Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தீவிரம் அடைந்ததால் பாசனத்துக்கு தண்ணீர் தேவை ஏற்படவில்லை. இதன் காரணமாக கடந்த 23-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 63.77 அடியாக இருந்தது.

திறப்பு நிறுத்தப்பட்டு உள்ள நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரம் கனஅடி முதல் 4 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து நேற்று 65.48 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் தேவை ஏற்பட்டு உள்ளது. இதனால் நேற்று காலை முதல் டெல்டா பாசனத்திற்காக மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 4 தினங்களாக உயர்ந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையத்தொடங்கி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,711 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post