Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சட்டசபை வைரவிழா நினைவு வளைவு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் (படங்கள்)

சென்னை தலைமை செயலகம் அருகே ரூ.1 கோடியே 33 லட்சம் செலவில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ள சட்டசபை வைரவிழா நினைவு வளைவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார். கலைநயம் மிக்க தோரண வாயிலின் மாதிரி வடிவமைப்பினையும் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி 1952-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு 60 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ளதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வைரவிழா அடுத்த மாதம் 30-ந் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.

சட்டசபையின் வைரவிழாவையொட்டி மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கும், தலைமை செயலகத்திற்கும் இடையே சட்டசபை வைரவிழா நினைவு வளைவு அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, ரூ.1 கோடியே 33 லட்சம் செலவில் சட்டசபை வைரவிழா நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. தலைமை செயலகம் அருகே நினைவு வளைவு அமையவுள்ள இடத்தில் நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அங்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை 9.25 மணிக்கு வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சபாநாயகர் பி.தனபால், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை அ.தி.மு.க. கொறடா வைகைச் செல்வன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.பி.ராமலிங்கம், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார், சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சட்டசபை வைரவிழா நினைவு வளைவிற்கான அடிக்கல் நாட்டினார். மேலும், கலைநயம்மிக்க தோரண வாயிலின் மாதிரி வடிவமைப்பினையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட உள்ள சட்டசபை வைரவிழா நினைவு வளைவு 80 அடி அகலத்தில், 41 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீன கட்டிடக்கலை நுட்பத் திறனுடன் கட்டப்படுகிறது.

வைரவிழா நினைவு வளைவு, தமிகத்தின் தனி அடையாளமாக திகழ வேண்டும் என்பதற்காக நினைவு வளைவு மாதிரி வடிவமைப்பினை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவு வளைவு கட்டுமானப் பணிகளை குறித்த காலத்திற்குள், சிறப்பாக கட்டி முடிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சுந்தர்ராஜன், கே.தமிழழகன், சி.அருண்பாண்டியன், எஸ்.மைக்கேல் ராயப்பன் ஆகிய 4 பேரும் வந்தனர். அங்கு வந்து 5-வது வரிசையில் அமர்ந்திருந்த அவர்களுக்கு, முன்வரிசையில் இருக்கை போடப்பட்டது. அதையடுத்து அவர்கள் 4 பேரும் முன்வரிசையில் போய் அமர்ந்தனர். அவர்களும், அ.தி.மு.க. அமைச்சர்களும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.




[vuukle-powerbar-top]

Recent Post