Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செய்தியாளர்களின் புகைப்படகருவிகளை உடைப்பேன் என்று மிரட்டிய வீரபத்ரசிங் மன்னிப்பு கேட்டார்

இமாச்சலபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர் வீரபத்ர சிங். ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டின்பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் தனது மத்திய மந்திரி பதவியை விட்டு விலக நேர்ந்தது.

நடைபெற உள்ள இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது, கடந்த சில தினங்களுக்கு முன் மோசடி, சட்டவிரோத பணபரிவர்த்தனை, லஞ்சம், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளை பாரதீய ஜனதா சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், வீரபத்ரசிங் கடந்த 23-ந்தேதி (நேற்று முன்தினம்) இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில், அனி என்ற இடத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாரதீய ஜனதா சுமத்தியுள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

இதனால் ஆத்திரமும், கோபமும் அடைந்த வீரபத்ரசிங் பத்திரிகையாளர்களை நோக்கி, "உங்கள் புகைப்படகருவிகளை உடைத்து எறிவேன். உங்களுக்கு வேறு வேலை இல்லையா?'' என மிரட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி டெல்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீட்சித்திடம் நிருபர்கள் நேற்று கருத்து கேட்டனர்.

அதற்கு அவர், "வீரபத்ரசிங் ஒரு மூத்த தலைவர். நடந்ததாக கூறும் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது. இதில் யாரும் மனவருத்தம் அடைந்திருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்'' என கூறி மன்னிப்பு கேட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில், "சில நேரங்களில் தேர்தல் பிரசாரத்தின்போது சிலர் அதிர்ச்சியடையவோ, கோபம் அடையவோ வாய்ப்பு இருக்கிறது.

உடல் வலி, மன வலியின் காரணமாக இப்படி சம்பவம் நடக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது'' என கூறினார். வீரபத்ரசிங்கின் செயல்குறித்து, டெல்லியில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வியிடமும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறும்போது, "ஊடகங்களை தாக்குவதின்மூலம் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து வீரபத்ரசிங் தப்பி விட முடியாது.

செய்தியாளர்களை தாக்குவதற்கு பதிலாக அவர், தெளிவாக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டும்'' என்றார். "மரங்களில் பணம் காய்க்க முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார். ஆனால் வீரபத்ரசிங் அதை தவறாக்கி இருக்கிறார்.

ஆப்பிள் மரங்களிலும்கூட பணம் காய்க்கும் என அவர் நிரூபித்துள்ளார்'' எனவும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார். வீரபத்ரசிங்கிற்கு எதிராக பல தரப்பிலும் நெருக்கடிகள் வந்ததை தொடர்ந்து நேற்று அவர் அவசரமாக சிம்லாவில் நிருபர்கள் கூட்டத்தை கூட்டினார். 

அதில் அவர் பேசும்போது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். அப்போது அவர் கூறியதாவது:- நான் வருந்துகிறேன். யாரையும் வெறுப்புக்குள்ளாக்குவது எனது நோக்கம் அல்ல.

அந்த சம்பவத்தால் உங்களில் யாருடைய உணர்வையும் நான் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவிப்பதில் தயக்கம் இல்லை. நான் பத்திரிகைகளை மதிக்கிறேன்.

நான் அனைத்து ஊடகங்களையும் மதிக்கிறேன். உங்கள் பணிபற்றி நான் அறிவேன். என்னைவிட நல்ல மரியாதையுடன் உங்களை நடத்துகிற வேறு அரசியல்வாதி இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post