Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி பிரச்னை எதிரொலி ~ கர்நாடகாவில் போராட்டம்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களால், தமிழகத்தில் இருந்து அம்மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், லாரிகள், இரு மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கிருஷ்ணராஜ சாகர் அணைப் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை கர்நாடக அரசு நீட்டித்துள்ளது. அணைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு : உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஆற்றில் கர்நாடக அரசு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளும், இயக்கங்களும் அம்மாநிலத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகளை, பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்குமாறு கர்நாடக காவல்துறை தமிழகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து பேருந்துகள் தமிழக கர்நாடக எல்லையான சத்தியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் : தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மற்றும் பேருந்துகள் கர்நாடகாவுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனினும், கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள், பேருந்துகள் வழக்கம் போல் தமிழகத்திற்கு வந்து செல்கின்றன. கர்நாடக எல்லைகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 200க்கும் அதிகமான சரக்கு லாரி நிறுவனங்கள், முன்பதிவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கர்நாடக முதலமைச்சர் வேண்டுகோள்: காவிரி விவகாரத்தில், மூன்று நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும் என்பதற்காகவே, தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

மேலும், நிலைமையை உணர்ந்து கர்நாடக மக்களும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
[vuukle-powerbar-top]

Recent Post