Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தின் சுங்கச் சாவடியும் ஹிந்தி மற்றும் ஹிந்தியர்களின் ஆதிக்கமும்!




தமிழகத்தின் சுங்கச் சாவடியும்  ஹிந்தி மற்றும் ஹிந்தியர்களின் ஆதிக்கமும் ! 

சென்னையை விட்டு வெளியே வாகனத்தில் பயணிக்க வேண்டுமெனில் தேசிய நெடுஞ்சாலையின் வழியே தான் பயணம் மேற்கொள்ளவேண்டும். சென்னையை சுற்றியுள்ள தேசிய நெடுஞ்சாலைகள்  தான் சென்னையில் இருந்து தென் தமிழகத்தை இணைக்கிறது, கர்நாடக , ஆந்திர மாநிலத்தையும்  இணைக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது . மக்கள் அவர்கள் விருப்பம் போல எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம் . 

ஆனால் நிலைமை இப்போது அவ்விதம் இல்லை. 30 ல் இருந்து 70  கிலோ மீட்டருக்குள் ஒரு சுங்கச் சாவடியை இந்த  நெடுஞ்சாலைகளில் பார்க்கலாம்.  25 முதல் 75 ரூபாய் வரை இந்த சுங்கச் சாவடியில் வாகனங்களிடம்  வசூலிக்கப்படுகிறது. பொது மக்களிடம் பணம்  வசூலிக்கப்படும் காரணம், அரசு சாலைகளை தரமாக சீரமைத்து கொடுத்துள்ளதாம் . ஆதலால் சாலைகளை சீரமைக்கும்  தொகையை  மக்களிடம் வாங்குகிறதாம். சாலைகள் சீரமைக்கப் பட்டபின்பு , அங்கு ஒரு சுங்கச் சாவடியை நிறுவி மக்களிடம் தினமும் காசு வாங்குகிறது . 

சென்னையில் இருந்து விழுப்புரம் போவதற்குள் நான்கு சுங்கச் சாவடிகளை கடந்து  போக வேண்டும். நான்கிலும் நாம் பணம் கட்ட வேண்டும்.  இப்படி வாகனங்களை நிறுத்தி கட்டணம் வசூலிக்கும் அரசு , திட்டதிட்ட ஒரு பகல்  கொள்ளையாகவே இதை நடத்துகிறது . நாம் சாலை வரி கட்டிய பின்பு , எரிபொருளுக்கு மாநில , மத்திய வரிகளை கட்டிய பிறகு எதற்காக சாலைகளுக்கு கட்டணம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அரசு பல வழிகளில் மக்களிடம் வரி வசூலிக்கிறது. இவ்வளவு வசூலித்தும் இந்த அரசால் நமக்கு இலவசமாக ஏன் சாலை அமைத்து தர முடியாது ? மக்களிடம் வாங்கும் வரி பணத்தை ஏன் சாலைகளுக்கு பயன்படுத்த முடியாது? 

இன்னும் சில ஆண்டுகளில் இந்த சுங்கச் சாவடிகள் புற்றீசல் போல் பெருகி விடும். பொதுமக்கள் சாலை வேண்டும் என அரசிடம் கேட்டால் , உடனே சாலை அமைத்துக் கொடுத்து பின்பு தனியாரிடம் சுங்கம் வசூலிக்க ஒப்படைத்து விடும் அரசு. இப்படியே போனால் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே சுங்கத் தொகை கொடுத்து தான் பயணிக்க வேண்டி வரும். 

இந்த சுங்கச் சாவடியை நிர்வாகம் செய்யும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைத்து உள்ளது அரசு. இந்த தனியார் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துவது தமிழே தெரியாத ஹிந்தியர்களைத் தான். நாம் இவர்களிடம் தான் பணத்தை கட்ட வேண்டும். இவர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்டால் , இவர்கள் ஹிந்தியில் தான் பதில் சொல்கிறார்கள் . 

நாம் ஒரு முறை பயணம் செய்த  போது , இவர்களிடம் உங்களுக்கு தமிழ் தெரியாதா என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் நம்மை அதிர்சிக்குள்ளாகியது. அவர்கள் சொன்னது ,' ஏன் உங்களுக்கு ஹிந்தி தெரியாதா, ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்றனர்'. மேலும் ஹிந்தியில் நம்மிடம் உரையாடினர்.  நாம் சொன்னோம் இந்தியாவிற்கு தேசிய மொழி என்பது இல்லை , தமிழ் நாட்டில் நீங்கள் தமிழில் தான் பேசவேண்டும் , தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்றதும் , அவர்களுக்கு கோபம் வந்து நம்மை திட்டத் தொடங்கினர். நாம் திருப்பி திட்டவே , அவர்கள் நம்மை அங்கிருந்து கிளப்புவதற்கு சைகை காட்டினர்.   

தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் இவர்கள்  தமிழ் கற்றுக் கொள்ள மாட்டார்களாம், ஆனால் தமிழ்நாட்டின் குடிமக்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளவேண்டுமாம் . என்ன நியாயம் இது ? ஒரு கடைமட்ட ஹிந்தி ஊழியர்களுக்கு இவ்வளவு இந்தி வெறி இருக்கும் என்றால் , ஹிந்திய அதிகாரிகள் , அரசியல் வாதிகளுக்கு எவ்வளவு ஹிந்தி வெறி இருக்கும் என சிந்தித்து பார்க்க வேண்டும். இதனால் தான் ஹிந்திய ஆட்சியாளர்கள் , ஹிந்தி மொழியை ஹிந்தி பேசாத பிற மாநில மக்களிடம் பல வகைகளில் திணிக்க முயல்கின்றனர். 

ஹிந்தி மக்களை இங்கு தமிழ்நாட்டில் ஏன் வேலைக்கு அமர்த்த வேண்டும் ? தமிழ் நாட்டு  மக்களிடம் பணம் வசூலிப்பவர்கள்  தமிழர்களாக தான் இருத்தல் வேண்டும் . அப்போது தான் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. தமிழர்கள் வடநாடு சென்றால் அங்குள்ள சுங்கச் சாவடியில் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களை அந்த மாநிலத்தில் வேலைக்கு அமர்த்தப் படுவது இல்லை.  அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழ் தெரியாதவர்களை இந்த  வேலைக்கு வைக்க வேண்டும்? இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.  பல நேரங்களில் வாய்த்தகராறு முற்றி, கைகலப்பு கூட இந்த சுங்கச் சாவடிகளில்  ஏற்படுகின்றது. சாலையில் சிலநேரம் மறியல் போராட்டம் கூட நடக்கிறது.

இதை தவிப்பதற்கு தமிழக அரசு உடனே ஆவன செய்தல் வேண்டும் . தமிழ் பேசத் தெரிந்தவர்களைத் தான் இதுபோன்ற பணியில் அமர்த்த வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்க வேண்டும். பேருந்துகளில் தமிழ் பேசும் நடத்துனர் தானே வேலைக்கு அமர்த்துகிறது தமிழக அரசு?  அதே போலத் தான் இந்த சுங்கச் சாவடிகளில் தமிழ் மக்களியே வேலைக்கு அமர்த்த வேண்டும். 

தொடரும் ஹிந்தியின் ஆதிக்கம். 

இந்த தேசிய நெடுஞ்சாலையில் வழியெங்கும் இந்தியை திணித்து உள்ளது அரசு . எல்லா திசைப்  பலகைகள், மைல் கற்கள்  , ஊர் பெயர் பலகைகளில் இந்தியை  எழுதி வைத்து உள்ளது நெடுஞ்சாலைத் துறை. வடநாட்டில் தமிழர்கள் பயணம் செய்தால் அங்கு தமிழ் மக்களுக்கு தமிழில் பெயர் பலகைகளை பார்க்க இயலுமா ? ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் ஹிந்தி பெயர் பலகைகள் ? ஹிந்தியர்களுக்கு மட்டும் ஏன் இப்படி வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இந்திய அரசு ? இந்த படத்தில் உள்ள சுங்கச் சாவடி விக்கிரவாண்டியில் உள்ளது. இந்த சாவடியின் மேலுள்ள பலகையை பாருங்கள், அதில் தமிழே இல்லை . ஆங்கிலம் மட்டும் தான் உள்ளது. இதுவே வடநாட்டில் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்தியிலும்  பலகை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் நாட்டில் மட்டும் ஏன் தமிழில் பலகை வைக்கும் முறையை கடைப் பிடிப்பதில்லை ?  

நாம் வாங்கும் மருந்து , சலவை தூள், பற்பசை , தின் பண்டங்கள் ,இனிப்பு முதற்கொண்டு எல்லா பொருட்களிலும் ஹிந்தியை மட்டுமே முதன்மை படுத்தி எழுதுகின்றன இந்திய நிறுவனங்கள். சேவை நிறுவனங்களும் அவ்வாறே இந்தியை முன்னிருத்தியே செயல்படுகிறது . இது ஹிந்தி ஆதிக்க மனோ பாவத்தையே காட்டுகிறது. கோடிக்கணக்கான மக்களின் ஹிந்தி அல்லாத தாய் மொழிகளை மதிக்காமல் ,  ஹிந்திக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது ஜனநாயகத்திற்கு முற்றுலும் விரோதமான செயல். ஏனோ தெரியவில்லை இந்தியாவில் வாழும் பல கோடி மக்கள் இதை உணராமல் இதற்காக போராடாமல் உள்ளனர். இதனால் இவர்களது தாய் மொழி இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போகும் என்பது இவர்களுக்கு தெரியவில்லை . 

[vuukle-powerbar-top]

Recent Post