Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழினத்தை பிடித்து ஆட்டும் ஐந்து போதைகளை தகர்த்தெறிவோம் - சு.ப.உதயகுமார்

தமிழினத்தை பிடித்து ஆட்டும் ஐந்து போதைகளை தகர்த்தெறிவோம். 


எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் பைந்தமிழ் பாக்கியம் கொண்ட நாம் --பைந்தமிழர்-- அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்று எல்லோரும் எப்போதும் அங்கலாய்க்கிறோம். ஆனால் இதுதான் பிரச்சினை என்று சுட்டிப் பேசுவதோ, அதைத் தட்டிக்கேட்டு விவாதிக்க முனைவதோ, அல்லது அதை மாற்றியமைக்கும் வகையில் சிந்திப்பதோ செயல்படுவதோ அரிது. டீக்கடை விவாதம் போல மேலோட்டமாகப் பேசுகிறோம்; பின்னர் அப்படியே விட்டுவிடுகிறோம். நம் வீட்டை சுத்தம் செய்யும் வேலையை வேறு யாராவது வந்து செய்வார்கள் என்று வாளாவிருக்கிறோம். 

 “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்” என்பதுதான் உலகின் அனைத்துக் கலாச்சாரங்களின் கதையும். முழுமை பெற்ற, முரண்களில்லாத, மாசு மருவற்ற கலாச்சாரம் எங்கேயும் இல்லை. ஆனால் அடிப்படையேக் குலைந்து கிடக்கும், அஸ்திவாரமே சிதைந்து கிடக்கும் நமது கலாச்சாரத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டுமே?“கஞ்சி குடிப்பதற்கிலார்” பற்றி நாம் அறிவோம்; “அதன் காரணங்கள் இவையென அறிவுமிலாராய்”அறியாமையில் கிடக்கிறார்களே நம்மில் பலர்; அதுதான் பெரிய கொடுமை. 

 தமிழினத்தின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒரு சிலவற்றைத் தேர்ந்து விவாதிப்போம். என்னைப் பொறுத்தவரை, நாம் ஒருசில மோசமான போதைகளில் உழன்று கொண்டிருக்கிறோம் என உறுதியாய் நினைக்கிறேன். குறைகள் வேறு, போதைகள் வேறு. குறைகள் ஒருவேளை குறை பெற்றிருப்பவரால் என்றைக்காவது, எப்போதாவது, எங்கேயாவது உணரப்படலாம். அல்லது பிறரால் கண்டுணர்ந்து உரைக்கப்படலாம். அந்தக் குறைகள் சுயபுத்தி அல்லது சொல்புத்தியால் நிவர்த்தி செய்யப்படலாம். ஆனால் போதைகள் நம்மை சுயமாக சிந்திக்க, சீர்தூக்க, செயல்பட விடுவதில்லை; பிறர் சொல்லும் போதனைகளை செவிமடுக்க விடுவதில்லை. குறை என்பது தெளிவான நிலையில் ஒருவர் பெற்றிருக்கும் பித்தம். ஆனால் போதை என்பது மயக்க நிலையில் ஒருவர் பெற்றிருக்கும் பேதமை. முன்னது நோய் போன்றது; மருந்து கொடுத்தால் தெளிவு பிறக்கலாம். பின்னது பேய் போன்றது; என்ன, ஏது என எதுவும் தெரிய முடியாத கலக்க நிலை. நமது தமிழினம் முக்கியமான ஐந்து போதைகளில் உழன்று கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

வெறும் ஐந்து போதைகள்தான் உள்ளனவா எனக் கேட்கலாம். ஒவ்வொருவரின் பின்னணி, பார்வை, விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் இது அமையும். எனது உள்ளுணர்வு, மெய்ப்பொருள் காணும் திறன் அடிப்படையில், இந்த பட்டியலை தயாரித்திருக்கிறேன். இதுதான் இறுதியானதோ அல்லது உறுதியானதோ அல்ல. 

[1] சாதி/மத வெறி: 

 தமிழினத்தின் மிகப் பெரும் போதை மதமும் அதனோடுப் பிறந்த இரட்டைக் குழந்தையான சாதியும்தான். வேலியேப் பயிரை மேய்வது போல, காக்க வந்த கடவுளே மக்களை கட்டிப் போட்டிருப்பது மிகப் பெரிய கொடுமை. வெறும் உடலும், உள்ளமும் மட்டுமல்ல மனிதன்; உயிர் என்றும் ஒன்று இருக்கிறது. எங்கிருந்து வருகிறது, எங்கேப் போகிறது என்று எதுவும் அறியப்படாத ஒரு பெரும் புதிர் அது. ஆத்மா, ஆன்மா, ஆருயிர் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அதனை எப்படிக் கையாள்வது என்பது மனித குலம் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுள் ஒன்று. இந்த ஆத்மனை குழப்பமான, சிக்கல்கள் நிறைந்த வாழ்வில் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்துவது எப்படி என்பது மாபெரும் கேள்வி. நமது சமநிலையை எப்படிப் பேணி பாதுகாத்துக்கொள்வது (centering) என்பதாகவே பலர் இந்தப் பிரச்சினையை அணுகுகிறோம். வெறும் பொருள் மட்டுமின்றி அருள் என்றும் ஒன்று இருப்பதை ஒத்துக் கொள்கிறவர்கள், வாழ்வின் அர்த்தம் என்ன என்று சிந்திக்கிறவர்கள், அளவிடமுடியாத பிரபஞ்சத்தை அறிய விரும்புகிறவர்கள் என பலரும் கடவுளை, ஆன்மீகத்தை நாடுகின்றனர். 

 தெரியாத ஒன்றை, புரியாத ஒன்றை, பயப்படுகிற ஒன்றை கையாள்வதற்கு மதம் முகிழ்த்தது. இன்ன மதம் என்று பெயர் வைத்து, புனித நூல் என ஒன்றை எழுதிக் கையில் கொடுத்து, ஒரு புனிதரை இறைத்தூதன் எனச் சுட்டிக்காட்டி, இவற்றைச் சுற்றி ஒரு மாபெரும் நிறுவனத்தைக் கட்டியெழுப்பி, ஒரு சில மூடப் பழக்க வழக்கங்களை இவற்றில் விரவி, சாவி கொடுத்த பொம்மைகளாய் நம்மை இயங்க வைத்து விடுகின்றனர் மதவாதிகள். இந்த மதச் சடங்கு, சம்பிரதாயங்களுக்குள் மாட்டிய பிறகு, மூளையை அடகு வைத்த பிறகு, முதுகெலும்பை இழந்துவிட்ட பிறகு, கண்டவனெல்லாம் தோள் மீது ஏறி சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்கிறேன், நான் சொல்வது போலச் செய் என்று நெறிப்படுத்திய பிறகு, நாம் மதத்துக்கு அடிமையாகிறோம். 

 ஒரு சிலர் தம் குழந்தைகளுக்கு ஒழுக்கம், நல்லாறு பற்றி கற்பிப்பதற்கு மதம் வேண்டும் என வாதிடுகின்றனர். அதுபோல வள்ளுவர் சொல்கிறார்: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. 

அதாவது தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது என மு.வ. பொருள் சொல்கிறார். தனக்குவமை இல்லாதவன் தாள் சேர்வது என்பது ஏதாவது ஒரு மதத்தில் இணைவது என்றாகி விடுகிறது. இப்படி பல காரணங்களுக்காக மேம்போக்காக சிந்திக்கிறவர்கள், குழம்பிப் போகிறவர்கள் மதம் எனும் நிறுவனங்கள் கையில் சிக்கிக் கொள்கின்றனர். ஆ-சாமிகளிடமும், ஆதீனங்களிடமும் மாட்டிக் கொள்கின்றனர் நம்மில் சிலர். எப்படியோ நம் மீதான ஆளுமையை அடுத்தவனிடம் கொடுத்துவிட்டு குனிந்திருப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் உடனிருக்கும் மனிதனைக் கொல்லுகிற அளவுக்கு வெறி கொள்ள வைக்கிறது மதம். 

 இந்த போதைக்குள் சிக்கிய பிறகு, சாதி போதையும் சாதாரணமாகவேத் தோன்றுகிறது. மதத்தைக் கூட சிலர் மாற்றுவதற்கு தயாராயிருக்கிறார்கள்; ஆனால் சாதி அடையாளம் மிக மிக முக்கியமானதாய் இருக்கிறது. பல இடங்களில் பல நேரங்களில் மதக் கலவரமாகத் தொடங்கும் பிரச்சினை இறுதியில் சாதிக் கலவரமாக முடிகிறது. தெற்காசியாவைப் பொறுத்தவரை, இந்த சாதி அடையாளம்தான் அடிப்படை அடையாளமாக இன்றளவும் இருக்கிறது. சாதிக்கெதிராகப் போர்க்கொடி தூக்கி முகிழ்த்த இயக்கங்களுக்குள்ளேகூட சாதி புகுந்து சதிராட்டம் போடுகிறது. இந்தியாவைப் போன்றே அண்டை நாடுகளிலும், பாகிஸ்தான், வங்காள தேசத்தில் கூட, சாதியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மதம் போன்றே எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாததுதான் சாதியும். இரண்டையுமே பிறப்புதான் தீர்மானிக்கிறது, பெற்றோர், உற்றோர்தான் பெரிதாக்கி விடுகின்றனர் நம் மனதில். மதத்தையாவது நம்மால் மாற்றிக்கொள்ள முடியும், ஆனால் சாதியை மாற்றவே முடியாது. 

தமிழகத்தில் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளே 252 இருக்கின்றன. உயர்ந்த, தாழ்ந்த சாதிகள் பட்டியல் இன்னும் நீளமானது. வேதம், குலம், கோத்திரம், என்று என்னென்னவோ உட்பிரிவுகள், கிளைகள், பிரச்சினைகள் இதில் இருக்கின்றன. பாழாய்ப் போன சாதியின் அடிப்படையில் ஊர் பஞ்சாயத்து, கட்டு, நீக்கி வைத்தல், தீண்டாமை, காணாமை, நம்பாமை போன்ற சமூக அவலங்கள் சதிராட்டம் போடுகின்றன. ஊருக்குள்ளேயே ஒவ்வொரு சாதியினரும் உயிர் வாழ தனித்தனி இடம், இடையே குறுக்குச் சுவர்கள், “கீழ் சாதியினர்” பஞ்சாயத்துத் தலைவராக வரக்கூடாது என்று விதி, அடக்கப்பட்ட சமுதாயத்தவர் கோவில்களுக்குள் போகக்கூடாது, வீட்டில் மாடி கட்டக் கூடாது, ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்றெல்லாம் அசிங்கமான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள். இப்படியெல்லாம் நம்முள் பலவந்தமாக ஊட்டப்பட்ட, நம் மீது திணிக்கப்பட்ட சாதி, மத அடையாளங்கள் நம்மை அடிமைப்படுத்தி, அலைக்கழிப்பது தமிழ் இனத்தின் மிகப் பெரிய போதை.

[2] மது/மாது போதை:

தமிழினத்தைப் பிடித்தாட்டுகிற அடுத்த பெரிய போதை மது. தமிழினத்தின் தலைவர் தமிழருக்கு செய்த மிகப் பெரிய “தொண்டு” இதுதான். அதன் பிறகு வந்த ஆட்சியாளர்கள் இதை இன்னும் சட்டபூர்வமானதாக, சாதரணமானதாக, லாபகரமான வியாபாரமாக, அங்கீகரிக்கப்பட்ட அவலமாக மாற்றி, இன்றைக்கு அரசே இந்த மது போதை வருமானத்தால்தான் நடக்கிறது எனும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். 1983-84ம் ஆண்டு சுமார் 140 கோடிக்கு நடந்த மது வியாபாரம் 2005-06ம் வருடம் 7335 கோடி ரூபாய்க்கு நடந்திருக்கிறது. அதாவது 52 மடங்கு மது வியாபாரம் அதிகரித்தது. 2010-11ம் வருடம் 14,965 கோடி வருமானம் தந்த மது அரக்கன் 2011-12ம் ஆண்டு 18,000 கோடிக்கும் அதிகமாக தந்திருக்கிறான். டாஸ்மாக் வளர்ச்சி சொல்லும் கதையை தமிழ்க் குடி மக்கள் வேட்டியின்றி வீதிகளில் விழுந்து கிடப்பதைப் பார்த்து புரிந்துகொள்ளலாம். 

அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கலைத் துறையினர், உழைக்கும் வர்க்கம், பள்ளி--கல்லூரி மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த போதைக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். எத்தனையோ குடும்பங்கள் நலிவடைந்து நாசமாகிக் கொண்டிருக்கின்றன. வாகன ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு ஓட்டுவதால், பல சாலை விபத்துக்கள் நடக்கின்றன, ஏராளமானோர் இறக்கின்றனர். வாழ்வாங்கு வாழ வேண்டிய பல மனித மலர்கள் முழுமை பெறாமலே கருகிப் போகின்றன. இந்த மது போதைதான், மாது, சூது, லஞ்சம், ஊழல், அநியாயம் என பல அழிவுகளுக்கு, அசிங்கங்களுக்கு அடிப்படையாகி விட்டிருக்கிறது.

முன்பெல்லாம் திருமணம் பேசும்போது, பையன் குடிப்பானா என்று பயத்தோடு விசாரிப்பார்கள்; இப்போது பையன் ரொம்ப குடிப்பானா என்று பேச்சுக்குக் கேட்கிறோம். பல இடங்களில் குடிக்கவில்லையென்றால், இவன் எல்லாம் ஓர் ஆண்தானா என்றே சந்தேகிக்கின்றனர். தமிழ் சமூகத்தின் நேர் பாதி (பெரும்பாலும் ஆண்கள், கொஞ்சம் பெண்கள்) மது போதைக்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். குடும்ப வருமானம், முன்னேற்றம், குழந்தைகள் கல்வி, சத்துணவு, உடல் நலம், சமூக மரியாதை, ஒழுக்கம், உயர்வு என அனைத்தையும் இழக்க வைக்கிறது இந்த போதை.

மது வந்தால் மற்றவையும் உள்ளே வந்து விடுகின்றன. மது-மாது தொடர்பு மிகவும் நெருக்கமான ஒன்று. முன்னெப்போதையும் விட “கள்ள உறவு” எனும் பிரச்சினை தமிழ் சமுதாயத்தை வாட்டுவதற்கு காரணம் மது போதைதான். குடும்பத் தலைவன் மதுவுக்கு அடிமையாகி மாண்பினை இழக்கும்போது, மனைவி அவனை வெறுக்கிறாள். அவன் அருகே வருவதையே தவிர்க்கிறாள். அவனுக்கோ மது மனைவியாகி விடுகிறது. மொத்தத்தில் இல்லறம் கெடுகிறது. குழந்தைகள் நொடிந்து விடுகிறார்கள். “ஒற்றைக் குடும்பம்” உடைக்கப்பட்ட தேங்காய் போல சிதறிப் போகிறது. ஒவ்வொருவரும் வேறு வேறு இடங்களில் தமது மன நிம்மதியை, மகிழ்வைத் தேடிப் போகின்றனர். கள்ள உறவு, காதல் லீலை, கொலை செய்தல், பாய்/கேர்ல் பிஃரண்டு, ஓடிப் போதல், கற்பழிக்கப்படுதல், கருச்சிதைவு செய்தல், தன்மானம் இழத்தல், தற்கொலை புரிதல் என குடும்பம் அழிகிறது. நாளிதழ்களில் வரும் கொடுமையான செய்திகளை ஊன்றிப் படித்தால், இவற்றின் பின்னணியில் மது/மாது போதை இருப்பது தெளிவாகத் தெரியும். 

[3] சினிமா/சின்னத்திரைப் பைத்தியம்:

தமிழினத்தைப் பிடித்தாட்டுகிற அடுத்தப் பெரிய போதை திரைப் பைத்தியம். வெள்ளித் திரை, சின்னத் திரை, கணினித் திரை, கைப்பேசித் திரை நான்குமே நம் மக்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. பெருந்தலைவர் காமராசரின் அரசியலுக்குப் பிறகு, சினிமாவின் ஆதிக்கம் தமிழக அரசியலில் நுழைந்து, பரந்து விரிந்தது. தி.மு.க.வின் பல தலைவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நாஞ்சில் மனோகரன், எம்.ஜி.ஆர். என பலர் வெள்ளித் திரைப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் திரைக்கதை வசனம் எழுதினார்கள், இயக்கினார்கள், நடித்தார்கள், சினிமாவின் துணையோடுதான் அரசியலையே நடத்தினார்கள். எம்.ஜி.ஆர்.—சிவாஜி காலம் போய்விட்டாலும், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற இன்றைய முக்கியத் தலைவர்கள் கூட சினிமா பின்னணி உள்ளவர்களாகவே இருக்கின்றனர். ரஜினி-கமல் காலம் வந்த பிறகும், இன்னும் ஏராளமானோர் நடிக்கவந்த பிறகும், தமிழக அரசியல் சினிமாகாரர்கள் கையில்தான் சிக்கிக் கிடக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு சினிமாக்காரர்களின் தாக்கம் இங்கே அதிகமாக இருப்பதற்கு காரணம் நமது மக்களின் கல்வியறிவின்மை, கள்ளம் கபடமின்மை, அசல் எது--போலி எது எனப் பிரித்தறிய இயலாமை, யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமை உள்ளிட்ட பல காரணங்களைச் சொல்லலாம்.

நடிகர்—நடிகை--நடிப்பு மோகத்தில் கிடக்கும் தமிழினம் இந்தத் துறையை வெறுமனே கேளிக்கையாகப் பார்க்காமல், மீட்சிக்காக எதிர்பார்த்து நிற்பதுதான் இந்த திரை போதையால் வரும் விபரீதம். திரை மயக்கம் பல கலாச்சாரங்களில் இருந்தாலும், தமிழர்கள்தான் நடிகர்-நடிகைகளை கலாச்சாரத்தின் நடுநாயகமாக ஆக்கி வைத்திருக்கிறோம். அரசியல் தலைவர்களை இவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறோம். சரியான கொள்கை இல்லாதவர்களை அரிதாரம் பூசிய அழகு முகம் என்பதால் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். தமிழக நடிகர்களை விட அதிகமான படங்களில் நடித்திருக்கும் மலையாள நடிகர் பிரேம் நசீர் அல்லது மிகவும் புகழ் பெற்ற அமிதாப் பச்சன் போன்றோர் முதல்வரும் ஆகவில்லை, பிரதமரும் ஆகவில்லை. ஆனால் இங்கோ ஒரு படத்தில் நடித்து விட்டால் அடுத்தது முதல்வர் பதவிதான் இலக்கு எனும் நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சினிமா பைத்தியத்தால் தமிழினத்தின் சமூக-பொருளாதார-அரசியல் அவதிக்குள்ளாகி இருக்கிறது. 

“இயல், இசை, நாடகம்” எனும் முத்தமிழ் இன்று “குதர்க்கப் பாலியல், குத்துப் பாட்டு, குலுக்கல் நடனம்” என்று முடக்கப்பட்டிருக்கிறது. திரைப் படங்களோடு சின்னத் திரையும் தமிழ் மக்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. “மார்பாட, மயிராட” போன்ற ஆபாச ஆட்டங்கள், முழு நாளும் திரைப் படங்கள் ஓடும் சானல்கள், அரைகுறை ஆடையுடன் நடிகையரின் நடனங்கள், பண்டிகை தினங்களில் நட்சத்திர பேட்டிகள், சிறப்பு திரைப் படங்கள் என தமிழ் கலாசாரம் திரை விபச்சாரமாய் மாறிக் கிடக்கிறது. ச(னிய)ன் டி.வி. நிறுவனமும், அதன் பிறகு வந்த சில நிறுவனங்களும் மெகாத் தொடர் என்ற பெயரில் நீண்டத் தொடர்களை வழங்கி “அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்” என அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொடர்கள் சமூகத்தை பிரதிபலிக்கின்றனவா, அல்லது சமூகம் இந்தத் தொடர்களால் நாசமாகிக் கொண்டிருக்கிறதா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. 

ஊடக உரிமையாளர்களுக்கு அதைவிடப் பெரிய கேள்வி எதை எப்படி விற்று எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதுதான். தூக்குப் போடுவது, கத்தியால் குத்துவது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வது போன்ற காட்சிகளை தத்ரூபமாகக் காட்டி பணம் பண்ணுகிறார்கள் ச(னிய)ன் டிவியில். ஆனால் எந்தத் தொலைக்காட்சியும் ஒரு பள்ளியில் தீ விபத்து நடந்தால், குழந்தைகளும், ஆசிரியர்களும் எப்படி தங்களைக் காத்துக் கொள்ளவேண்டும் என ஒரு சிறப்புக் காட்சியைக் காட்டியதாக நான் கேள்விப்பட்டதில்லை.

நடுத்தர வயதினருக்கு நெடுந்தொடரும், இளம் பருவத்தினருக்கு திரைப்படமும் இருப்பது போல, மாணவ, மாணவியருக்கு கணினித் திரை வாய்த்திருக்கிறது. இணைய தளங்களும், ஏடாகூடமான சங்கதிகளும், வீடியோ விளையாட்டுக்களும் இந்த இளைஞர் கூட்டத்தை கட்டிப் போட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து ஒரு வேளைத் தப்பினாலும் கூட, கைப்பேசி திரையிலிருந்து தப்ப முடியாத நிலையில்தான் நமது சமூகம் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதிலும் விளையாட்டுக்கள் முதல், விபரீதங்கள் வரை மலிந்து கிடக்கின்றன. அறிமுகம் இல்லாதவர்களோடு அரட்டை அடிப்பது, தனிப்பட்ட விடயங்களை தரணிக்குச் சொல்வது, விபரீதங்களுக்குள் விழுந்து குமைவது, குழம்புவது என மக்கள் வாழ்க்கை மோசமாகிக் கொண்டிருக்கிறது. சினிமா/சின்னத்திரை பைத்தியம் நம்மை சீரழித்துக் கொண்டிருக்கிறது. 

[4] அரசியல்/காசியல் கிறுக்கு: 

மேற்கண்ட மூன்று போதைகளைப் போலவே அரசியல்/காசியல் போதையும் தலை விரித்தாடுகிறது தமிழகத்தில். ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால், அதன் தலைவரை தெய்வமாய் வணங்குவதும், அவர் சொல்லை வேத வாக்காகக் கொள்வதும், அவருக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ள அணியமாய் இருப்பதும் போதையா அல்லது சாபக்கேடா என்று புரியவில்லை. தனிமனித துதி உலகிலேயே உச்ச நிலையில் இருக்கும் சமூகங்களில் ஒன்று நம்முடையது என்பது உறுதி. 

 தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்கு கொள்கைகளும் கிடையாது, கோட்பாடுகளும் கிடையாது. நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு கட்சிக்காரரிடம், உங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் எவையாவது ஐந்தினைக் குறிப்பிடுங்கள் என்று கேட்டுப்பாருங்கள். உங்கள் கட்சியின் பொருளாதாரக் கொள்கை என்ன என்று கேள்வி கேளுங்கள். இடதுசாரி முதல் வலதுசாரி வரையான கட்சி/கொள்கைகளின் வரிசையில் உங்கள் கட்சி எங்கே நிற்கிறது என்று வினவுங்கள். பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரியாது.

 “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்பது தமிழகத்தில் உள்ள எதிர்கட்சியின் முக்கியக் கொள்கை. இதன் அர்த்தம் என்ன என்று அவர்களுக்கும் தெரியாது, நமக்கும் புரியவில்லை. இது பொதுவுடமை சித்தாந்தமா? இல்லை! முற்போக்குக் கொள்கையா? இல்லை! ஏழைகளுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது எனும் வலதுசாரி முரட்டுவாதமா? இல்லை! என்ன கொள்கை இது? இது ஒரு கொள்கையே அல்ல என்பதுதான் உண்மை. இது ஒரு வெற்று முழக்கம். இதற்கு அரசியல் அர்த்தமும் கிடையாது, எந்த சித்தாந்த அடிப்படையும் கிடையாது. கேட்கிறவர்களை ஏமாற்றும் நோக்கத்தை தவிர இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. 

தமிழகத்தின் பல கட்சிகள் எந்தப் பிரச்சினைகளையும் அலசுவதுமில்லை, ஆராய்வதுமில்லை. உலக நடப்புகளைப் பற்றி ஒரு வரி தெரியாது. கட்சித் தலைவர்கள் படிப்பதும் இல்லை, எதையும் தெரிந்து கொள்வதும் இல்லை. யாருக்கும் எதுவும் சொல்லிக் கொடுப்பதுமில்லை. பல தமிழகக் கட்சிகளின் தொண்டர்கள் கட்சித் தலைவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். அவரின் சுயநலத்தை, சூழ்ச்சிகளை கேள்விக்குள்ளாக்குவதில்லை. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்பது போல “தகுதியற்றவனானாலும் தலைவன், அசிங்கமானவனானாலும் அய்யன்” என்று அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். “என் தலைவன் என் உயிர்” எனக்கொண்டு தன்னையே தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதற்கு துணிகிற அளவு போதையில் இருக்கின்றனர் பல தமிழர்கள். இத்தகைய பக்திக்கு, பாசத்திற்கு இந்த தலைவன் ஏற்புடையவனா என ஒரு வினாடிகூட சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பொய்கள், புகழுரைகள், போலிப் பேச்சுக்கள், வாய்ச்சொல் வீரம் என ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வது இந்த அரசியல் போதையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. புதுக்கவிதை இலக்கணம் பற்றி கவிஞர் மு. மேத்தா சொன்னது, இன்றைய அரசியல் உலகைப் புரிந்து கொள்ள உதவும்:  

இலக்கணச் செங்கோல்
 யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி இவை எதுவும்
இல்லாத கருத்துக்கள்
தம்மை தாமே ஆளக்
கற்றுக் கொண்ட 
புதிய மக்களாட்சி
முறையே புதுக்கவிதை. 

கருத்துக்கள், கொள்கைகள் ஆட்சி செய்யமுடியாதச் சூழலிலே பவனி, சேனை, தேர்கள், பல்லக்கு, சிம்மாசனம், செங்கோல் என பகட்டும், பவிசும், பிரம்மாண்டமுமாய் பழைய மன்னராட்சி முறையை புகுத்துவதே இன்றைய அரசியலாய் மரத்துக் கிடக்கிறது. மலர்க் கிரீடம் சூட்டுவது, செங்கோல் கொடுப்பது, எடைக்கு எடை நாணயம் கொடுப்பது, தூக்க முடியாத மலர் மாலைகளைத் தோளில் போடுவது இப்படி அசிங்கம் பண்ணுவதிலும், போட்டிப் போட்டு உருப்படாத தலைவர்களை உத்தமனே எனப் புகழ்வதிலும் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர் தொண்டர்கள். ஒருவித போதையில், அடிமைத் தனத்தில் ஊறித் திளைக்கிறார்கள். இந்தக் கட்சி அடையாளங்களை, பின்னணியைக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடக்கிறது. கட்டப்பஞ்சாயத்து, காவல் துறை வழக்குகள், அரசு அலுவலங்களில் வேலைகள் செய்து கொடுத்தல், பணம் பார்த்தல், பெண் பிடித்தல், சொத்து சேர்த்தல் என வாழ்வைக் கழிப்பதற்கு ஒரே மூலதனம் அரசியல் கட்சியின் அடையாளம்தான். 

அரசியல் கட்சி நடத்துவோருக்கும், அந்தக் கட்சிகளில் திளைத்திருப்போர்க்கும் இந்த போதைதான் வாழ்க்கை. இது இல்லையென்றால் வயிற்றுப்பாடு இல்லை, வாழ்வில் அடையாளம் இல்லை, சமூகத்தில் எந்தப் பங்களிப்பும் இல்லை. பல கட்சிகளில் வயிறு வளர்க்கும் அரசியல்தான் நடக்கிறதே தவிர, யாரையும் எங்கேயும் அழைத்துச் செல்லும் எண்ணமோ, திட்டமோ இல்லை. சாகும் போது வெறும் 120 ரூபாய் பையில் வைத்திருந்த பெருந்தலைவர் காமராசர் தோல்விகரமானவராகவும், லட்சம் கோடிகள் திருடி தன் மனைவிகள் மக்கள் பெயர்களிலெல்லாம் வைத்திருப்பவர் வெற்றிகரமானவராகவும் பார்க்கப்படுகின்றனர். ஒரே ஒரு வேட்டி வைத்திருந்த தோழர் ஜீவா, அரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெற்ற அய்யா கக்கன் போன்றவர்கள் எல்லாம் ஆண்ட, அரசியல் நடத்திய தமிழ் நாட்டில் இன்றைய நிலை உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

 பல முக்கியத் தலைவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, கிரானைட் திருடிய வழக்கு, பல்வேறு ஊழல் வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அரசியல், பதவி, புகழ், அதிகாரம் அனைத்தும் காசு பார்ப்பதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. காசு இருந்தால்தான் அரசியல் நடத்த முடியும்; அரசியல் நடத்துவது காசு பார்க்கத்தான்! அரசியல் போதையுடன் நெருங்கியத் தொடர்பு உடையது காசியல் போதை. பதவிக் கிறுக்கும் பணக் கிறுக்கும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கியத் தொடர்பு உடையவை. தமிழினம் இதில் சிக்கித் தவித்து சீரழிந்து கிடக்கிறது. 

[5] தாழ்வு மயக்கம்/தாழ்ந்த இயக்கம்:

தமிழனை பாதித்திருக்கும் மிகப் பெரிய போதை தன்னைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மைதான் என்றே நினைக்கிறேன். தன்னை தாழ்வாகவேப் பார்த்தல், விதியே என்று வீழ்ந்து கிடத்தல், சுய இரக்கம் இவையும் கூட ஒருவித போதைதான். யதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் மனதை கையாலாகாத வழிகளில் திசைதிருப்பி மனமுடைந்து கிடப்பது; அடிமை நிலையில் கிடந்து அடிவாங்கிக் கொள்வதில் ஒருவித இன்பம் காண்பது எல்லாமே உளவியல் ரீதியிலான ஒரு போதைதான். 

அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் (ஆகத்து 23, 2012) ஒரு செய்தி படித்தேன். சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சண்முகம் அவர்களிடம் உள்ளூர்க்காரர் ஒருவர் முறையிட்டிருக்கிறார். அதாவது தனது வீட்டருகே வாழ்ந்த ஒரு தமிழ்க் குடும்பம் தாழ்ந்த சமூக அந்தஸ்தோடு, தரம் தாழ்ந்த வாழ்க்கை வாழ்வதாக அவர் விமரிசித்தார். அடுக்குமாடி வீட்டில் இருந்த மின்தூக்கியில் புகைப் பிடிப்பதாகவும், லுங்கி கட்டிக்கொண்டு அக்கம்பக்கம் நடமாடுவதாகவும், தனது பேரன் இந்த மாதிரி லுங்கியில் நடமாடும் ஆட்களைப் பார்த்து வளர்வதை தான் விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார். இனவெறி பிடித்த அந்த நபரின் உள்ளக் கிடக்கை வெளிப்படையாகத் தெரிந்தாலும், நாம் சற்றே நமக்குள் எட்டிப் பார்த்தால் சில உண்மைகளும் விளங்கும். 

 நம் வீட்டுக்குள் சுத்தமாக இருக்கும் நாம், நம்மைச் சுற்றி அசுத்தம் சூழ்ந்திருப்பதைப் பற்றி கவலைப் படுவதேயில்லை. வீட்டு அழுக்கு வெளியே போய்விட்டால் நமது பிரச்சினை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறோம். அது அடுத்தவர் பொறுப்பு, அரசின் கடமை. அதன் மோசமான விளைவை நாம்தான் அனுபவிப்போம் என்று நினைப்பதேயில்லை. பொது இடங்களில் சுத்தமில்லை; வாகனங்களில் சுத்தமில்லை; பொருட்களில் சுத்தமில்லை. 

இரண்டு பேய்கள் பேசிக்கொண்டனவாம். சாவதற்காக விஷம் வாங்கிக்குடித்தேன்; விஷத்தில் கலப்படம் இருந்ததால் பிழைத்துக் கொண்டேன் என்றது ஒரு பேய். பிறகு எப்படி செத்தாய் என்று கேட்டது அடுத்தப் பேய். காப்பாற்றுவதற்காக மருந்து தந்தார்கள்; அந்த மருந்திலிருந்த கலப்படத்தால் செத்துப் போனேன். இதுதான் இன்றைய இழி நிலை.

வள்ளுவம் சொல்கிறது: 

புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும். 

புறத்தூய்மையில் கவனம் செலுத்தாத நாம், வாய்மையால் அகத்தூய்மையை காத்துக்கொள்கிறோம். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று வேறு எந்த கலாச்சாரமும் சொல்லவில்லை. நம்மில் பெரும்பாலானோர் நம்பகத்தன்மை உள்ளவர்களாய் இருக்கிறோம்; நல்லவர்களாய் இருக்கிறோம். ஆனால் நமக்குள் சுத்தமாக இருந்தாலும், நம் சமூகத்து அழுக்கை சகித்துக்கொள்கிறோம். மேல் நாடுகளில் மக்கள் அப்படி-இப்படி இருந்தாலும், தலைவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நாம் நேர்மையானவர்களாக இருந்தாலும், நமது தலைவர்கள் அயோக்கியர்களாக இருப்பதை அனுமதிக்கிறோம். லஞ்சமும், ஊழலும், உண்மையின்மையும் மலிந்து கிடக்கின்றன. மொத்த தமிழ் சமூகமும் அசுத்தமாய் கிடக்கிறது. இப்படி அசுத்தமாக இருந்தால்தான் நம்மால் இயல்பாக வாழ முடியும் என்பது போல நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். தாழ்வு மயக்கத்தில் கிடக்கிற நாம் தாழ்ந்த இயக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். இரண்டுக்கும் இடையே உள்ள நெருங்கியத் தொடர்பை தெரிந்து, மயக்கத்தை விடுத்து நமது இயக்கத்தை உயர்த்திக் கொள்வது எப்படி? 

 போதை தெளிந்த பாதை: குறைகளைப் பற்றியே, போதைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை. இந்த போதைகளிலிருந்து மீள்வது எப்படி என்று சிந்தித்தாக வேண்டும். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மை அறிதல், நாமாகவே இருத்தல்! நாம் யார், நமது மூதாதையர் யார், நமது வரலாறு என்ன, நமது குறை-நிறை என்ன என்றெல்லாம் ஒரு மீளாய்வு செய்வது முதற்படி. நம்மை அறிவது பற்றி சி.சு. செல்லப்பா எழுதிய “மாற்று இதயம்” எனும் கவிதை அழகாகச் சொல்கிறது:

அரசியல்வாதியின் இதயம் வேண்டாம் எனக்கு 
அதுதான் இப்போ ரொம்ப மலிவா இருக்கு. 
மதவாதியின் இதயம் வேண்டாம் எனக்கு 
அதுதான் இப்போ மரத்துப் போய் கிடக்கு.
வேதாந்தியின் இதயம் வேண்டாம் எனக்கு
 அது இப்போ வரண்டு போய் கிடக்கு. 
விஞ்ஞானியின் இதயம் வேண்டாம் எனக்கு
 அதன் சிறப்பான பணி அழிவுக்கு!
ஒரு குழந்தை இதயம் வேண்டாம் 
அதுக்கு கபடம் தெரியாது!
ஒரு வாலிபன் இதயம் வேண்டாம்
அதுக்கு நிதானம் தெரியாது!
ஒரு நடுவயது இதயம் வேண்டாம் அதுக்கு
எதிலும் சந்தேகம். 
ஒரு கிழட்டு இதயம் வேண்டாம்
அது கூறு கெட்டிருக்கும்.
 ஓ! டாக்டர்! மன்னிக்கவும் மாற்று இதயம் வேண்டாம் எனக்கு!
 எவன் உண்ர்ச்சியும் தேவையில்லை எனக்கு
என் இதயம் பாடம் கற்றிருக்கு.
அது தன் வழியே போய் ஒருங்கட்டும்! 
ஓ! டாக்டர்! உங்களுக்குத் தொந்தரவு தந்தேனா?
மன்னிக்கவும்!

நாம் நாமாகவே இருக்க முனைகிற அதே வேளையில் நமது நிலை மோசமாக இருப்பதை மாற்ற முயற்சித்தே ஆகவேண்டும். ஒரு புதிய துவக்கத்துக்கு நம்மை அணியமாக்கிக் கொள்ள வேண்டும் மகாகவி பாரதியார் அறிவுரைப்பது போல: 

சென்றதினி மீளாது, மூடரே நீர் 
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் 
குழியில்வீழ்ந்து குமையாதீர்! 
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் 
என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்:
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. 


நாமாக இருந்து, ஒரு மாற்றத்துக்கு நம்மை அணியமாக்கிய பிறகு, நாம் செய்யவேண்டியது அறிவுக்கு முதலிடம் கொடுப்பதுதான். வள்ளுவம் குறிப்பிடுகிறது: 
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 

அறிவுக்கு வேலை கொடுக்கும்போது நம் போதை தெளியும் பாதை தெரியும். மதம் என்பது ஒருவருடைய, ஒரு குடும்பத்துடைய தனிப்பட்ட விடயம். அதில் தலையிட அரசுக்கோ, அண்டை வீட்டாருக்கோ, வேறு யாருக்கோ உரிமை இல்லை. எல்லா மத நம்பிக்கைகளையும் மதிப்பதும், அனைவரின் மத உணர்வுகளையும் புரிந்து கொள்வதும், ஆனால் எதையும் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதும்தான் சிறப்பு என நினைக்கிறேன். சுவாமி விவேகானந்தரின் ஓர் உவமை இங்கே நினைவுகூறத் தக்கது. இறையருள்/இயற்கை என்பது எல்லா இடத்தும் மையப்புள்ளியைக் கொண்ட சுற்றளவே இல்லாத ஒரு மாபெரும் வட்டம்; மனிதன் என்பவர் தன் மீது மையப்புள்ளியைக் கொண்ட சுற்றளவே இல்லாத இன்னொரு மாபெரும் வட்டம். என் மதம் தமிழ் மதம்! இயற்கையை வணங்குதல், முன்னோரை நினைந்தேற்றுதல், பரம்பொருளைப் போற்றுதல் அதன் அம்சங்கள்! சாதியைப் பொறுத்தவரை, முண்டாசுக்காரன் சொல்வதுதான் முறையானது: 

“சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!” அவனே தொடர்கிறான்: “சாதி மதமெனப் பாரோம், உயர் சன்மம் இத்தேசத்தில் எய்தினராயின், வேதியராயினும் ஒன்றே, அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே!” 

 மது-மாது போதைகள் விழுப்பம் தருவது இல்லை என்பதால், இவை போன்ற “தீயவை தீய பயத்தலால்” அவற்றைத் தொடாமலிருப்பதோ, தொடராமலிருப்பதோ சிறப்பு. ஒரு விருந்தில், விழாவில் என்றோ ஒரு நாள் எப்போதோ ஒரு முறை ஒரு குவளை மது குடித்தாலும் குடிக்கலாம்; ஆனால் எப்போதும் எந்த நிலையிலும் உரிமையில்லாப் பெண்ணோடு உறவாடுவது தீங்காகவே முடியும். “கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்கிறார் பாரதியார். “பெண்ணென்று வந்ததொரு மாயப் பிசாசாம்” என்று அவளை சதைப் பிண்டமாக, தீட்டாக, தீமையாக, போகப் பொருளாக, பொல்லாப் பிறவியாகப் பாராமல், மனிதராகப் பார்ப்பது மிக முக்கியம். அன்னையே, அம்மாவே, ஆண்டாளே என்று புனிதையாக்குவதும் போலியானது. கண்ணைப் பார்த்துப் பேசி, அவள் கருத்துக்களுக்கு செவி மடுத்து, சமமாகப் பாவித்து, சக உயிராக நடத்துவதே இயல்பு, சிறப்பு. அறிமுகமாகும் ஒரு பெண்ணோடு (அவர் விரும்பினால்) கை குலுக்கிக் கொள்வதிலோ, அறிமுகமானப் பெண்ணிடம் ‘இந்த உடை உங்களுக்கு அழகாக இருக்கிறது’ என்று சொல்வதிலோ எந்தத் தீங்கும் வந்துவிடப் போவதில்லை. பாலியல் பாரபட்சமின்றி பார்ப்பதும், பழகுவதும் சாத்தியமே. 

 ‘கலை’ என்ற நிலை மாறி, ‘விலை’ ஒன்றே குறிக்கோளாய் இயங்கும் வெள்ளித் திரை, சின்னத் திரை படைப்புகளைத் தள்ளிவிட்டு, அந்தக் கலைஞர்களை தலைவர்களாய் ஏற்பதை விடுத்து, நடனம், நாட்டியம், நாடகம், நாட்டுப்புறவியல் எனும் உயர்கலை நோக்கி உயரேப் பார்ப்பது சிறப்பு. “நிறை காக்கும் காப்பை” இன்றையத் தலைமுறைக்குச் சொல்லித்தந்து சிறைப்படுத்தும் திரைகளைக் களைவது நல்லது. அதே போல அரசியல் தளத்தில் கொள்ளைகளை விடுத்து, கொள்கைகளை எடுத்து, கோட்பாடுகளைக் கொணர்ந்து ஒரு புதிய துவக்கத்துக்கு வித்திடுவதும் அவசியம். மகாத்மா காந்தியைப் பாடும் மகாகவி பாரதியார் அழகாகச் சொல்கிறார்: 

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
 பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
 மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்;
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை
மற்றாங்கு இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை, பெருமான்! 

இப்படி “நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளைக்” கைக்கொள்ளும்போது தாழ்வு மயக்கம் மறைந்து, தாழ்ந்த இயக்கம் தொலைந்து, தலை நிமிர்ந்த தமிழராய் உயர்வோம்! உறுதி!


சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
ஆகத்து 2012
[vuukle-powerbar-top]

Recent Post