Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரைக்கு வர வேண்டும்: மம்தாவுக்கு கூடங்குளம் போராட்டக் குழு கடிதம்


அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தருமாறும், இடிந்தகரைக்கு வருமாறும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கூடங்குளம் போராட்டக் குழுவினர் கடிதம் எழுதியுள்ளனர். 

இது தொடர்பாக அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், உறுப்பினர்கள் எம்.புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், எப்.ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதம் விவரம்: 

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக கடந்த கால் நூற்றாண்டாகப் போராடிவரும் இந்தியாவின் சாதாரண குடிமக்கள் நாங்கள். எங்கள் போராட்டத்தை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் அமைதியான வழியில், வன்முறையில்லாமல், ஜனநாயக வழியில் தீவிரப்படுத்தியுள்ளோம். எங்கள் போராட்டம் 400 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.

பல சர்வதேசப் பிரச்னைகளில் மக்களுக்கு ஆதரவான நிலை எடுத்த உங்களைப் பாராட்டுகிறோம். உங்களை எங்கள் இடத்துக்கு வரவேற்கிறோம். ஹிராபூர் அணுமின் திட்டம், நந்திதாம், சிங்குர் பிரச்னை போன்ற மக்கள் பிரச்னையில் துணிச்சலான முடிவை எடுத்த ஒரே தலைவர் நீங்கள்தான். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நீங்கள் எடுத்த முடிவுக்கு நாடு முழுவதும் மக்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர். 

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களால் அந்த நாடுகளுக்கும், அந்நாட்டு நிறுவனங்களுக்கும்தான் லாபம். ஆனால், பாதிப்புகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள சாதாரண ஏழை மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்குத்தான். இந்தியாவில் அணுசக்தி என்பது வீணான வாதமாகத்தான் இருந்து வருகிறது. அதிகளவிலான பணம், வளம், நேரம், தேசிய சக்தி செலவழிக்கப்பட்டு கடந்த 63 ஆண்டுகளில் மொத்த மின் உற்பத்தியில் 2.5 சதவீதம் மட்டுமே அணுசக்தி மூலம் கிடைத்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நாட்டின் சாதாரண குடிமக்களை பாதுகாக்க, அவர்களது வாழ்வாதாரத்தை, சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்கள் நலனில் அக்கறை உள்ள தலைவர்களின் தலையீடு தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் இடிந்தகரை கிராமத்துக்கு வந்து எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்களிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றனர்.


[vuukle-powerbar-top]

Recent Post