Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜனாதிபதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் திடீர் சந்திப்பு

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகியதுடன் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றது. அந்த கட்சியை சேர்ந்த ரெயில்வே மந்திரி முகுல்ராய் உள்பட 6 மத்திய மந்திரிகளும் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந்தேதி மத்திய மந்திரிசபையில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது. முகுல்ராய் வகித்து வந்த ரெயில்வே துறை, காங்கிரசை சேர்ந்த தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி சி.பி.ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. 

ஏற்கனவே பல்வேறு காரணங்களால் சில மந்திரிகள் பதவி விலகியதால், அவர்கள் வகித்துவந்த இலாகாக்களை 8 மந்திரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் விலகியதை தொடர்ந்து, புதிய மத்திய மந்திரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. 

காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன்சிங்கும் இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். பாராளுமன்றத்தின் கடந்த மழைக்கால கூட்டத்தொடர், ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் பிரச்சினையில் முழுமையாக முடக்கப்பட்டது. 

இதற்கிடையில், டீசல் விலை உயர்வு, மானிய விலையிலான சமையல் கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற முக்கிய முடிவுகளை மத்திய அரசு அமல்படுத்தியது. 

இந்த நடவடிக்கைக்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அரசின் பொருளாதார சீர்திருத்த முடிவுகளை எதிர்த்து வருகின்றன. 

பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடைபெறலாம் என்றும் ïகங்கள் எழுந்தன. 

கடந்த சில நாட்களாக சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிராகவும், மத்திய சட்டமந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அவருடைய மனைவிக்கு எதிராகவும் மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று காலை திடீரென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். 

1 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அவரை தொடர்ந்து நேற்று மாலையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். 

இருவரும் 40 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். பிரதமர் மன்மோகன்சிங், சோனியா இருவரும் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியதை ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார். ஆனால், இந்த சந்திப்பு விவரம் குறித்து எந்த தகவலையும் வெளியிட அவர் மறுத்து விட்டார். 

ஜனாதிபதியை பிரதமரும், சோனியாவும் திடீரென்று சந்தித்து பேசியது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்வது பற்றி அவர்கள் இருவரும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று, அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துர்கா பூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வருகிற 20-ந்தேதி புறப்பட்டு செல்கிறார். 

அதனால் அதற்கு முன்பாக இன்னும் 2 நாட்களில் மத்திய மந்திரிசபையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post