Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் : சல்மான் குர்ஷித்

மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, தம் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் அவருக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வரும் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால், சல்மான் குர்ஷித் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் நிதியை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மீது எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 

இந்த குற்றச்சாட்டுக்களை நேற்று மறுத்த சல்மான் குர்ஷித், அதுதொடர்பான ஆவணங்களை காட்டினார். ஒருகட்டத்தில், செய்தியாளர்களின் சரமாரியான கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர், தம் மீதான குறறச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்றார். 

மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என்றும் தன் மீது குற்றம் சாட்டுபவர்கள், தனது அரசியல் எதிரிகள் போல் நடந்துக் கொள்கின்றனர். இதற்கு கூட கோபப்படாவிட்டால், அப்புறம் தான் என்ன மனிதன்? தான் ஒன்றும் கல் அல்ல என்றார். 

கெஜ்ரிவால் பிடிவாதம் : இதற்கிடையில் சல்மான் குர்ஜித் பதவி விலக வேண்டும் என்பதில் சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். இந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். 

விசாரணை நடத்தப்படுவது நல்லது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலையில் விசாரணை நடைபெற வேண்டும். ஆனால் இந்த நிமிடம் வரை சல்மான் குர்ஷித் சட்ட அமைச்சராக இருக்கிறார். தனக்கு எதிரான ஆதரங்களையும், சாட்சிகளையும் அவர் களைத்துவிடுவார். 

எனவே அவர் முதலில் பதவியை விட்டு விலக வேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டும். அதன் பிறகே நேர்மையான விசாரணை நடப்பது சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அரசியல் உள்நோக்கம் காரணமாகவும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவுமே கெஜ்ரிவால் போன்றவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாம் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பயந்து, சல்மான் குர்ஷித் பதவி விலகத் தேவையில்லை என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதேபோன்று, காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பலரும் சல்மான் குர்ஷித்துக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post