Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'காவல்துறையிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்'- கூடங்குளம் பெண்கள் முதல்வருக்கு கடிதம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் மூலமாக கூடங்குளம் மற்றும் வைராவிக் கிணறு பகுதியை சேர்ந்த பெண்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளனர் . கூடங்குளத்தில் கடந்த மாதம் நடைபெற்ற காவல்துறை ஒடுக்குமுறைக்கு பிறகு தொடர்ந்தும் அந்த பகுதியில் உள்ள ஆண்கள் நடமாடவே முடியாத படி காவல்துறை ஆண்களை குறிவைத்து ஒடுக்கி வருகிறது . அவர்களை கைது செய்து வருகிறது . இதனால் குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. வாழவே முடியாத நிலைக்கு இப்பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் தமிழக முதல்வரை இந்த விடயத்தில் தலையிட்டு காவல்துறையின் அராஜகத்தை முடிவிற்கு கொண்டுவருமாறு இப்பகுதியை சேர்ந்த பெண்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்கள் அனுப்பிய கடிதம் பின்வருமாறு



கூடங்குளம் மற்றும் வைராவிக்கிணறு பெண்கள்
திருநெல்வேலி மாவட்டம்

மாண்புமிகு முதல்வர் அவர்கள்
புனித ஜார்ஜ் கோட்டை
சென்னை

மதிப்பிற்குரிய

வணக்கம். கடந்த செப்டம்பர் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் நடந்த அசம்பாவிதங்களுக்குப் பிறகும், காவல்துறையின் அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் எங்கள் ஊரான கூடங்குளம் மற்றும் வைராவிக்கிணறு பகுதிகளில்  தொடர்ந்து நடக்கின்றன.

காவல் துறையினர் பகலில் ஊர் முழுவதும் தெருக்கள் தோறும் சுற்றித் திரிகின்றனர். எங்கள் ஆண்கள் ஊருக்குள் நிம்மதியாக நடமாடவோ, வேலைக்குப் போகவோ இயலாத நிலையில் ஒளிந்து வாழ்கிறார்கள். காவல் துறையினர் இரவுகளில் வந்து வீட்டுக் கதவுகளைத் தட்டி ஆண்கள் எங்கே என்று தேடுகின்றனர். ஓர் இராணுவ முகாமில் வாழ்வது போன்ற நிலை இங்கே நிலவுகிறது. பெண்களாகிய நாங்களும், எங்கள் குழந்தைகளும் அச்சத்திலும், பீதியிலும் வாழ்கிறோம்.

எங்கள் ஊரிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் மேலும் மேலும் வழக்குகள் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பிணையில் விடுவதற்கு பதில், இன்னும் அதிகமான பேரை கைதுசெய்ய முயற்சிக்கிறார்கள்.

தயவு செய்து கைதானவர்களை விடுதலை செய்து, காவல் துறையினரை காவல் நிலையத்தில் மட்டும் இருக்கும்படி உத்தரவிடுங்கள். இந்த காவல் துறை நெருக்கடி இப்படியேத் தொடர்ந்தால், நாங்கள் ஒட்டு மொத்தமாக உயிரை விட வேண்டிவரும் என்று நாங்கள் உண்மையிலேயே அஞ்சுகிறோம். அம்மாதிரியான ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்படக்கூடாது என்றும், தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு எங்களை, எங்கள் கண்ணியத்தை, எங்கள் குடும்பங்களைக் காத்து உதவ வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


தங்கள் உண்மையுள்ள,

கூடங்குளம் மற்றும் வைராவிக்கிணறு பெண்கள்



[vuukle-powerbar-top]

Recent Post