Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கர்நாடகாவில் நீடிக்கும் போராட்டம் ~ வாகன போக்குவரத்து தடை

காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் நிலவும் பதற்றம் காரணமாக, தமிழக – கர்நாடக எல்லையில் தொடர்ந்து வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வரும் வாகனங்களுக்கு அந்த மாநில காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

இதனால், கர்நாடக – தமிழக எல்லையில் அமைந்துள்ள ஒசூர், சத்தியமங்கலம், கக்கநல்லா ஆகிய பகுதிகளில் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து கர்நாடகா செல்லும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் பண்ணாரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் இருந்து மைசூர், பெங்களூரு செல்லும் வாகனங்கள் கக்கநல்லா சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழக மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

மைசூரில் இருந்து வரக்கூடிய காய்கறி லாரிகள், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், காய்கறி விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்வதால், போக்குவரத்து பாதிப்பு எப்போது தீரும் என்று மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post