Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு விஜயகாந்த் மனு

தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக விஜயகாந்த் உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி பெற்றுத்தருமாறு சபாநாயகரிடம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் நேரில் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த தகவலை சட்டசபை தே.மு.தி.க. கொறடா வி.சி.சந்திரகுமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அக்கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. சட்டசபையில் இரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் மோதிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாமல் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது.

சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியே கூட்டங்களிலும் அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த சூழலில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சுந்தர்ராஜன் (மதுரை மத்திய தொகுதி), கே.தமிழ் அழகன் (திட்டக்குடி) கடந்த 26-ந் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்துப் பேசினார்கள்.

தங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக முதல்-அமைச்சரை சந்தித்தோம் என்று இருவருமே சொல்லிவைத்தாற்போல் கூறினார்கள்.

இந்த பரபரபரப்பு அடங்குவதற்குள் மறுநாள் அதாவது 27-ந் தேதி மேலும் 2 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இதேபோன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச்செயலகத்தில் சந்தித்தார்கள்.

எஸ்.மைக்கேல் ராயப்பன் (ராதாபுரம்) நடிகர் அருண்பாண்டியன் (பேராவூரணி) என்ற அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் முதலில் சந்தித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கூறியதைப் போன்றே தொகுதி மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக முதல்-அமைச்சரை சந்தித்ததாக கூறினார்கள். இவர்கள் 4 பேர்களையும் தொடர்ந்து மேலும் சில தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் இதேபோன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கிடையே, மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பக்ரீத் திருநாள் நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ``தே.மு.தி.க.வில் இருந்து யாரும் அ.தி.மு.க.வுக்கு செல்லவில்லை. சந்திப்பு என்பது முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்துகிற நாடகம். அவர் ஆரம்பித்த அந்த நாடகத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவேன்'' என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை வைரவிழா வளைவு அடிக்கல் நாட்டுவிழாவில் மேற்கண்ட 4 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விழாவில் அவர்களுக்கு முதல்வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

அதுமட்டுமல்லாமல் நேற்று கூடிய சட்டசபை கூட்டத்திலும் நான்கு பேர்களுக்கும் ஒரேவரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த தே.மு.தி.க. கொறடா வி.சி.சந்திரகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சியைச் சேர்ந்த சேர்ந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சாந்தி ராஜமாணிக்கம், மைலாடுதுறை எம்.எல்.ஏ. ஆர்.அருள்செல்வன், திருச்சி திருவெறும்பூர் எம்.எல்.ஏ. எஸ்.செந்தில்குமார், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அனகை டி.முருகேசன் ஆகியோர் தொகுதி மக்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்காக எங்கள் தலைவர் விஜயகாந்த் தலைமையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் பெற்றுத்தருமாறு சபாநாயகரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.

எங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்பட 5 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு முதல்-அமைச்சர் நேரம் ஒதுக்கித்தருவார் என்றும் அதற்கு சபாநாயகர் ஆவண செய்வார் என்றும் நம்புகிறோம். இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தொகுதி மக்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்கான சந்திப்பு ஆகும்.

இவ்வாறு தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் கூறினார்.

இதற்கு முன்பு உங்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்துப் பேசி இருக்கிறார்களே. அந்த சந்திப்புக்கும் இந்த சந்திப்புக்கும் என்ன வித்தியாசம்? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்குப் பதில் அளித்த சந்திரகுமார், ``அது முடிந்துபோன விஷயம், அதுகுறித்து கருத்துச்சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு வீட்டில் குடியிருக்கிறோம். அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் காலிசெய்யும்போது, பொருட்களை ஒப்படைத்துவிட்டுத்தானே போவோம். எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டா செல்வோம்? பிடுங்கிக்கொண்டு போவது எப்படி சரியாகும்? இது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி'' என்றார்.
[vuukle-powerbar-top]

Recent Post