Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நீலம் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி முழு வீச்சில் செயற்பாடு

நீலம் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி முழு வீச்சில் தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 400 இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்ற 60க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.

மேலும், புயலினால் கடலோரப்பகுதியில் குடிசைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களை தங்க வைக்க 218 மாநகராட்சி பள்ளிகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. அங்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்படுவோருக்கு உணவளிக்கும் விதமாக சென்னை மாநகரில் நான்கு இடங்களில் பிரமாண்ட உணவு தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்து, அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் காக்கும் விதமாக மின்சார வாரியத்துடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், மழை நீர் குடியிருப்பு பகுதிகளைச் சூழும் போது அப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் விதமாக மீன்வளத்துறை சார்பில் படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இரவு ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்களை உடனடியாக மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக 1913 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post