Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி ~ ஜெயலலிதா

தமிழகத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மழை தொடர்பான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்த 20 பேரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மழையால் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பகுதியாக சேதமடைந்த குடிசைகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், ஆடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டின் இறுதி வரை தொடரும் என்பதால், வாரம் ஒரு முறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post