Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கெஜ்ரிவால் மீது அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

சாக்கடையைப் போன்று இருக்கும் அரசியலில் இறங்குவதன் மூலம் ஊழலுக்கு எதிராக எத்தகைய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்ற தனது கேள்விக்கு அர்விந்த் கெஜ்ரிவால் குழுவினர் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு முதன் முறையாக டெல்லி வந்த அன்னா ஹசாரே, செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். கட்சிக்கு உறுப்பினர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள், கட்சியை நடத்த எவ்வாறு பணம் திரட்டப்போகிறீர்கள், தேர்தலின்போது வேட்பாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றெல்லாம் தான் கெஜ்ரிவால் குழுவிடம் கேள்விகள் எழுப்பியதாக ஹசாரே கூறியுள்ளார்.

அரசியல் களம் மதிப்பு மிக்கது அல்ல. அது சரியான வழியும் அல்ல என்று தெரிவித்த ஹசாரே, போராட்டக்களம்தான் மதிப்புமிக்கது என்றார்.

எனவே, அரசியல் கலப்பு இல்லாமல், ஊழலுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து தனது சகாக்களுடன் விவாதிக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

மாற்று ஏற்பாடு குறித்து இதுவரை தான் பேசியது அனைத்தும் அரசியல் மாற்று குறித்து அல்ல என்று கூறிய ஹசாரே, அரசியல் மூலம் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் இல்லை என்று தெரிவித்தார்.

ஹசாரேயின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா, அரசியல் முழுவதுமாக கரைபடிந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post