Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

துண்டு பிரச்சாரத்தால் தமிழக மக்களின் துண்டு அவிழ்க்கப்படுகிறதா?

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் தேர்தலில் போட்டி போடும் கட்சிகள் தாங்கள் செய்யப்போகும் சாதனைகளை துண்டு பிரச்சாரத்தில் அச்சிட்டு வீடு வீடாகச் சென்று கொடுப்பது வழக்கம்.துண்டு பிரச்சாரத்தோடு சில காந்தி நோட்டு பிரச்சாரங்களும் நடக்கும் அது வேறு. 

ஆனால்,கடந்த சில நாட்களாக தமிழகத்தில் துண்டு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.அதற்க்குள் தேர்தலா என்று நினைத்து விடவேண்டாம் இது வேறு.தமிழகத்தின் பெரும்பான்மைக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் தான் இதில் ஈடுபட்டுள்ளன.அதுவும் போட்டிக்கு போட்டி பிரச்சாரமாக கருப்பு பச்சை வண்ணங்களாக நடைபெற்று வருகிறது. 

கருப்பு பச்சை என்றவுடன் சாதியை ஒழிக்க பெரியார் நடத்திய போராட்டம் மற்றும் இந்தியாவில் பசுமைப் புரட்ச்சியை ஆரம்பித்த முனைவர் சுவாமிநாதன் நடத்திய போரட்டம் போல இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.இந்த கருப்பு பச்சை போராட்டம் என்பது தி.மு.க கருப்பு உடையை அணிந்தும் அதற்கு பதிலடி கொடுக்க அ.தி.மு.க பச்சை உடையை அணிந்தும் நடத்திய போராட்டம். 

எதற்கு இந்த போராட்டம்,தி.மு.க மின்வெட்டு,சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் தி.மு.க மீது போடப்பட்ட வழக்குகளை எதிர்த்து கருப்பு உடையை அணிந்து துண்டு பிரச்சாரம் செய்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க இதுவரை தான் செய்த சாதனைகள் மற்றும் மின்வெட்டிற்கு காரணம் முன்னர் ஆட்சி செய்த தி.மு.க தான் என்று பச்சை உடையை உடுத்தி துண்டு பிரச்சாரம் செய்தது.தமிழகம் போட்டி அரசியலுக்கு பெயர் போனது என்று மீண்டும் மீண்டும் நிரூபனம் ஆகிறது. 

ஆனால், இந்த துண்டு பிரச்சாரத்திற்கு மத்தியில் தன் துண்டு அவிழ்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளார்கள் தமிழக மக்கள்.தமிழ்நாட்டில் ஆடையே இல்லாமல் இருக்கும் மக்கள் குறிப்பாக வயது வந்த பெண்கள் தன் அங்கங்களை மறைக்க கிழிசல் ஆடைகளுடன் இருக்கும் போது இந்த போட்டி அரசியல் தேவைதானா?.மக்களுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விட்டு விட்டு போட்டி அரசியலில் ஈடுபடும் வரை தமிழக மக்களுக்கு என்றும் விடிவு வரப்போவதில்லை.


ஆனால் என்ன தான் நடந்தாலும் அரசியலுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று மக்களும் எதையும் கண்டுகொள்வதில்லை. ஆனால் மக்களுக்கு தெரிவதில்லை நம்மை வைத்து ஒருவன் அரசியல் செய்து கொண்டு இருக்கிறான் என்று.மக்கள் கேள்வி கேக்காத வரையில் ஒவ்வொரு அரசியல்வாதியும் நம்மை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறான்.
[vuukle-powerbar-top]

Recent Post