Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆஜர் தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை குறித்த வழக்கு இன்று (11.10.2012) உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் பட்நாயக், நீதியரசர் கோகலே அமர்வில் பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

இதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அசைக்க முடியாத பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்து வைகோ ஒரு மணி பதினைந்து நிமிட நேரம் பேசினார். வைகோ: இன்று மனிதகுலத்தை அச்சுறுத்திக் கொண்டு இருப்பது சுற்றுச்சூழலை நாசமாக்கும் அபாயமாகும். 

காற்று மண்டலத்தை, நிலத்தடி நீரை, பூமியை மாசுபடுத்தி அழிக்கும் நச்சுகளின் தாக்குதலில் இருந்து மனிதகுலத்தைப் பாதுகாப்பதுதான் எழுந்துள்ள அறைகூவல் ஆகும். தாமிர உருட்டு ஆலையை முதலில் குஜராத் மாநிலத்தில் நிறுவ ஸ்டெர்லைட் கம்பெனி முயன்றது. 

சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளையும் என அஞ்சி, குஜராத் மாநில அரசு அனுமதிக்க மறுத்தது. பின்னர் கோவா மாநிலத்தை ஸ்டெர்லைட் கம்பெனி அணுகியது. அந்த அரசும் மறுத்தது. பின்னர் மராட்டிய மாநில அரசின் அனுமதியை எவ்விதத்திலோ பெற்று, 1993 இல் இரத்தினகிரி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிறுவப்பட்டது. 

250 கோடி ரூபாய் செலவில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. அம்மாவட்ட விவசாயிகள், குறிப்பாக அல்போன்சா மாந்தோப்பு விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். 

போராட்டம் பெரும் வன்முறைப் போராட்டமாகியது. உருட்டுக் கம்பிகளுடனும், சம்மட்டிகளுடனும் போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கினர். மக்கள் கிளர்ச்சியின் நியாயத்தை உணர்ந்து மராட்டிய மாநில அரசு, தான் வழங்கிய லைசென்சைத் தானே இரத்து செய்து, மாநிலத்தை விட்டு விரட்டி அடித்தது. 

ஸ்டெர்லைட் கம்பெனி 1994-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அன்றைய தமிழ்நாடு அரசை அணுகி நாசகார நச்சு ஆலையை அமைக்க அனுமதி பெற்றது. தூத்துக்குடியை அடுத்த கடலில் 21 தீவுகள் உள்ளன. இவை தேசிய கடல்பூங்கா ஆகும். 

இத்தகைய சுற்றுச்சூழலில் நுண்ணிய பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது. 

ஆனால், ஸ்டர்லைட் ஆலையில் இருந்து 6 கிலோமீட்டர், 7 கிலோ மீட்டர், 8 கிலோ மீட்டர், 15 கிலோ மீட்டர் தொலைவில் கடல்பூங்காத் தீவுகள் அமைந்துள்ளன. எனவே, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனையை அப்பட்டமாக மீறி ஆலை அமைக்கப்பட்டது. இது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காரணங்களை நீரி நிறுவனம் சுட்டிக் காட்டியதன்பேரில் சென்னை உயர் நீதிமன்றம் 1998-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது. 

நீதிபதி அவர்களே! இந்த உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் இம்மாதிரி பிரச்சினைகளில் நிபுணர்கள் கருத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியும் என்று சொன்னீர்கள். நிபுணர்களின் நிலைமையை நான் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீரி நிறுவனத்தின் இயக்குநராகச் சுற்றுச்சூழல் மேதை பேராசிரியர் கண்ணா இருந்தார். 

1998-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை விவசாய நிலங்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் அழித்துப் போடும்; அப்பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு நேரும் என்று கூறினார். 

பின்னர் நிருபர்களிடம் சொல்கையில், ‘எங்கள் நீரி நிறுவன எல்லைக்குள் எந்தத் தொழில் நிறுவனமும், கம்பெனியும் பேரம் பேச நுழைய முடியாது’ என்றார். பல வெளிநாடுகளிலே இருந்து அவருக்கு வேலைக்கு அழைப்புகள் வந்தன. நான் இந்தியாவில்தான் சேவை செய்வேன் என்று கூறி மறுத்தார். 

தர வேண்டிய பதவி நீட்டிப்பை மத்திய அரசு தரவில்லை. அவர் ஓய்வு பெற்றார். அதற்குப்பின் அதே நீரி நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை கொடுத்தது. 

நீதிபதி பட்நாயக்: ஸ்டெர்லைட் ஆலை எப்பொழுது தொடங்கப்பட்டது? நீங்கள் எப்போது வழக்குப் போட்டீர்கள்? வைகோ: 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் ஆலை தொடங்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டும், 1997-ஆம் ஆண்டும் விவசாயிகளையும், மீனவர்களையும் திரட்டி தொடர்போராட்டங்களை நான் நடத்தினேன். பிரச்சார நடைப்பயணம் சென்றேன். 

பல்லாயிரக்கணக்கானவர்களைத் திரட்டி அறப்போர் நடத்தினேன். நாங்கள் கைது செய்யப்பட்டோம். 1997-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் நாங்கள் அறப்போர் நடத்திய மறுநாள், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், நாங்கள் வன்முறையில் ஈடுபடப் போவதாக ஒரு செய்தியைப் பரப்பியது. அதனால், இனி இங்கு போராட்டம் நடத்தப்போவது இல்லை. 

நீதிமன்றத்தில் போய் போராடுகிறேன் என்று வழக்குத் தொடுத்தேன். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த இரண்டாவது நிபந்தனை யாதெனில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளாகம் அமைக்க வேண்டும் என்பதாகும். 1994-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-இல் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது. 

இதனைக் குறைக்கச் சொல்லி ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. அடுத்த ஏழாவது நாள் ஆகஸ்டு 18-இல் பசுமை வளாகத்தை 250 மீட்டரிலிருந்து, 25 மீட்டராகக் குறைத்தது. 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-இல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேற்கூறிய இரண்டு நிபந்தனைகள் மீறப்பட்டதைச் சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தீர்ப்பு அளித்தது. 

நீதிபதி பட்நாயக்: உணர்ச்சிகளின் அடிப்படையில் நீதிமன்றம் இயங்க முடியாது. இந்தக் காரணங்களுக்கு எல்லாம் ஆலைகளை மூடினால், தொழிற்சாலைகளை எப்படி இயக்குவது? இதுகுறித்து நீங்கள் பதில் தர வேண்டும். வைகோ: விவசாயிகளையும், மீனவர்களையும், எங்கள் மக்களையும் காப்பாற்றுவதற்காகத்தான், இந்த நீதிமன்றத்திற்கு முன்னால் நிற்கிறேன். மனித உயிர்களுக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று, அரசியல் சட்டத்தின் 21-ஆவது பிரிவு சொல்கிறதே, மாட்சிமை தங்கிய நீதிபதிகளே! 

நீங்கள்தானே பாதுகாக்க வேண்டும். நாங்கள் எங்கு போய் முறையிடுவது? நீதிபதி பட்நாயக்: இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் தாருங்கள். வைகோ: என்னுடைய வாதத்தில் 25 சதவிகிதம் தான் நான் வாதிட்டிருக்கிறேன். 

ஆலையை மூடவேண்டும் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை வைத்திருக்கிறேன். நீதிபதி பட்நாயக்: அடுத்த விசாரணையை என்றைக்கு வைத்துக்கொள்ளலாம்? 

வைகோ: எந்தத் தேதியை நீங்கள் அறிவித்தாலும் சரி. வழக்கு விசாரணை அக்டோபர் 16-ஆம் தேதி செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை சார்பில் வழக்கறிஞர் சுந்தரம் முதலில் வாதாடினார். 

நீதிமன்றத்திற்கு வெளியில் நிரூபர்களிடம் வைகோ, “நான் வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தேன். ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை நடப்பதால் பயணத்தை இரத்து செய்துவிட்டேன்” என்றார். 

இந்த விசாரணையின்போது, மறுமலர்ச்சி தி.மு.க. சட்டத்துறை செயலாளர் தேவதாஸ் அவர்களும், துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்களும் உடன் இருந்தனர். 

தாயகம் தலைமைக் கழகம் 
சென்னை - 8 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். 
11.10.2012
[vuukle-powerbar-top]

Recent Post