந்தகரை ஆகும். நான் வளர்ந்தது, கடல் அலைகள் மோதி விளையாடும் கிராமமான சின்னமுத்தத்தில். அங்கே தான் எனக்கு திருமணம் நடந்தது. நான் மணப்பெண்ணாக சின்னமுத்தம் கிராமத்திற்கு வந்த பிறகு, இதுவே என் பிறந்த ஊர் மாதிரி ஆகிவிட்டது. சின்னமுத்தம் கிராமம், கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள சிறிய கிராமம் ஆகும். எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். என்னுடைய இளைய மகள், அருகே உள்ள மேல்நிலைப்பள்ளியில் தான் படிக்கிறார்.

இயல்பாக சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் அணு உலை தொடர்பான அறிவிப்பு புயலாக வீசியது. அது என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது என்றும் சொல்லலாம். நாங்கள் சுனாமிக்குப் பிறகும், ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புக்குப் பின்னரும், கூடங்குளம் அணு உலையைக் குறித்து, மிகவும் அஞ்சுகிறோம். இதனால் தான், நாங்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் அனைத்திலும் முன்னால் நிற்கிறோம். ஒரு வருடத்திற்கு முன்பு நான், இதைப் பற்றி பேசுவதற்கு பயந்தேன். ஆனால், இப்போது கொல்கத்தா, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் நடக்கும் அணு உலைக்கு எதிரான போராட்டம் மற்றும் கருத்தரங்குகளில் கூட பங்கு பெற்று எங்கள் சிறிய ஊர், சொல்ல விரும்பும் செய்தியை உரக்க சொல்கிறோம்.

செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதி எங்களுக்கு மறக்க முடியாத நாள். அன்றைய தினம் தான், அமைதி வழியில் போராடிய எங்கள் மீது, காவல்துறையினர் அடாவடி தாக்குதல் நடத்தினர். செப்டம்பர் 13-ம் தேதி, கடலுக்குள் இறங்கி நாங்கள் போராட்டம் நடத்தியதை நீங்கள் அறிவீர்கள். அப்போது, கடலோர காவல் படையால், விரட்டப்பட்டோம். வானூர்திகளால் மிரட்டப்பட்டோம். ஆனாலும் அன்று நான் மன உறுதியுடன் போராட்டத்திலேயே தொடர்ந்து இருந்தேன். 

எதிர்பாராத விதமாக சகாயம் அன்று இறந்த பிறகு, கடலில் இறங்கி போராடுவதே, எங்கள் எதிர்ப்பைக் காட்ட சிறப்பான வழியாக இருக்கும் என்று நினைத்தோம். அணு உலை முற்றுகைப் போராட்டத்திற்கு படகுகளில் மக்கள் செல்லும்போது நானும் அவர்களுடன் சென்றேன். மேலும் ஊர்ப் பெண்கள், படகிலும் கடற்கரையிலும் இருந்தனர். கடலில் போகும்போது நான் மகிழ்வாகவும், அதே நேரத்தில் சோகமாகவும் உணர்ந்தேன். 

இந்த கடல் என்னுடைய தாய். என் ஊர், எனது தாய் வீடு. நான் ஏன் என் தாய்வீட்டை இழக்க வேண்டும்? என என்னை நானே கேட்டுக் கொண்டேன். முற்றுகைப் போராட்டம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டது.

என்னுடைய நண்பர்களான சேவியரம்மா, சுந்தரி மற்றும் செல்வி ஆகியோர் என்னுடன் இல்லாததை நான் மறந்து விட்டேன். அவர்கள் இப்போது சிறையில் இருப்பதையும் மறந்து விட்டேன். சகாயம் இறந்த உடன், அவரது சகோதரி செல்லம்மா அழுததையும் நான் மறந்து விட்டேன். சேவியரின் பிஞ்சுக்குழந்தைகள் அழுது, அழுது முகம் சிவந்திருந்ததையும் நான் மறந்து விட்டேன். 

மேரி சிலை உடைக்கப்பட்டதையும், பெண்கள் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதையும் கூட, நான் மறந்து விட்டேன். ஆனால், நான் இவற்றையெல்லாம் மறந்திருப்பது கடலில் இருக்கும்போது மட்டுமே, 

கடல் என் வலிகளை காது கொடுத்து கேட்கிறது. இந்த கடல் தான் என்னை தாங்கிப் பிடிக்கிறது. சோகம் என்னை தின்று விடாமல், இந்த கடல் தான் என்னைக் காப்பாற்றுகிறது. காம்ப்ளானும், ஹார்லிக்சும் தராத உத்வேகத்தை, இக்கடல் எனக்கு தருகிறது. அணு உலை, இந்த கடல் தரும் நன்கொடைகள் எல்லாவற்றையும் தின்றுவிட நினைக்கிறது. நினைவின் அலைகள் கடல் அலையை விட அதிகமாக இருக்கும்போதே திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் நூற்றுக் கணக்கான படகுகள் அணு உலையை முற்றுகையிட வந்து கொண்டிருந்தன. 

நான் இந்த உலகத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஒன்றை உரக்க சொல்ல விரும்புகிறேன். 

1. செப்டம்பர் 10, 2012 அன்று காவல் துறை பிடித்துச் சென்று, இன்று வரை வீடு திரும்பாத சகோதர சகோதரிகளை உடனே விடுவிக்க வேண்டும். 

2. எல்லா கடலோர கிராமங்களிலும் இருந்து காவல்துறையினரை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

3. கிராம மக்கள் சுமூகமாக வாழ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

4. கூடங்குளம் அணு உலையை மூடிவிட்டு, இயற்கையான வழியில் மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற வேண்டும். 

கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான, உறுதி செய்யப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமானால், மேற்கூறிய வேண்டுகோள்களை உடனே   
நிறைவேற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். 

அணு உலை ஏற்படுத்தும் வெப்பம் கடலில் வாழும் உயிரினங்களை அழித்துவிடும் என அஞ்சுகிறேன். கடலைக் காயப்படுத்துவது எங்கள் தாயின் உடலைக் காயப்படுத்துவது போல. இதை நிச்சயமாக எங்களால் தாங்க முடியாது. எங்கள் தாயைத் தவிர்த்து எங்களால் வாழ முடியாது. எங்கள் தாயைக் கொல்வதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால் தான் நான் போராட்டத்தில் முழு மனதுடன் கலந்து கொண்டேன். 

“அம்மா, நீ கவலைப் படாதே. நாங்கள் உன்னை நன்றாக கவனித்துக் கொள்வோம். உனக்கு ஒன்றும் நேராது” என்று படகில் சென்று கடல் தாயிடம் சொன்னோம். கூடங்குளம் அணு உலையை மூடும் வரையில் நாங்கள் ஒருபோதும் வீழ மாட்டோம் என அறுதியிட்டுக் கூறினோம்.
[vuukle-powerbar-top]

Recent Post