Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதிதாக மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் சரியாகக் கிடைக்கவில்லை


முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் சரியாகக் கிடைக்கப்பெறாததால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
உணவு, வீட்டு வசதி சீராக இன்மையால் குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் சுயதொழில் செய்வதற்கும் தொழில் இட அனுமதி மற்றும் தொழில் உபகரணங்கள் இன்மையால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை எனவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஒரு தறப்பாழ் மற்றும் ஐந்து தடிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதனைக் கொண்டே தாம் குடிசை அமைத்து வாழ்ந்து வருவதாகவும் இதனால் பெண்கள், குழந்தைகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், மழைகாலம் தொடங்கவுள்ளதால் வீட்டு வசதியற்ற நிலையில் தொடர்ந்து குடிசையில் வாழமுடியாது என்றும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தற்போது உணவு நிவாரணத்தில் ஒரு நபருக்கு ஒருமாதத்துக்கு பத்தரை கிலோ அரிசியும், 2.400 கிலோகிராம் பருப்பும், 600 கிராம் தேங்காய் எண்ணெயும், 600 கிராம் சீனியுமே வழங்கப்படுவதாகவும், இது தமக்கு போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிவாரணம் போதாத நிலையில் தாம் தொழில் செய்து வருமானம் ஈட்டு வதற்கும் தொழில் உபகரணங்கள் இல்லை எனவும் இது குறித்து அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் எம்யூ 100 கிராம அலுவலர் பிரிவில் 380 குடும்பங்கள் மீளக் குடியமர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான வீட்டு வசதிகள் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை.

செம்மன்குன்று, புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய இடங்கள் போரால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு 300 புதிய வீடுகள் மக்களுக்குக் கட்டிக்கொடுக்க வேண்டுமென அந்தப் பகுதி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post