Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அணுஉலைகளும் அதன் அபாயங்களும் சிறப்பு கட்டுரை

கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985ல் இரு 220 MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சில காலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப் பகுதியில் தொடர் பிரச்சினைகள் ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப் பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன் வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

நாம் உண்ணக்கூடிய மீன்வகைகளான ராட்டு, சிங்க ராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்களின் மீது தெறிக்கும் கடல்நீரால் உடல் முழுதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக் கழிவுகளின் விளைவுகள் என கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம் , உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை. அடிப்படை தரவுகள்& ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதுமே அலட்சியப்படுத்தியே வந்துள்ளது.

கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் 30,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாராப்பூரில் அணு உலை தொடங்கியபோது அந்தக் கிராமத்தில் மொத்தம் 700 மீன்பிடிப் படகுகள் இருந்தன, இன்று 40 ஆண்டுகள் கழித்து அங்கு வெறும் 20 படகுகள்தான் உள்ளது.

மீன்பிடி முற்றாக அழிந்து விட்டதால் அவர்கள் தினக்கூலிகளாக இடம்பெயர்ந்து வேறு தொழில் நோக்கிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும் அங்கு உள்ள தானே நதிக்கிளையில் நிகழ்ந்துள்ள பாதிப்புகள் பற்றியும், அங்குள்ள மீன்களில் உள்ள கதிரியக்கம் பற்றியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மிகவும் விபரமான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றும் அங்குள்ள மீன்களில் கதிரியக்கம் இருப்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது என்றும் கூறினார்.

ஆனால் கதிரியக்கத்தின் அளவைப் பொதுநலன் கருதி வெளியிட நீதிமன்றம் மறுத்தது. அங்குள்ள அணு உலைக் குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 224 பேர் கடந்த 10 ஆண்டுகளாக கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள். விபத்துகள் இங்கு நடப்பது மிக சகஜமானது. ஆனால் வழக்கம் போல் அது ரகசிய காப்பின்கீழ் உடனே மூடி மறைக்கப் படும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச் செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது.

டிசம்பர் 26, 2004 அன்று மின்சாரம் இன்றி, தண்ணீர் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அங்கிருந்த உயரமான கிரேனில் அமர்ந்து அதனை இயக்குபவர்தான் சுனாமி அலையைக் கண்டு எச்சரிக்கை செய்துள்ளார். உடன் அந்தப் பகுதியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இருப்பினும் 65 முதல் 80 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. பெரும் விபத்து ஏதும் நடைபெறவில்லை என்று கூறும் நிர்வாகம், உடனே இந்திய ராணுவத்தின் ஏராளமான பெட்டாலியன்களை ஏன் குவித்தது? அந்தக் காலகட்டத்தில் ஊடகங்கள், ஆய்வாளர்கள் என யார் கேள்வி எழுப்பினாலும் நிர்வாகத்திடம் ஒரே பதில்தான் இருந்தது.

எல்லாம் சுபமே!! 1999 மார்ச் 26 அன்று 40 டன்கள் எடையுடைய கனநீர் கொட்டி விட்டது, இதனைப் பல தொழிலாளர்கள் ஒரு வார காலம் சுத்திகரிப்பு செய்தனர். அதில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி சில காலத்தில் உயிர் இழந்தார்.

2000 ஜனவரி 24 அன்று மீண்டும் பெரும் கதிரியக்கம் வெளிப்பட்டது, அதனை இந்திய விஞ்ஞானிகளால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆகையால் வெளிநாட்டில் இருந்து நிபுணர்கள் கல்பாக்கம் நோக்கி விரைந்தனர்.

மீன்பிடி குறைந்து கடலுக்குச் சென்றால் பல உடல் உபாதைகளை எதிர்கொள்வதால் மெல்ல மீன்பிடித்தலைக் கைவிட்டு வருகிறார்கள் சத்ரஸ் மக்கள். வேலை ஏதும் இல்லாததால் அணு உலையின் கதிரியக்க கழிவுகளால் தினமும் செத்துக் கரை ஒதுங்கும் மீன்களை 3 நாட்கள் வெயிலில் உலர்த்தி அதனைக் கருவாடாக மாற்றி சென்னைக்கு அனுப்புகிறார்கள்.
இந்தக் கருவாட்டை DAE, AERB, NPCIL அலுவல கங்களில் உள்ள கேன்டீன்களில் அதிகாரிகள், ஆய்வாளர்களுக்குக் கட்டாய உண வாக மாற்ற அப்துல் கலாம் அவர்கள் ஏற்பாடு செய்தால் அது மக்களின் அச்சத்தைப் போக்க அற்புதமான வழிமுறை யாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, அணு சக்தித் துறை BHAVNI என்னும் 500 MW மாதிரி வேக ஈனுலையை (prototype fast breeder reactor) கட்டி வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மட்டும் 60 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.

உலகில் வேறு எங்கும் 60 லட்சம் பேர் வசிக்கக் கூடிய இடத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அணு உலைகளைக் கட்டிய தில்லை.

நன்றி : முத்துகிருஷ்ணன்
[vuukle-powerbar-top]

Recent Post