Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

“டெங்கு உயிர்க்கொல்லி காய்ச்சல் அல்ல” டெங்கு பற்றி ஓர் அறிமுகம்

“டெங்கு உயிர்க்கொல்லி காய்ச்சல் அல்ல” 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் ஏராளமானோர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் திங்கட்கிழமை இரவு டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறுமி பலியாகியுள்ளார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் எட்டு பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் டெங்கு குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும், டெங்கு உயிர்கொல்லி காய்ச்சல் இல்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும், டெங்குவிற்கு காரணமாக இருக்கும் கொசுவை ஒழிப்பதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ரேபிட் டெங்கு பரிசோதனை மூலம் நோயை உறுதிப்படுத்த முடியாது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த பரிசோதனைகளால் தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த எலிசா பரிசோதனை உதவும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இந்த வசதி தற்போது 32 இடங்களில் உள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளுக்கு விரைவில் விரிவுப்படுத்தப்படும் என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 800 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த முகாம்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசு மீது குற்றச்சாட்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட் 200 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதாக மாவட்டங்கள் தோறும் திரட்டப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் நாகப்பட்டினம், வேலூரில் தலா இரண்டு பேரும் , மதுரையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

135 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும், 60 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த விபரங்கள் கூறுகின்றன. சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 38 பேரில் 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க, தமிழகத்தில் 59 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

முதலமைச்சர் அறிவிப்புக்கும், தனித்தனியே அரசு அதிகாரிகளிடம் பெறப்பட்ட புள்ளி விபரங்களுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு தரப்பு தகவல்கள் அனைத்தும் அரசு மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை பற்றியது மட்டுமே ஆகும். 

தனியார் மருத்துவனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவர்கள் பற்றியோ, அங்கு ஏற்படும் உயிரிழப்புகள் பற்றியோ இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதே சமயம் பாதிக்கக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவது ஏன் என்ற கேள்வியும் எழ செய்கிறது. 

விழிப்புணர்வில்லாத மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அடித்தட்டு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை நிலையாக இருக்கிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், இந்த காய்ச்சலால் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக, காய்ச்சல் என்றாலே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒருவகை அச்ச உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்த நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழக அரசு சொல்கிறது. 

எனினும், கொசுக்களின் எண்ணிக்கை குறையவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் என்றால், டெங்கு பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் தமிழகத்தில் உள்ள ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

சென்னையில் உள்ள புதுப்பேட்டை இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதை இப்பகுதிக்கு சென்ற சில நிமிடங்களில் புதிய தலைமுறை குழு உணர்ந்து கொண்டது. குடிநீரை பிடித்து பாதுகாப்பற்ற முறையில் வைத்திருக்கக் கூடாது என்று அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இங்குள்ள மக்கள் அதனைப் பின்பற்றுவதில்லை. 

இதனிடையே, டெங்கு பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

அரசின் முயற்சிகளுக்கு, மக்கள் கை கொடுத்தால் மட்டுமே டெங்குவை முற்றுலுமாக கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
[vuukle-powerbar-top]

Recent Post