Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரியில் வெள்ளப் பெருக்கு. மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதிகரித்தது


தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் தினமும் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 29-ந் தேதி முதல் கிருஷ்ணராஜ சாகர்அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் தினமும் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. 

கபினி அணையில் நீர்வரத்து குறைந்ததால் அங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதற்கு பதில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

இதற்கிடையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல்லில் 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 1/2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. 

இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகம், கர்நாடகம் உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல்களும் இயக்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

 நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 9,900 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரத்து 350 கன அடியாக உயர்ந்தது. இன்று அதிகாலை 10 ஆயிரத்து 940 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 701 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 70.60 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post