Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையுடனான கூட்டுப்பயிற்சியை தென்மாநிலங்களில் நடத்த வேண்டாம் – இந்தியக் கடற்படைக்கு உத்தரவு

இலங்கை கடற்படையுடனான கூட்டு கடற்போர்ப் பயிற்சியை தமிழ்நாடு. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களுக்கு அப்பால் நடத்தும்படி, இந்தியக் கடற்படைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

இலங்கை கடற்படையும், இந்தியக் கடற்படையும் இணைந்து SLINEX என்ற பெயரில் கூட்டு போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகின்றன. 

2005இல் முதலாவது கூட்டு கடற்போர்ப் பயிற்சி நடத்தப்பட்டது. 

போரின் காரணமாக ஆறு ஆண்டுகளாக தடைப்பட்ட இந்த கூட்டுப்பயிற்சி கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. 

கடந்த செப்ரெம்பரில் திருகோணமலைக் கடற்பரப்பில் இருநாட்டுக் கடற்படைகளும் இந்த கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன. 

இந்தநிலையில், இந்த ஆண்டு இந்தியக் கடற்பரப்பிலேயே இந்தக் கூட்டுப்பயிற்சி நடத்தப்பட வேண்டும். 

இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது. 

எனினும், “இலங்கை கடற்படையுடனான கூட்டுப்பயிற்சிகளை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக கடற்பகுதிக்கு வெளியே நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளது” என்று இந்தியக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலேயே இந்தியப் பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post