Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இயற்கை எழில் பொங்கும் ஏலகிரி மலைத்தொடர் - ஒரு சுற்றுலா அனுபவம் (படங்கள்)

இயற்கை எழில் பொங்கும் ஏலகிரி மலைத்தொடர் - ஒரு சுற்றுலா அனுபவம் 

சென்னையில் இருந்து சுமார் 225 கிமீ தொலைவில் உள்ளது ஏலகிரி மலைத்தொடர்.  இது கடல்  மட்டத்தில் இருந்து 1040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறிய மலை சுற்றுலாத் தளம். 

நாங்கள்  இரு குடும்பமாக சென்னையில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக மகிழுந்தில் பயணம் செய்தோம் . மதியம் 12 மணிக்கு தொடங்கியது எங்கள் பயணம்.  மகிழுந்தில் நாம் போகும் வேகத்தை பொறுத்து  மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில்  ஏலகிரி மலையை அடைந்து விடலாம் . தேசய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி வரை சென்று அங்கிருந்து திருபத்தூருக்கு பிரிகிறது ஒரு மாநில நெடுஞ்சாலை . அந்த சாலை வழியாக தான் ஏலகிரி மழைத் தொடருக்கு செல்ல முடியும். மலையின் மேல் பத்து கி மீ தொலைவு நல்ல சாலை வசதி உண்டு . 15 கொண்டை  ஊசி வளைவுகளும் உண்டு. இதில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் , ஒவ்வொரு வளைவிற்கும் ஒரு தமிழுக்கு தொண்டாற்றிய  தலைவரின் பெயர் வைக்கப் பட்டுள்ளது. பாரதியார் வளைவு, ஒவ்வையார் வளைவு , அதியமான் வளைவு போன்ற பெயர்கள் இந்த வளைவிற்கு சூடப்பட்டுள்ளது . இதை காணும்போது  தமிழ் உணர்வாளர்களுக்கு  நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் என்பதில் ஐயம் மில்லை . 

அரை மணி நேரத்தில் மலையின் மேல் உள்ள சிறிய ஊரான அத்தனாவூரை சென்று அடைந்தோம். இங்கு பல விடுதிகள் உண்டு. விடுதிகள் சராசரியாக 1000 முதல் 3000 வரை ஒரு இரவுக்கு வாடகையாக வாங்குகிறார்கள் . நம் வசதிக்கு ஏற்றாற்  போல் விடுதியை தேர்வு செய்து  கொள்ளலாம். இந்த விடுதியில் உணவகமும் உள்ளது . நல்ல உணவகங்கள் வெளியில் இல்லாத காரணத்தால் உணவகத்தோடு  கூடிய விடுதி கிடைத்தால் நல்லது . அதை அறிந்த பிறகு விடுதி அறையை பதிவு செய்வது நலம் . பெரும்பாலும் சனி  ஞாயிறு போன்ற  வார இறுதியில் விடுதி கிடைப்பது கடினம் . அதனால் முன் பதிவு செய்து கொள்ளவும் . 

முதல் நாளில்  மாலை நேரத்தில் விடுதியின் அருகாமையில் இயற்கை  பூங்கா என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவிற்கு சென்றோம் . இது அரசு நிலாமக இருந்தாலும் தனியார் நிறுவனத்தால் நடத்தப் படுகிறது. நிறைய வெளி மாநில சுற்று பயணிகள்  இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர் . பெங்களூர் சிறுது தொலைவில் உள்ளதால் நிறைய கன்னடர்கள் இங்கு வருகின்றனர் . வடநாட்டை சேர்ந்த \ஹிந்தி பேசும் மக்களும் இங்கு வருகை தருகின்றனர் . அதனால் தான் என்னவோ , அங்கு உள்ள இசை நீரூற்று நிகழ்ச்சியின் போது  ஹிந்தி பாடலை ஒலிபரப்பினர் . இதை கேட்ட நாங்கள் சற்று வருத்தம் அடைத்தோம் . உடனே இந்த பூங்காவின்  ஊழியரை சந்தித்து ஏன் ஹிந்தி பாடலை  போடுகிறீர்கள் தமிழ் பாடல் அல்லவா இங்கு ஒலிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம் . உடனே அந்த நிறுவன ஊழியர் , இங்கு ஹிந்தி பயணிகள் அதிகம் அவருகின்றனர் அதனால் நாங்கள் அப்படி போட  வேண்டும் என்று தான் எங்களுக்கு ஆணை என்றார் . இருப்பினும் , நீங்கள் மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொண்டு புகார் கொடுங்கள் என்றார் . பின்பு அப்படியே செய்கிறோம் என்று அங்கிருந்து புறப்பட்டோம். 

அடுத்த மலை ஏறும் பயணத்தை செய்ய தீர்மானித்தோம். சாமி மலை என்பது தான் ஏலகிரி மலையிலேயே உயரமான மலை உச்சி .சுமார்  4000 அடி உயரத்தில் அமைத்துள்ளது இந்த இந்த மலை உச்சி. இதன் அடிவாரம் இருக்கும் கிராமத்தின் பெயர் மங்களம் . இங்கு நமது மகிழுந்தை நிறுத்தி விட்டு மலையின் உச்சியை ஏற புறப்பட்டோம் . போகும் பாதை எங்கும் இயற்கையின் எழில் கொஞ்சும் காட்சிகள்  தான்.  மறக்காமல் தண்ணீர் எடுத்துச் செல்லவும் . போதுமான தின்பண்டங்களும் எடுத்துச் செல்லலாம் . காரணம்  பசித்தால் உணவு எங்கும் கிடைக்காது . போகும் வழியில் உள்ள இயற்கை காட்சிகள் , பட்டாம் பூச்சிகள் , அரியவகை வண்டுகள், தாவரங்கள் , இந்த வழியில் நீங்கள் காணலாம் . 

தயவு செய்து பாதையில் நெகிழிப் பைகள் மற்றும் தண்ணீர்  குடுவைகளை போடாதீர் . சுற்றுப் புறச் சூழலை கருத்தில் கொண்டு குப்பைகளை உங்களோடு எடுத்து வந்து விடுங்கள் . மழைப் பாதையை தூய்மையாக  வைத்திருக்க உதவவும் . இந்த நீண்ட மலை பாதையின்  இரு மருங்கிலும்  நிறைய நெகிழிக் குடுவைகளை பார்க்கலாம் . இது மக்களின் இயற்கையின் மீதுள்ள அலட்சியத்தை தான் காட்டுகிறது. 

மலையின் உச்சியை அடைய சுமார் 2 அல்லது மூன்று மணி நேரம் பிடிக்கலாம். முடிவில் நாங்கள் மலையின் உச்சியை அடைந்தோம் . உச்சியில்  ஒரு சிறிய சிவன் கோவில் உள்ளது . இந்த கோவிலை அங்குள்ள மலைவாசி ஒருவரே கவனித்துக் கொள்கிறார் . பார்பன அர்ச்சகர்கள்  யாரும் இல்லை . (இவ்வளவு  உயரத்தில் யார் நடந்து  வந்து கோவிலை தினமும் பராமரிப்பது ?)   

இந்த மலையின்  உச்சியில் ஒரு பெரும் பாறை உள்ளது . இந்த பாறையின் மேல் ஏற கம்பி  ஏணி  ஒன்றும் உள்ளது . கொஞ்சம் கவனமாக ஏற வேண்டும் . மேலே ஏறிப் பார்த்தால்  ஏலகிரியின் ஒட்டுமொத்த  அழகையும் பார்க்கலாம். இயற்கையை ரசிக்கும் எவரும் இந்த காட்சியில் தன்னையே மறப்பர் . அந்த அளவிற்கு அழகு . கொஞ்சம் நேரம் இதற்கு ஒதுக்கவும். 

பின்பு அங்கிருந்து மெல்ல கீழே  இறங்கத் தொடங்கினோம். வரும் வழியில்  கண மழை  அடிக்கத் தொடங்கியது . வானம் இருட்டத் தொடங்கியது . நேரமும் மதியம் 3 மணி  . அதனால் வேறு இன்றி எங்கும் நிற்காமல் நனைந்த  படி  கீழே இறங்கி  வரத் தொடங்கினோம்  . ஒரு மணிநேர பயணம் இது . ஒரு பக்கம் மழை , இன்னொரு பக்க கடும் குளிர் மற்றும் பனி. பனி எங்களை சூழ்ந்து கொண்டது . பக்கத்தில் இருக்கும் நபரையே பார்க்க முடியவில்லை . இருந்தாலும் இது ஒரு அற்புத அனுபவம் தான் . 

விடுதியில் வந்து சேர்ந்த பிறகு தான் உணவு . உணவு முடிந்தவுடன் நல்ல உறக்கம் . 

அடுத்த நாள் ஏலகிரி ஏரியில் அருமையான படகுப் பயணம் . அருகிலேயே சிறுவர் பூங்கா . சிறுவர்கள் நிச்சயம் இங்கு கொண்டாடி மகிழ்வார்கள். இதை தவிர அங்கு பார்க்கவேண்டிய இடங்கள் , ஒரு முருகன் கோவில், மற்றும் சில இயற்கையான இடங்கள் . இது ஒரு சிறிய சுற்றுலாத் தளம் தான் . இங்கிருந்து சுமார் 30 கி மீ  தூரத்தில் ஜலகம்பாறை என்ற நீர்வீழ்ச்சி  உள்ளது . ஆனால் இம்முறை அங்கு தண்ணீர் இல்லை . இந்த நீர்வீழ்ச்சியின் அருகே இருந்து மலை ஏறினால் ஏலகிரி மழையின் மேல் உள்ள நகரத்தை அடையலாம். பல மலைஏறும் குழுவினர் இங்கு வருகின்றனர் . நாமும்  சிறிது தூரம் வரை மலைஏறி மேலுள்ள நீர் நிலையில் குளித்தோம்.  இங்கு செல்வதற்கு முன்னால்  , இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர்  உள்ளதா என்று கேட்டு விட்டு  செல்லவும். இந்த ஊருக்கு செல்லும் வழியெலாம் நல்ல பசுமையான வயல் வெளிகள் உள்ள கிராமங்கள்  தான் . ரசிக்கும்படி உள்ளது.   இந்த இடத்தில இருந்து புறப்பட்டு பின்பு சென்னையை நோக்கி நகர்ந்தோம் இனிய நினைவுகளுடன் பிரியாவிடை கொடுத்தோம் இந்த இன்பச் சுற்றுலாவிற்கு. 

சென்னையில் உள்ளவர்கள் நிச்சயம் இந்த இடத்தை சென்று பார்வை இடவேண்டும் . நாம் அங்கு செல்வது அந்த ஊரில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வருமானம் ஈட்டித் தரும். அவர்கள் அங்கு விற்கும் பழங்கள் மற்றும் பொருட்களை வாங்கி அவர்களுக்கு நன்மை செய்யலாம். மொத்தத்தில் இது ஒரு சிறந்த எளிய சுற்றுலா அனுபவம் தான்.  

கட்டுரை எழுதியவர் : இராஜ்குமார் பழனிசாமி 
    [vuukle-powerbar-top]

Recent Post