Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

'மத' அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் 'இந்துமத' தமிழ் மாணவர்கள் கொழும்பில்

மத வெறி என்பது தற்போது உலகெங்கும் பரவி வருகின்றது. இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்பட்ட காணொலிக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து சில நாடுகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் மேற்குலக தூதரகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இலங்கையிலும்  பல்வேறு மத வெறிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மிருக பலி மேற்கொள்ளப்படும் இந்துக்களுக்குச் சொந்தமான இலங்கையிலுள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றை எதிர்த்து அண்மையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வரம் பத்திர காளி கோவிலில் காலாதி காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிருகபலியை எதிர்த்து புத்த பிக்குகளும் மிருகவதை எதிர்ப்புக் குழுக்களும் அண்மையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதுடன், இலங்கை அரசாங்கம் மதம் என்ற பெயரில் மிருகங்களைக் கொல்லும் முறைமையை ஒழிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர். மிருகங்களைப் பலியிடுவது புத்த மதக் கொள்கைக்கு எதிரானது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இந்நிலையில் கொழும்பு இந்துப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் முரண்பாடான சில முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். அதாவது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பைபிள்களை வழங்கியிருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

குறித்த சில பாடசாலை அதிபர்களைச் சந்தித்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் பைபிள்களை வழங்கியதாகவும் அறியப்படுகிறது. இது பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என இந்து மதத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர். 

கடந்த 18ம் திகதி பம்பலப்பிட்டி இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகள் பாடசாலை விட்டு வரும்போது பைபிள் ஒன்றுடன் வீடு வந்ததாக இவரது தந்தையாரான புவனேஸ்வரன் தெரிவித்தார். "எனது மகளின் கைகளில் பைபிளைப் பார்த்த நான் மிகவும் அதிர்ச்சியமடைந்தேன்" என அவர் தெரிவித்தார். 

இதன் பின்னர் குறித்த தந்தையார் தனது மகளிடம் இது தொடர்பாக விசாரித்த போது தனது பாடசாலையின் வெளிவாயிலருகில் வைத்து சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரும் வெளிநாட்டவர் ஒருவரும் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்கியதாக மகள் தெரிவித்திருந்தார். "பாடசாலைக்கு வெளியே நிற்கும் சிலர் புத்தகங்களை உங்களிடம் தருவார்கள் என்றும் அதனை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறும் எமது ஆசிரியர் எம்மிடம் தெரிவித்தார்" என தரம் 07ல் கல்வி கற்கும், புவனேஸ்வரனின் மகளான அப்கிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார். "அந்தப் புத்தகம் பார்ப்பதற்கு நாட்குறிப்பு போன்று மிக அழகாக இருந்தது. இப்புத்தகம் உங்களுக்குத் தேவைப்படாவிட்டால் நீங்கள் அவற்றை வேறு யாரிடமாவது கொடுக்கலாம்" என பைபிளை வழங்கிய அந்நியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அப்கிமா மேலும் குறிப்பிட்டார். 

இதே பாடசாலையில் கல்வி கற்கும் வேறொரு மாணவியின் தந்தையாரான ரவி என்பவரும் தனது மகளிடம் பைபிள் ஒன்று பலவந்தமாக வழங்கப்பட்டதாக கூறினார். "பாடசாலை வளாகத்திற்குள் வைத்தே எனது மகளிடம் பைபிள் ஒன்று கொடுக்கப்பட்டது. உண்மையில் பாடசாலை அதிபரின் அனுமதியில்லாது அவர்கள் இதனைச் செய்ய முடியாது" என ரவி சுட்டிக்காட்டினார். 

இந்துப் பாடசாலை ஒன்றில் இவ்வாறான புத்தகங்கள் வழங்க அனுமதிக்கப்பட்டமை மிக வேதனை தரும் விடயம் என பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தையாரான பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். "நாங்கள் கிறிஸ்தவ மதத்தை எதிர்ப்பவர்கள் அல்லர். ஆனால் இவ்வாறான புத்தகங்களை வழங்கி மாணவர்களின் மனநிலையை மாற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள்" என அவர் மேலும் தெரிவித்தார். 

இவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளில் தாம் ஈடுபடவில்லை என பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மற்றும் இராமநாதன் இந்துக்கல்லூரிகளின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பாடசாலை வளாகத்திற்கு வெளியில் வைத்தே பைபிள் வழங்கப்பட்டதாக இவ்விரு கல்லூரி நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர். தாம் பாடசாலை வளாகத்திற்குள் வைத்து பைபிள்கள் வழங்கத் தடைவிதித்ததாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்தே கத்தோலிக்க புத்தகங்கள் வழங்கப்பட்டதாக அதிபர் கோதை நகுலராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அதிபர் நகுலராஜா, 'சண்டே லீடர்' பத்திரிகையிடம் கருத்துக்களை வழங்க மறுத்து விட்டார். தான் ஏற்கனவே தமிழ் ஊடகம் ஒன்றிடம் இவ்வாறான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். "எமது பாடசாலை மாணவர்களிடம் இவ்வாறான புத்தகங்களை வழங்குவதற்கு நாம் அனுமதிக்கவில்லை. பாடசாலைக்கு வெளியே வைத்து இவை வழங்கப்பட்டதால் இது தொடர்பில் நாம் எந்தவொரு கருத்துக்களையும் கூறமுடியாது" என நகுலராஜா குறிப்பிட்டுள்ளார். 

"எமது பாடசாலைக்கு வருகைதந்திருந்த கத்தோலிக்க குழுவினர் என்னிடம் 400 பைபிள்களை தந்திருந்தனர். இவற்றில் 200 பைபிள்களை நான் மாணவர்களுக்கு வழங்கிவிட்டேன். மீதி 200 என்னிடம் உள்ளன. எமது பாடசாலையில் கல்வி கற்கும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டுமே இந்த பைபிள்களை வழங்கியிருந்தேன்" என நுகேகொட தமிழ் வித்தியாலய அதிபர் தியாகராஜா தெரிவித்துள்ளார். 

மீதி பைபிள்களை தான் திருப்பி கொடுத்த போது, குறித்த கத்தோலிக்க குழுவினர் எதிர்காலத்தில் அவை தேவைப்படலாம் என்பதால் அதனை பாடசாலையில் வைக்குமாறு தன்னிடம் குறிப்பிட்டதாக தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார். 

"அவர்களது நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இராமநாதன் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் எனது இரு மகள்மாரும் இரு பைபிள்களை வீட்டிற்கு எடுத்துவந்திருந்தார்கள்" எனவும் தியாகராஜா குறிப்பிட்டார். 

செய்தி வழிமூலம் : The Sunday Leader By Chrishanthi Christopher 
மொழியாக்கம் :கவாஸ்கர்
[vuukle-powerbar-top]

Recent Post