Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் ஏலகிரி மலைத்தொடர் பயணம் ஒரு பார்வை


வாரத்தின் இறுதி நாட்களான சனி,ஞாயிற்றுக் கிழமைகளை எப்படி கழிப்பது என்று யோசனையில் இருந்தேன்.அப்பொழுது தான் உலகத் தமிழ் அமைப்பு GTO (Global Tamil Organisation) சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு,பாண்டிச்சேரி மற்றும் பெங்களூரை சேர்ந்த இளைஞர்களுக்கான ஏலகிரி மலைத்தொடர் பயணம் பற்றிய செய்தி தெரியவந்தது.சரியென்று இந்த இரண்டு நாட்களை பயனுள்ள வகையில் அனுபவிக்க உடனடியாக பயணக்குழுவை தொடர்பு கொண்டு நாம் வருவதை உறுதிசெய்து கொண்டோம். 

ஏலகிரி மலைத்தொடர்,வேலுர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அமைந்துள்ளது.இது சென்னையில் இருந்து சுமார் 230 கி.மீ தொலைவில் உள்ளது.பயணத்தின் முதல் படியாக அனைவருக்கும் அளிக்கப்பட்ட தகவலின் படி சனிக் கிழமை(6-10-12) காலை 7 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒன்றினைந்தோம் அங்கிருந்து ஆரம்பமானது அந்த குதூகல பயணம்.இந்த பயணத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து ொண்டனர்.பலரும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் பயணத்தின் இறுதியில் அனைவரும் நண்பர்களாக பிரிந்தது அருமை.


காலையில் 7.30 மணியளவில் கிளம்பி நண்பகல் 1 மணியளவில் ஏலகிரியை சென்றடைந்தோம்.இந்த பயணத்தின் போது சில அருமையான காட்சிகளைக் கண நேர்ந்தது.மலையின் அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சியை அடைய 15 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும்.இதில் என்ன சிறப்பு என்றால் இந்த 15 கொண்டை ஊசி வளைவிற்கும் தமிழுக்காக தன் வாழ்வையே அர்ப்பனித்தவர்களின் பெயர்களை வைத்துள்ளனர்.ஒவ்வையார்,பாரதியார்,கம்பன்,பாரி வளைவு என்று குறிப்பிட்டுள்ளனர்.இதே போன்று இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே அடிவாரத்தில் இருந்து அரை மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்தோம்.

அதன் பின்பு ஏற்கனவே முன்பதிவு செய்துவைத்திருந்த YMCA கேம்ப் விடுதியை சென்றடைந்தோம்.பின் அனைவரும் மதிய உணவை முடித்துக்கொண்டு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று ஏற்கனவே திட்டமிட்டபடி மட்டைப்பந்தாட்டம்,கபடி போன்ற விளையாட்டுகளை விளையாடத் தயாரானோம்.இது என்ன விளையாடுவதற்கா இங்கு இருந்து அங்கு போனீர்கள் என்று தோன்றலாம் ஆனால் அதற்கு ஒரு காரணம் உண்டு. நான் முன்னரே குறிப்பிட்டிருந்த படி பயணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஒருவொருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் அதனால் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த விளையாட்டுக்கள் நல்ல உதவி செய்தன.இதில் மட்டைப்பந்தாட்டப் போட்டியில் மூன்று அணிகள் பங்குபெற்றன.இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையை வென்றது போல் உலக தமிழ் அமைப்பு அணி வென்றது. 

அதேவேளையில் நாம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த சில வெளி நாட்டவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டு நம் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றியும் அரசியல் கட்டமைப்பு பற்றியும் மற்றும் ஈழப் போராட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினோம் அவர்களும் அதை ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.பின் இந்த விளையாட்டுப் போட்டிகளை மாலை 5 மணியளவில் முடித்துக் கொண்டோம். 


சரியாக மாலை 5 மணிக்கு ஒரு சிறப்பான நிகழ்ச்சியைக் காண அனைவரும் தயாரானோம்.அந்த சிறப்பான நிகழ்ச்சி நமது தமிழ் நாட்டின் வீரக்கலையான சிலம்பத்தைப் பற்றியது.இதற்காகவே சென்னையில் இருந்து சிலம்பப் பயிற்ச்சி வல்லுனர்களை ஒருங்கினைப்பாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.அவர்கள் தமிழ் நாட்டின் வீரக்கலையான சிலம்பம் பற்றி பல அறிய தகவல்களைக் கூறினர்.5000 வருடம் பழமையான சிலம்பக் கலையில் இருந்து தான் கராத்தே,குங்ஃபு போன்ற கலைகள் தோன்றியது என்ற தகவல் ஆச்சர்யமளித்தது.மாலை 6.30 மணி வரை அந்த இயற்கையான இடத்தில் அமர்ந்து சிலம்பத்தின் ஆரம்ப பயிற்ச்சிகள் பற்றி தெரிந்து கொண்டோம்.அதன் பின் அனைவரும் ஒருவொருக்கொருவர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.பின் இந்த பயணத்திற்கான நோக்கத்தைப் பற்றி பயண ஒருங்கினைப்பாளர் திரு.செழியன் அவர்கள் எடுத்துக் கூறினார்.இந்த நிகழ்ச்சியின் பின்னர் தான் வந்துள்ள இளைஞர்கள் அனைவரும் ஊடகம்,மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் என்று தெரியவந்தது. 


அதன் பின்னர் இரவு சரியாக 8 மணியளவில் அனைவரும் இரவு உணவை சுவைத்துவிட்டு அவரவர் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்ட களியாட்டத்திற்கு (camp fire) தயாரானோம்.ஆனால் மழைக் குறுக்கிட்டதின் காரணமாக நம்மால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.சரியென்று அனைவரும் அவரவர் அறைக்கு சென்று ஓய்வெடுக்கத் துவங்கினோம். அடுத்த நாள் காலைவேளை அனைவரும் எழுந்து தயார்படுத்திக் கொண்டு சிலம்பக் கலையின் ஆரம்ப பயிற்சிகளைக் கற்றுக் கொண்டோம்.அது அனைவருக்கும் ஒரு நல்ல அனுபமாக இருந்தது.

அதன்பின் காலை உணவை எடுத்துக் கொண்டு அடுத்த முக்கியமான நிகழ்ச்சியான அரசியல் விவாதத்திற்குத் தயாரானோம். சரியாக காலை 10.30 மணியளவில் அரசியல் விவாத நிகழ்ச்சியை துவங்கினோம்.இந்த நிகழ்ச்சியில் பல முக்கியமான விவாதங்கள் நடைபெற்றெது. முதலில் உலக தமிழ் அமைப்பின்(GTO) நோக்கம் மற்றும் தமிழனம் எதிர் நோக்கும் சவால்கள் பற்றி பயண ஒருங்கினைப்பாளர் திரு.செழியன் அவர்கள் உரையாற்றினார்.அதன் பின்னர் கல்லூரி இளைஞர்கள் சார்பாக பேசிய திரு.பிரபாகரன் அவர்கள் இக்கால சூழலில் இளைஞர்களிடையே உள்ள அரசியல் விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார்.அவரைத் தொடர்ந்து இக்கால சூழலில் தமிழருக்கான தொழில் கட்டமைப்பும் தன்முனைப்பும் என்ற தலைப்பில் மென்பொருள் துறையைச் சார்ந்த திரு.நாகராஜ் அவர்கள் உரையாற்றினார். அதன் பின்னர் தமிழக மீனவர்களின் அவல நிலையும் இந்தியாவின் பாராமுகமும் பற்றி முனைவர் திரு.நிலவன் அவர்களும் தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலையைப் பற்றி பத்திரிக்கையாளர் திரு.ரா வினோத் அவர்களும் பெங்களூர் தமிழர்களின் வாழ் நிலையைப் பற்றி பெங்களூரில் இருந்து வந்திருந்த திரு.ராஜேஷ் அவர்களும் உரையாற்றினர். விவாதத்தின் முடிவில் அடுத்தடுத்த நிகழ்வுகள் பற்றியும் கர்நாடகத்தில் தமிழர்களுக்கான ஒரு ஊடகம் அமைப்பது பற்றியும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 


அதன்பின் மதிய உணவை முடித்துக் கொண்டு சரியாக 3 மணியளவில் அனைவரும் மலையிறக்கத்திற்கு தயாரானோம்.அங்கிருந்து கிளம்பும் முன் அனைவரும் ஒன்றினைந்து தமிழர் முன்னேற்றத்திகு பாடுபடுவோம் என்ற உறுதிமொழியினை ஏற்று மலையில் இருந்து நடை பயணமாக இறங்கத் தயாரானோம்.இந்த மலையிறக்கதில் 8 கி.மீ பயண தூரமான ஜலகம் பாறை என்ற இடத்தை நோக்கி இறங்கத் தயாரானோம்.இது அனைவருக்கும் ஒரு அருமையான அனுபவமாக இருந்தது இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே இறங்கினோம்.முதலில் சாதரணமாக இறங்கினாலும் மலையை விட்டு இறங்க இறங்க பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.ஆம் இடையிடையே சிறிய ஓடைகள் பல வலுக்குப் பாறைகள் என இறங்க கடினமாக இருந்தது.சில வலுக்குப்பாறைகளைக் கடக்க கடினமாக இருந்தபோது அனைவரும் ஒற்றுமையுடன் ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டு செடிகள் மரக்கிளைகளைப் பிடித்துக் கொண்டு இறங்கினோம். 

இது எல்லாவற்றிற்கும் மேலாக மலையைவிட்டு இறங்க ஒரு அரைமணி நேரம் இருக்கும் போது நன்றாக இருட்டிவிட்டது மலையில் விளக்குகள் இருக்கவும் வாய்ப்பில்லை மனதில் திகிலுடன் மெதுவாக இறங்கினோம்.இறுதியில் ஒருவழியாக அடிவாரத்தை அடைந்தபோது அனைவரின் மனதிலும் ஒரு சாதனையை செய்துவிட்டது போல ஒரு திருப்தி.மலையிறக்கம் ஒரு திகிலுடன் முடிந்தது.பின் இரவு 7 மணியளவில் மலையடிவாரத்தில் நமக்காக காத்துக் கொண்டிருந்த வாகனத்தில் ஏறி அனைவரும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தோம்.பின் அங்கிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறி ஒருவொருக்கொருவர் ஏற்ப்பட்ட நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டே பயணிக்கத் துவங்கினோம்.அறிமுகமில்லாதவர்களாய் ஒன்றினைந்து நண்பர்களாகப் பிரிந்தது அருமையான நிகழ்வு.அடுத்து இதே போன்று ஒரு பயனுள்ள பயணத்தில் சந்திப்போம் என்று அனைவரும் மறக்கமுடியாத நினைவுகளுடன் பிரிந்தோம். 


இந்த பயணத்தை ஒருங்கினைத்த உலக தமிழ் அமைப்பைச் சார்ந்த திரு.செழியன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.இளைஞர்கள் மத்தியில் அரசியல் பற்றிய தெளிவுகளை ஏற்ப்படுத்தவும் தமிழர்களின் மேம்பாடு பற்றி அறிந்து கொள்ளவும் பல முயற்சிகளை எடுத்துவரும் திரு.செழியன் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

-பிரசாந்த் தமிழ்
[vuukle-powerbar-top]

Recent Post