Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சர்ச்சையில் சிக்கினார் மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா

ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சல்மான் குர்ஷித் மீதான 71 லட்ச ரூபாய் புகார் என்பது பெரிய தொகையே அல்ல என்று பேனி பிரசாத் வர்மா தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பேசிய அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் ஹுசைன், தனது அமைச்சரவைப் பணிகளை கவனிக்காமல், இது போன்ற தேவையற்ற கருத்துகளை பேனி பிரசாத் வர்மா தெரிவித்து வருவதாகக் கூறினார்.

குர்ஷித்துக்கு எதிராக போராட்டம் : மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதாகக் கூறி மத்திய சமூக நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து தமக்குச் சொந்தமான அறக்கட்டளைக்கு 71 லட்ச ரூபாய் வாங்கி, மோசடி செய்துவிட்டார் என்பது மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மீதான புகார். ஊழல் கறைபடிந்த சல்மான் குர்ஷித் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாற்றுத் திறனாளிகளுடன் அர்விந்த் கெஜ்ரிவால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு சரியான நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் ஜந்தர் மந்தரில் இருந்து சல்மான் குர்ஷித்தின் சொந்த தொகுதியான ஃபரூக்காபாத்துக்கு மாற்றப்படும். அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அந்த தொகுதியில் கிராமந்தோறும் வீடுவீடாகச் சென்று சல்மான் குர்ஷித்தையும், அவர் சார்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் அடுத்த பொதுத் தேர்தலில் தோற்கடிக்குமாறு பிரச்சாரம் செய்வோம் என சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை மக்களுக்கு அளித்த அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவாளர்கள், அதில் தொடர்பு கொண்டு மத்திய அமைச்சரவையில் இருந்து சல்மான் குர்ஷித்தை நீக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், சல்மான் குர்ஷித்தை அமைச்சரவையில் நீக்க முடியாது என்று உறுதியாக கூறிவிட்ட காங்கிரஸ், புகார்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று தினந்தோறும் குரைப்பதை விட்டு, சிங்கம் போன்று எப்போதாவது ஒருமுறை கர்ஜித்தால் மட்டுமே மதிப்பை தக்க வைக்க முடியும் என்று அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் பேனிபிரசாத் வர்மா யோசனை கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஊழல் புகார்களை முதன் முதலில் வெளியிட்ட ஆஜ்தக் செய்தித் தொலைக்காட்சி மீது சல்மான் குர்ஷித் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரத்தில், ஊழலை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டிய ஊடகங்களுக்கு பாரதிய ஜனதா புகழாரம் சூட்டியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post