Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரண்டாவது ஈழத்தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்

புகலிடம் கோரியிருந்த இலங்கைத் தமிழர் ஒருவரின் கோரிக்கை அவுஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டு ஒக்ரோபர் 31 அன்று மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். இதற்கான உத்தரவை அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். 

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கை அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்படும் நிலையில் பிரித்தானிய உயர் நீதிமன்றமானது இலங்கையர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ள அதேவேளையில், தற்போது அவுஸ்திரேலியாவானது தனது நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழர் ஒருவரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பத் தீர்மானித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர் தனது புகலிட விண்ணப்பத்தில், தனது சகோதரன் ஒருவர் தமிழ்ப் புலி உறுப்பினராகச் செயற்பட்டிருந்ததாகவும், இலங்கையில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்த நடவடிக்கையில் இவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான படிவத்தில் குறித்த தமிழர் கையெழுத்திட மறுத்துள்ளார். தனது 40வது வயதில் அதாவது பெப்ரவரி 2010ல் இலங்கையிலிருந்து  அவுஸ்திரேலியா வந்தடைந்த குறித்த தமிழரின் பெயர் பாதுகாப்பு நோக்கங் கருதி இங்கு வெளியிடப்படவில்லை

இதேபோன்று கடந்த யூலையில் தயான் அந்தோணி என்ற தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இறுதி நேரத்தில் தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம் என தயான் அந்தோணி ஐக்கிய நாடுகள் சபையிடம் மனு சமர்ப்பித்த போதிலும் இவை எதுவும் கருத்திலெடுக்கப்படாது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

அவுஸ்திரேலியாவானது தன்னால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவோர் தொடர்பாக முழுமையாக ஆராய்ந்த பின்னரே தீர்வெடுப்பதாகவும் இதனால் இவர்கள் எவ்வித சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், 90 பேருடன் பயணித்த மூன்று படகுகள் கொக்கோஸ் தீவின் வடக்குப் பகுதியில் வைத்து இடைமறிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கடல் வழியாக 3000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதே புகலிடக் கோரிக்கையாளர்களின் இலக்காகும்.
[vuukle-powerbar-top]

Recent Post