Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சாதி மத சமயங்கள் மறுத்து உலகில் சமரசம் உலாவ வித்திட்ட வள்ளலாரின் பிறந்த நாள் இன்று
வள்ளலாரின் கையழுத்து 


சாதி மத சமயங்களை மறுத்து உலகில் சமரசம் உலவ வித்திட்ட வள்ளலாரின் பிறந்த நாள் இன்று 

தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு வடமேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூரில் 1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் மாலை 5:30 மணிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் இராமையா பிள்ளை, சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகவாக பிறந்தார். இராமையா பிள்ளை கிராமக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். சின்னம்மையார் பொன்னேரிக்கு அருகில் சின்னக்காவனத்தில் பிறந்து வளர்ந்தவர். இராமையா பிள்ளையின் முதல் ஐந்து மனைவியர் ஒருவர் பின் ஒருவராக இறக்கவே ஆறாவது மனைவியாக சின்னம்மையார் வாழ்க்கைப்பட்டார். 

ஓதாதுணர்தல்

ராமலிங்கர் பள்ளிப் பருவம் எய்தியதும் தமையனார் சபாபதி பிள்ளை தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் தமது ஆசிரியரான மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார். ராமலிங்கரின் அறிவையும், திறனையும் கண்ட மகாவித்துவான் இவர் ஒதாமல் உணர வல்லவரென்று உணர்ந்து கற்பிப்பதைக் கைவிட்டார். ராமலிங்கர் எவ்வாசிரியரிடத்தும் பயின்றதில்லை. இறைவினிடமே ஓதாது உணர்ந்தார். 

சன்மார்க்கம் தோற்றுவித்தல்

சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் நெறியை ஏற்படுத்தி அதைப் பரப்ப 1865-ல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவினார். 1867-ல் திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் அச்சிடப்பட்டு வெளியாயின. கடவுளின் அருளை எவ்வாறு பெறக்கூடுமெனில் ஜீவகாருண்ணிய ஒழுக்கதினால் பெறக்கூடுமல்லாது வேறு எவ்வழியிலும் பெறக்ககூடாது. எந்த வகையிலும் ஆதாரமில்லாத எழைகளுக்கு உண்டாகின்ற பசி என்னும் ஆபத்தை நிவர்த்தி செய்வதே ஜீவகாருண்ணியத்தின் முக்கிய லட்சியம். 
அதன்படி 23.05.1867-ல் அற்றார் அழிபசி தீர்க்கும் வண்ணம் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார். அன்று வள்ளற்பெருமான் காட்டிய வழியில் இன்றும் ஜீவகாருண்ணியத் தொண்டு நடந்து வருகிறது. 

தமிழ்நாட்டில் மக்களுக்கு முதன்முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியும், முதியோர் கல்வியை ஏற்படுத்தியும், மருத்துவம், அறிவியல், மொழியியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும், பெண்களுக்கு கல்விமுறை ஏற்படுத்தியும், சாதி  மறுப்பு திருமணங்கள் ஊக்குவித்தும், மூடநம்பிக்கைகளை ஒழிக்க பரப்புரை செய்தும்  பெருமை சேர்த்துள்ளார் வள்ளல் பெருமானார். 

தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தையும், மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கம் நிறுவி அதில் ஒரு தனிக் கொடி, தனி மந்திரம், தனிச் சபையையும் அமைத்தவர் பெருமானார். 

வள்ளலாரின் தனிச்சிறப்பு 

இந்து மதமும் சைவ மதமும் தளைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில், வள்ளலார் இந்த சமயங்களில் உள்ள ,புராணங்கள் , கட்டுக் கதைகள் முதலானவற்றில் லட்சியம் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கடவுள் என்பவர் ஒருவரே, அவர் ஒளியின் ஊடாக அண்ட  சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார். ஒளியை கடவுளாக பாவித்து , உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக கொண்டு , அன்பும், தயவு சார்ந்த வாழ்கையை பழகுதலே உலகில் நிரந்தர அமைதியை நிலை நாட்டும். அதுவே சமரச சன்மார்க்க உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார் போதித்தார். 

சாதிகள் மதங்கள், சமயங்கள், அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார் . சிறுதெய்வ வழிபாடு , கற்சிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். 

முடிவில் இவர் கூறிய கருத்துக்களை யாரும் கேட்பதாக தெரியவில்லை. அதனால் மனம் நொந்து போய் " நாம் சொல்லும் கருத்துக்களை நீங்கள் யாரும் கேட்பதாய் இல்லை , இதே கருத்தை வெளிநாட்டில் இருந்து மக்கள் உங்களுக்கு போதிப்பார்கள், கடை  விரித்தோம் கொள்வாரில்லை , கட்டி விட்டோம்" என்று கூறி வேதனைப் பட்டார். 

தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் வள்ளலார் கூறிய கருத்துக்களை சன்மார்க்க வழியை சேர்ந்தவர்கள் இது வரை மக்களிடையே கொண்டு செல்லவில்லை. ஏசுநாதரின் கருத்துகளை உலகமெல்லாம் பரப்ப 12 சீடர்கள் கிடைத்தது போல் வள்ளலாருக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர் கருத்துக்களை தமிழ்நாட்டில் கூட பரப்ப முடியாமல் போனது தமிழினத்திற்கு இழப்பு  தான். 

உலகம் போற்றக் கூடிய தத்துவத்தை 6500 அழகு தமிழ் பாடல்களாக வடிவமைத்து வழங்கிய வள்ளலை தமிழர்களே மறந்தோம் என்பது தான் வேதனை. அவருடைய வழியை பின்பற்றும் சிலரும் , வெறும் சடங்குக்காக அவர் இயற்றிய அருட்பா படித்தும், சில நூறு பேர்களுக்கு அன்னதானம் வழங்கியும் வருகின்றனர். 

சமுதாய ரீதியில் வள்ளலாரின் கருத்துக்களை கொண்டு சேர்க்கவில்லை. மக்களின் பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்காமல், உலகில் தற்போது அரங்கேறிவரும் வன்முறையை, அநீதியை கண்டிக்காமல் , கண்டும் காணாதவர் போல்  இருந்கின்றனர் வள்ளலாரின் பக்தர்கள். அதனால் சமுதாயத்தில் வள்ளலாரின் கொள்கைகளை கொண்டு சேர்க்க முடியாமலே போனது.

 "கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக"  என்று கண்டித்து முழக்கமிட்டவர் வள்ளலார். ஆனால் இன்று வள்ளலாரின் பக்தர்களோ, எதையும் கண்டிக்கவில்லை , எதற்கும் குரல் கொடுக்கவில்லை . இதனால் தமிழ் சமுதாயம்  இழந்தது அதிகம். அரசுக்கு வழிகாட்ட வேண்டிய சன்மார்க்கம் , இன்று அரசின் கவனத்தை கூட ஈர்க்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய பின்னடைவு? 

இனியாவது தமிழரின் பெருமையாகிய வள்ளலாரின் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வள்ளலாரின் பக்தர்கள் முன்வருவார்களா ? மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வார்களா?[vuukle-powerbar-top]

Recent Post