Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் மழை நீடிக்கும் ~ இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாகப் பெய்து வரும் தொடர் மழையால், பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நந்தகோபாலபுரத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்தன.

தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கரூரில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. கரூர் நகரப் பகுதியில் அதிகபட்சமாக 12 புள்ளி ஆறு பூஜ்ஜியம் சென்டி மீட்டர் மழை பதிவானது.

இதனிடையே சென்னையில் நேற்று மதியம் முதல் விட்டிருந்த மழை, இரவில் மீண்டும் பெய்யத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் மழையால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post